You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று: ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள் - உதயநிதிக்கு புதிய பதவி, நகைக்கடன் தள்ளுபடி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 60 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி, இணையத்தள குற்றப் புலனாய்வுக்கு தனி மையம், மெரினா கடற்கரையில் உயிர் காப்புப் பிரிவு ஆகியவை அடங்கும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்றது. மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு கூடிய இந்த கூட்டத்தில், முதலமைச்சரின் துறையான காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ``சென்னையில் மாநில இணையதள குற்றப் புலனாய்வு மையம் அமைக்கப்படும். இதன்மூலம், இணைய வழியில் நடைபெறும் குற்றங்களை புலனாய்வு செய்யும் வகையில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த மையத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களைத் தடுக்கவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்," என்றார்.
தொடர்ந்து பேசுகையில், ``மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்கும் வகையில் மெரினா கடற்கரை உயிர் காப்புப் பிரிவு ஒன்று தொடங்கப்படும். இதற்காக கடலோர பாதுகாப்புக் குழுமம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் இணைந்து செயல்பட ஒப்பந்த அடிப்படையில் 12 மீனவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், சென்னை தெற்கு மற்றும் வடக்குப் பிரிவுகளில் தீவிர குற்றவாளிகள் தடுப்புப் பிரிவு ஒன்றும் 8 கோடியே 42 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும்," என்றார்.
சிறுவர், சிறுமியர் மன்றம்
இதுதவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறார்கள் குறறச் செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கு 38.25 லட்சம் செலவில் சிறுவர், சிறுமியர் மன்றம் ஏற்படுத்தப்பட்டு அவர்களை நல்வழிப்படுத்தி உரிய கல்வி அளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், காவல்துறையின் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவுக்காக 4 கோடியே 25 லட்சம் செலவில் 100 பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
நகைக்கடன் தள்ளுபடி
மேலும், சட்டமன்றத்தின் விதி எண் 110ன்கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்துக்கு 5 சவரனுக்கு உள்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இதன்மூலம் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்தார். இதனமூலம் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவில் நிலங்களை ஆக்ரமித்தால் கைது
தொடர்ந்து, கோவில் நிலங்களை ஆக்ரமிப்பு செய்தால் கைது செய்யும் வகையில் சட்டத் திருத்த முன்வடிவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கல் செய்தார். இதில், கோவில் நிலங்களை ஆக்ரமிப்பு செய்வது என்பது கடுமையான குற்றமாகவும் இதில் கைது செய்யப்படுகிறவர்களால் பிணையில் வர முடியாது எனவும் ஆக்ரமிப்பு செயல்களில் இறங்குகிறவர்களை கைது செய்ய முடியும் என சட்டத் திருத்த முன்வடிவில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சிமன்றக் குழுவில் உதயநிதி
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதன் அலுவல்சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
- ‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’: யோகி ஆதித்யநாத்
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
- ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க தாலிபன்கள் புதிய உத்தரவு
- பட்டேதார் சாதியை சேர்ந்த பூபேந்திர பட்டேல் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்