இந்தியாவில் மூன்றில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது - ஐசிஎம்ஆர் 'சீரோ' ஆய்வு முடிவுகள்

இந்தியா கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்திய மக்கள் தொகையில் 6 வயதிற்கு மேற்பட்டவர்களில் சுமார் 67 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டிருப்பதாக இந்திய அரசு நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாட்டின் 21 மாநிலங்களில் 36,227 பேரின் உடலில் நடத்தப்பட்ட பரிசோதனையில், மூன்றில் இரண்டு பேரின் உடல்களில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பான்கள் (ஆன்டிபாடி) இருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனினும் 40 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு எதிராக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 3.1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 40,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது இந்தியாவில் சராசரி தினசரி கொரோனா பாதிப்பு 3,80,000 ஆக இருந்தது.

எனினும், கொரோனாவின் புதிய திரிபுகளும் பரவி வரும் நிலையில், மூன்றாம் அலை குறித்து மருத்துவர்களும் வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா

பட மூலாதாரம், Getty Images

"நான்காவது சீரோ (sero) ஆய்வு முடிவுகள் சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும், நாம் கோவிட் கட்டுப்பாடுகளை விடாமல் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்" என ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்,

சீரோ ஆய்வு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் தொகையில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பதை கண்டறிவதற்கான ஆய்வாகும்.

முதல் முறையாக இந்த ஆய்வில் ஆறில் இருந்து 17 வயதுக்கு உட்பட்டவர்கள் இம்முறை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட 7,252 சுகாதாரப் பணியாளர்களில் சுமார் 85 சதவீதம் பேருக்கு ஆன்டிபாடிகள் இருப்பது தெரிய வந்தது.

கடந்த சீரோ ஆய்வில் இந்தியாவில் 21 சதவீதம் பேருக்கு கோவிட் ஆன்டிபாடிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :