You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டுக்கு புதிய விதிகள்: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய அம்சங்கள்
தமிழக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு கலப்பின மாடுகளை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருது விடுதல் போன்ற போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
நாட்டு மாடுகள் இதற்காக வளர்க்கப்படாததால், அந்த மாடுகளின் இனமே அழிந்துவருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி என். கிருபாகரன் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்), நீதிபதி பி. வேல்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதன் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
- ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போரும் விவசாயிகளும் நாட்டு மாடுகள் வளர்ப்பதை மானியம், ஊக்கத் தொகை போன்றவற்றை அளித்து அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்
- கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது.
- ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுகள் பங்கேற்பதற்கு முன்பாக அந்த மாடுகள் 'நாட்டு மாடுகள்' என்பதை கால்நடை மருத்துவர்கள் உறுதிசெய்ய வேண்டும். எந்த கால்நடை மருத்துவராவது, கலப்பின மாடுகளை 'நாட்டு மாடுகள்' என சான்றளித்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம்.
- மாடுகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பதை முடிந்த அளவு அரசு கைவிட வேண்டும். இது 1960ஆம் ஆண்டின் மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படக்கூடும்.
- ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு என 2017ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டதன் காரணமே, புளியங்குளம், உம்பளச்சேரி, மலைமாடு, காங்கேயம் போன்ற நாட்டு மாட்டு இனங்களைக் காப்பதுதான்.
- வெளிநாட்டு மாடுகளுக்கும் கலப்பின மாடுகளுக்கும் திமில் பெரிதாக இல்லாத காரணத்தால் அவற்றைப் பிடிப்பது கடினமாக இருப்பதாக மனுதாரர் கூறியிருந்தார் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்