You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தி.மு.க vs அ.தி.மு.க: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள் என்ன? களம் யாருக்கு சாதகம்? - தமிழக அரசியல்
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ``இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் தி.மு.கவுக்கு சாதகமான முயற்சிகள் அரங்கேற உள்ளன,'' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். உண்மையில் என்ன நடக்கிறது?
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கடந்த 13ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும் 1,577 கிராம ஊராட்சித் தலைவர், 12,255 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் முதல் கட்டமாக அக்டோபர் 6 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 9ஆம் தேதியன்று ஒன்பது மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக பழனிகுமார் தெரிவித்தார்.
நகைக்கடன் தள்ளுபடி - யாருக்கு லாபம்?
இதையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க உள்பட அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, ஆளும்கட்சியாக உள்ள தி.மு.க, அனைத்து இடங்களிலும் 100 சதவிகித வெற்றியை பெறும் அளவுக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கடந்த 5ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாவட்டங்களில் நிலவும் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்காமல் இருப்பது, நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வராமல் இருப்பது போன்றவை மிக முக்கிமான பிரச்னைகளாக உள்ளன. கிராமப்புறங்களை மையமாக வைத்துத் தேர்தல் நடப்பதால் இவற்றை எதிர்க்கட்சியான அ.தி.மு.க பிரதானப்படுத்தி பிரசாரம் செய்யவும் வாய்ப்புள்ளதாக தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் சிலர் தெரிவித்தனர். இதன்பிறகே, திங்கள்கிழமை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தி.மு.கவின் ரகசிய அஜெண்டா
தவிர, உள்ளூரில் சர்ச்சைகளில் சிக்காத செல்வாக்கானவர்களை களமிறக்கவும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லவும் தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. `இந்த ஒன்பது மாவட்டங்களில் பெறக் கூடிய வெற்றிதான், அடுத்து வரக் கூடிய மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களுக்கு முன்னோட்டமாக இருக்கும்' எனவும் தி.மு.க நிர்வாகிகளிடம் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகள் நிறைந்திருப்பதால், `10.5 சதவிகித இடஒதுக்கீடு அரசாணை தங்களுக்குக் கை கொடுக்கும்' எனவும் தி.மு.கவினர் நம்புகின்றனர். அதேநேரம், ஒரே மாவட்டத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதும் தி.மு.கவுக்கு வெற்றி தேடித் தரக்கூடிய விஷயமாக உள்ளதாகவும் விவாதம் கிளம்பியுள்ளது.
இதனை சாடிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `இந்திய வரலாற்றிலும் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டதில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதுதொடர்பாக பேசப்படவில்லை. தேர்தலை எத்தனைக் கட்டங்களாக நடத்துவது என அன்றைக்குப் பேசப்படவே இல்லை. இதனை மறைமுக அஜெண்டாக வைத்து ரகசியமாக அறிவிக்க வைத்துள்ளனர். ஒரு இடத்தில் தேர்தல் முடிந்த பிறகு அடுத்த இடத்துக்கு ஆள்களைக் கூட்டி வந்து கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகரிக்கும்" என்கிறார்.
தி.மு.க, அ.தி.மு.க மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும் தி.மு.க, தனது கூட்டணிக் கட்சிகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் இடங்களைப் பேசி முடிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, 14 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாவட்டத் தலைவரையும் உள்ளடக்கிய பணிக்குழு ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்படுத்தியுள்ளார். இந்தக் குழுவினர் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுடன் பேசி தங்களுக்கான இடங்களைக் கேட்டு பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களை நம்பும் அ.தி.மு.க
அ.தி.மு.க தரப்பிலோ, ஒன்பது மாவட்டங்களுக்கும் நத்தம் விஸ்வநாதன், சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் ராமச்சந்திரன், ராஜலட்சுமி, உள்ளிட்டோரை கூடுதல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிராமப்புறங்களில் அதிகப்படியான வாக்குகளை அ.தி.மு.க பெற்றதால், இந்தமுறையும் பெரும்பாலான இடங்களில் வெல்ல முடியும் என அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
கூடவே, உள்ளூரில் செல்வாக்கான நபர்களைக் கண்டறிந்து வேட்பாளர்களாக நிறுத்துவது, பண விநியோகம் என பல்வேறு விஷயங்களை அ.தி.மு.க தரப்பில் விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு இடப்பங்கீட்டை வழங்குவது தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளிவரவில்லை. குறிப்பாக, `உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணியை தொடர்வது பற்றி பா.ஜ.க தலைமை முடிவு செய்யும்' என தமிழ்நாடு பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளதும் கவனிக்க வைத்துள்ளது.
``அ.தி.மு.கவின் உள்ளாட்சி வியூகம் என்ன?" என அக்கட்சியின் தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஐ.எஸ்.இன்பதுரையிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம், பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை, நீட் தேர்வு தொடர்பான பொய்யான வாக்குறுதி, அதனால் ஏற்பட்ட இரண்டு மரணங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும்" என்கிறார்.
மூன்று சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம்
தொடர்ந்து பேசுகையில், `` தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என தி.மு.க கணக்குப் போடுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம். இவை நகர்ப்புறங்களில் கிடைக்காத வாக்குகளாக உள்ளன. அதேநேரம், கிராமப்புறங்களில் அ.தி.மு.கவுக்கு நல்ல வாக்குகள் கிடைத்தன. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் மூன்று சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம். அந்தவகையில் பார்த்தால் இந்தத் தேர்தல் அ.தி.மு.கவுக்கு சாதகமாக உள்ளது.
மேலும், `நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம்' எனக் கூறிவிட்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தது. நடுத்தர மக்களுக்கு, தங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதனால் தி.மு.கவின் வாக்குறுதி கவர்ச்சிகரமானதாகப் பேசப்பட்டது. ஆனால், அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. இந்த துரோகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. சட்டமன்றத்தில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்காக குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்ற ஸ்டாலின், நீட் தேர்வைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவரிடம் பேசவில்லை. பொருளாதார நெருக்கடி எனக் கூறிவிட்டு கருணாநிதிக்கு மணிமண்டம், மதுரையில் நூலகம் என அமைப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்" என்கிறார்.
100 சதவிகித வெற்றி கிடைக்கும்
`` ஆமாம், தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்தோம். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படிப் பார்த்தால் பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற வாக்குறுதியை பதவிக்கு வந்தவுடன் நிறைவேற்றினோம். அது எந்தளவுக்கு வரப்பிரசாதம் என்பது வறுமையில் வாடும் பெண்களுக்குத்தான் தெரியும். இவர்கள் கஜானாவை காலி செய்துவிட்டுப் போனார்கள்" என்கிறார், தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க எதையும் செய்யாத கோபம் மக்களிடம் இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் கொரோனா தொற்றுடன் போராட வேண்டிய சூழல் அரசுக்கு இருந்தது. நிதி நிலைமை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு அதிக பயனைத் தரும். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகித வெற்றியை நோக்கிப் பயணிக்கிறோம்" என்கிறார்.
தெளிவுபடுத்திய தி.மு.க
``உள்ளாட்சித் தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?" என அக்கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவரும் மாநில துணைத் தலைவருமான ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதன் தலைவராக எங்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் இருப்பார். இந்தக் குழுவினர், தங்களுக்கு சாதகமான வார்டுகளை பெறுவது தொடர்பாக பேசி முடிவு செய்வார்கள். இதில், இறுதி முடிவை கட்சித் தலைவர் அறிவிப்பார்" என்கிறார்.
``எவ்வளவு இடங்கள் என்பதில் தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதா?" என்றோம். ``அதை மாவட்டத் தலைவர்கள் பேசிக் கொள்வார்கள். தி.மு.கவும் இதனை தெளிவுபடுத்திவிட்டது. மாவட்ட அளவில் எதாவது பிரச்னை வந்தால் மாநில அளவில் விவாதிக்கப்படும். இடப்பங்கீட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் மாவட்டங்களிலேயே பேசி முடிக்கப்பட்டுவிடும்" என்கிறார்.
கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள், கரன்ஸி வெள்ளம், புதுப்புது அறிவிப்புகள் என உள்ளாட்சித் தேர்தலை அதகளப்படுத்தும் முயற்சியில் பிரதான கட்சிகள் களமிறங்கிவிட்டன. இதன் பலன் என்னவென்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.
பிற செய்திகள்:
- ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய பொக்கிஷக் கப்பல் - அள்ளப் போவது யார்?
- ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய பொக்கிஷக் கப்பல் - அள்ளப் போவது யார்?
- சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?
- சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள்
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்