ஸ்டாலின் அரசியல்: தமிழக சட்டப்பேரவை ஆகுமா ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம்?

பட மூலாதாரம், TN GOVERNMENT
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தொடர்பான விவாதங்கள் களைகட்டத் தொடங்கி விட்டன. `மருத்துவமனைக்காக அந்தக் கட்டடம் கட்டப்படவில்லை. மாநில சுயாட்சி பேசும் ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை இன்னமும் வாடகை கட்டடத்தில் இயங்குவது எந்த வகையில் சரியானது?' எனக் கேள்வி எழுப்புகிறது தி.மு.க. இதனை அ.தி.மு.க எதிர்ப்பது ஏன்?
சென்னை அண்ணாசாலை-வாலாஜா சாலை சந்திப்பில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார் 9,30,000 சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த மருத்துவமனையானது, 2010ஆம் ஆண்டில் புதிய தலைமைச் செயலகத்துக்காக தி.மு.க அரசால் கட்டப்பட்டது.
இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தலைமைச் செயலகம் பழையபடி புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டது. மேலும், புதிய கட்டடத்தை மருத்துவமனையாக 2014ஆம் ஆண்டு மாற்றியது அதிமுக அரசு. இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக குரல் கொடுத்தபோதும் அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை.
400 பக்க அறிக்கை

பட மூலாதாரம், DMK
அதேநேரம், ஓமந்தூரார் வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக குற்றம்சுமத்தியது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டது. அதை எதிர்த்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணை ஆணையத்தை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரு கட்டத்தில், அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் முடிவுகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதோடு அதில் முறைகேடு நடந்ததாகக் கூறி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதில் 5 கோடி ரூபாய் மேலும் வீணடிக்கப்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்தார். நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனுக்களும் வாபஸ் பெறப்பட்டதால், அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

பட மூலாதாரம், DMK
இதன் தொடர்ச்சியாக விசாரணை ஆணையத்தில் இருந்தும் ரகுபதி விலகினார். இது தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகத்துக்கு மாற்றிவிட்டதாக அப்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண் எஸ்.பி ஒருவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும் அவர் விசாரித்து தாக்கல் செய்த 400 பக்க அறிக்கையில் 375 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எங்கள் தொகுதியில் இடம் இருக்கிறது
இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மீண்டும் புதிய தலைமைச் செயலகம் தொடர்பான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. கடந்த 4ஆம் தேதி சட்டமன்றத்தில் இதுதொடர்பாக பேசிய மயிலாப்பூர் தி.மு.க எம்.எல்.ஏ த.வேலு, `வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களை இந்த மாமன்றம் இயற்றியுள்ளது. அப்படிப்பட்ட சட்டமன்றத்தில் இன்று சினிமா செட்டைப் போல அமைத்து அமர்ந்திருக்கிறோம்.
மறைந்த கருணாநிதி எதைச் செய்தாலும் அதில் தொலைநோக்குப் பார்வை இருக்கும். அவர் முதலமைச்சராக இருந்தபோது பார்த்து பார்த்து உருவாக்கிய சட்டமன்றத்தை அவர் அவருக்காக உருவாக்கவில்லை. தமிழினத்தை வழிநடத்துவோர் பயன்படுத்துவதற்காகத்தான் உருவாக்கினார். அங்கே மருத்துவமனை இருக்கிறதே என முதல்வர் யோசிக்க வேண்டாம். எங்கள் தொகுதியில் இடம் இருக்கிறது. கருணாநிதி நினைவாக அவர் கட்டிய அந்த சட்டமன்றம் இயங்க வேண்டும்' என்றார். இதையடுத்து, புதிய தலைமைச் செயலகம் தொடர்பான கோரிக்கைகள் வேகம் பெறத் தொடங்கியுள்ளன.
விஷமத்தனமான சிந்தனையா?

பட மூலாதாரம், DMK
``மருத்துவமனையை இடமாற்றம் செய்துவிட்டு அங்கே சட்டப்பேரவையை கொண்டு வருவது என்பது தவறான நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஓமந்தூரார் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையை மாற்றுவது என்பது விஷமத்தனமான சிந்தனை ஆகும்" என்கிறார் அ.தி.மு.கவின் தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஐ.எஸ்.இன்பதுரை.

பட மூலாதாரம், INBADURAI
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` கொரோனா தொற்றின் இரண்டு அலைகளின்போதும் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு தற்போது 500 பேர் மருத்துவம் பயின்று வருகின்றனர். இதனை மாற்ற முற்படுவதை தவறான நடவடிக்கையாகத்தான் பார்க்கிறோம். கடந்த 2011ஆம் ஆண்டில் புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என ஜெயலலிதா முடிவெடுத்தார். இதனை எதிர்த்து கருணாநிதி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், `கடந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்தததற்காக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை அரசு கைவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தைகள் தற்போதுள்ள தி.மு.க அரசுக்கும் பொருந்தும்" என்கிறார்.
ரோபோடிக்ஸ் சிகிச்சை!

பட மூலாதாரம், DMK
மேலும், ``ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள மருத்துவமனையை கிண்டியில் உள்ள கிங் வளாகத்தில் அமைக்கப் போவதாகச் சொல்கின்றனர். இதற்கு நீண்டகாலம் தேவைப்படும். தற்போது தமிழ்நாட்டில் மருத்துவ அவசர நிலை உள்ளது. ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் கதிரியக்கம், பிளாஸ்டிக் சர்ஜரி என 15 சிறப்பான பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரோபோடிக்ஸ் சிகிச்சைக்கான உபகரணங்களை அமெரிக்காவில் இருந்து தருவிக்க கடந்த அரசு முயற்சி மேற்கொண்டது.
விரைவில் அங்கு உபகரணங்கள் வரவுள்ளன. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ரோபோடிக்ஸ் சிகிச்சை கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில், 250 கோடி ரூபாய் செலவில் கிங் வளாகத்தில் மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இதனால் ஏராளமானோரின் சிகிச்சை தடைபடும். மருத்துவமனையை ஒட்டியுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்" என்கிறார்.
`` தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதலாக அம்மா உணவகத்தில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றுவது, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குவது, கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்குவது எனச் செயல்படுகின்றனர். இதனைப் பார்க்கும்போது வேப்பங்காய்க்கே வெட்கம் வந்துவிடும் போல இருக்கிறது. ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்றும் முடிவை தி.மு.க அரசு மேற்கொண்டால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்" என்கிறார் கொதிப்புடன்.
மருத்துவமனைக்கான வசதிகள் எங்கே?

பட மூலாதாரம், DMK
``தி.மு.க அரசின் செயல்பாட்டில் உள்நோக்கம் உள்ளதாக அ.தி.மு.க கூறுகிறதே?" என தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``ஓமந்தூரார் கட்டடம் மருத்துவ நோக்கத்துக்காக கட்டப்படவில்லை. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் ராணுவத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் வாடகை அடிப்படையில் தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது. அதனால் சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக ராணி மேரிக் கல்லூரி வளாகம் உள்பட சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் ஓமந்தூரார் வளாகம் தேர்வு செய்யப்பட்டது.
இங்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, கட்டடம் எழுப்பப்பட்டது. இதனை செயல்படவிடாமல் மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். அவ்வாறு மாற்றினாலும் அங்கு போதிய வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஸ்டான்லி, ராஜீவ்காந்தி ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள்கூட அங்கு ஏற்படுத்தப்படவில்லை. இந்தக் கட்டடம் பசுமை கட்டடமாக உருவாக்கப்பட்டது. மருத்துவமனைக்காக கட்டப்பட்டு அதனை சட்டமன்றமாக மாற்றியிருந்தால் இவர்கள் கேள்வியெழுப்புவதில் நியாயம் இருக்கும். தி.மு.கவுக்கு இதில் காழ்ப்புணர்ச்சி என்பது இல்லை" என்கிறார்.
தி.மு.கவுக்கு உள்நோக்கமா?
தொடர்ந்து பேசுகையில், ``நூற்றாண்டுகளைக் கடந்த சட்டமன்றம் நீண்ட காலமாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. அங்கு வாகனங்களை நிறுத்த இடப்பற்றாக்குறை, பொதுமக்கள் வந்து செல்வதில் சிரமம் என பல பிரச்னைகள் நிலவுகின்றன. இதன் காரணமாக ஒருமனதாகவே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இப்படியொரு கட்டடம் இருந்தும் கலைவாணர் அரங்கில் சட்டமன்றம் செயல்பட்டது. புதிய சட்டமன்றம் செயல்படுவதை மக்களும் விரும்புகின்னர். இந்த விவகாரத்தில் அ.தி.மு.கவுக்கு உள்நோக்கம் உள்ளது.
இந்தியாவுக்கே மாநில சுயாட்சியை பேசும் சட்டப்பேரவை, இன்னமும் வாடகைக் கட்டடத்தில் இயங்குவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த நோக்கத்துக்காக அந்தக் கட்டடம் எழுப்பப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேற வேண்டும். தனி சட்டப்பேரவை தேவை என்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே கேட்கப்பட்டவைதான். புதிய கட்டடத்தில் வேறு எதாவது கேள்விகள் இருந்தால் அ.தி.மு.கவினர் கேட்கட்டும். இதில் தி.மு.க அரசுக்கு எந்தவித உள்நோக்கங்களும் இல்லை" என்கிறார்.
சட்டப்பேரவையாக மாறுமா?
``ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்றுவது தொடர்பான வாதம் வலுத்துள்ளது சரியா?" என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``சட்டசபை கட்டடத்தை அதிக பொருள் செலவில் கட்டியுள்ளனர். அங்கு சில நூறு கோடிகள் செலவு செய்து மாற்றியுள்ளனர். அதனை மேலும் சட்டசபையாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கும் செலவு செய்ய வேண்டும். தி.மு.க ஆட்சிக்காலத்தில் கட்டிய கட்டடம் என்பதால் உணர்ச்சிபூர்வமாக இதனைப் பார்க்க வேண்டியதில்லை," என்கிறார்.
மேலும், ``பாட புத்தக பையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படம் இருந்ததால், அதனை அகற்றுவதற்கு 13 கோடியை செலவிடுவதற்குப் பதிலாக வேறு எதாவது திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் என அரசியல் முதிர்ச்சியோடு முதலமைச்சர் தெரிவித்தார். புதிய சட்டமன்றம் தொடர்பான கோரிக்கையை எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினாலும் அதற்காக சில நூறு கோடிகள் செலவு செய்து மீண்டும் சட்டசபையாக மாற்றும் முயற்சியை முதலமைச்சர் எடுக்க மாட்டார் என நம்புகிறோம்" என்கிறார்.
பிற செய்திகள்:
- கினியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு: அதிகாரத்தை கைப்பற்றியதாக அறிவித்தது ராணுவம்
- நியூசிலாந்து தாக்குதல்: போலீஸ் சுட்டுக் கொன்ற இலங்கையரின் தாய் பேட்டி
- 'பிராமணர்களுக்கு தடை விதிக்கக் கூறிய சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை மீது வழக்கு
- ஆப்கன்: தாலிபன்களை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பஞ்ஷீர் படை
- டோக்யோ பாராலிம்பிக் முடிந்தது: 19 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 24ஆம் இடம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












