You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மின்னல் தாக்கியபோது செல்பி எடுத்த 11 பேர் பலி: செய்யக் கூடாதவை என்னென்ன?
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது.
மழை பெய்து கொண்டிருந்தபோது மிக உயரமான கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்து அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கண்காணிப்புக் கோபுரமானது 12 நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரபலமான சுற்றுலா தலமான அமர் கோட்டையில் உள்ளது.
மின்னல் தாக்கிய நேரத்தில் 27 பேர் அந்த கண்காணிப்புக் கோபுரத்தின் மீது இருந்துள்ளனர். மின்னல் தாக்கியதும் கோபுரத்தில் இருந்து பலர் கீழே குதித்துள்ளனர். அதில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.,
இந்தியாவில் மின்னல் தாக்கி சராசரியாக ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
கண்காணிப்புக் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியதில் இறந்துபோன பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்தப் 11 பேர் தவிர, ஞாயிறன்று மட்டும் ராஜஸ்தானின் வெவ்வேறு பகுதிகளில் மேலும் 9 பேர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இது மழைக்காலம். கனமழை பெய்யும். வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை இது நீடித்திருக்கும்.
1960-களில் இருந்ததை விட இப்போது மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் இரண்டு மடங்காகி விட்டதாக இந்திய வானியல் ஆய்வு மையம் கூறுகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
1990-களைவிட 30 முதல் 40 சதவிகிதம் வரை மின்னல் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2018-ஆம் ஆண்டு தென் மாநிலமான ஆந்திராவில் 13 மணி நேரத்துக்குள்ளாக 36,749 மின்னல் தாக்கிய நிகழ்வுகள் நடந்தன.
குறைந்த அளவு மரங்கள் இருக்கும் பகுதிகளில் மின்னல்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றன.
மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி?
- பெரிய கட்டடங்கள் அல்லது காருக்குள் தஞ்சமடைய வேண்டும்.
- மிகப் பரந்த திறந்த வெளிகள் மற்றும் உயரமான மலைப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்.
- பதுங்கிக் கொள்ள இடம் ஏதும் இல்லையென்றால், கால்களை ஒன்றிணைத்து, குனிந்தபடி முழங்காலைக் கட்டிக்கொண்டு முடிந்தவரை உடலைக் குறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மின்னல் தாக்குதலுக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
- தனியாக இருக்கும் ஒற்றை மரம் அல்லது உயரமான மரத்துக்குக் கீழே நிற்கக் கூடாது.
- நீருக்குள் இருந்தால், உடனடியாகக் கரைக்குத் திரும்பி விட வேண்டும். ஏனென்றால் நீர் இன்னும் தொலைவில் இருந்து மின்னலைக் கடத்தும் திறன் கொண்டது.
- வீட்டுக்குள் இருந்தால் தொலைக்காட்சிக்கான இணைப்புகள், குழாய் இணைப்புகள் போன்றவை மூலம் மின்னல் கடத்தப்படக் கூடும். அவசர தேவையின்றி தொலைபேசிகளையும் திறன்பேசிகளையும் தவிர்க்கலாம்.
- உடலில் நேரடியாக மின்னோட்டம் நுழையும் உலோகங்கள், மற்றும் குடை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
- கடைசி மின்னல் வெளிச்சத்துக்கு பிறகு 30 நிமிடங்கள் காத்திருப்பது சிறந்தது. ஏனெனில், மின்னல் தாக்குதல் தொடர்பான பாதிக்கும் மேலான உயிரிழப்புகள் இடியுடன் கூடிய மழை பெய்து முடிந்தவுடனே நிகழ்ந்துள்ளன.
மின்னல் தாக்கினால் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும்?
- யாருக்காவது மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அழைக்க வேண்டும்.
- மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களை தொடுவதில் எந்த ஆபத்துமில்லை. மின்னலில் எந்த மின்சார சக்தியும் இல்லாததால், அதன் மூலம் யாருக்கும் மின்சாரம் பரவாது.
- மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களின் நாடித் துடிப்பினை உடனடியாக சோதிக்க வேண்டும். எவ்வாறு முதலுதவி தர வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்தால் பாதிப்படைந்தவருக்கு நீங்கள் முதலுதவி தரலாம்.
- பொதுவாக பாதிப்படைந்தவர்களின் தலை பகுதியும், கால் பாத பகுதியும் மின்னல் தாக்குதலில் எரிந்து விட வாய்ப்புண்டு. மின்னோட்டம் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகள் இவை தான்
- மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு எலும்புகள் உடைதல், காது கேளாமை மற்றும் பார்வை இழப்பு ஆகியவை ஏற்படலாம். நீங்கள் இதனை கவனிக்க வேண்டும்
பிற செய்திகள்:
- ரஜினிகாந்த்: "மக்கள் மன்றம் கலைப்பு, ரசிகர் மன்றம் தொடரும் - அரசியல் கிடையாது"
- நடன பெண்களை வேட்டையாடும் 'கழுகுகள்'- பிகார், உ.பி-யில் நடக்கும் கொடுமை
- கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகம் - என்னவாகும் ரூ.12 லட்சம் கோடி?
- ஆன்லைன் கல்வி ரேடியோ - ஏழை மாணவர்களுக்கு உதவும் அரசுப் பள்ளி ஆசிரியரின் முயற்சி
- 'வலிமை' : அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் உடைந்தது ஏன்?
- புதுச்சேரி அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: யாருக்கு என்ன துறை?
- பழங்கால மெசபடோமிய நகரான பாபிலோன் வரலாறு உங்களுக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்