You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ் இடைவெளி: இந்திய அரசு, ஆலோசனை குழு முரண்பட்ட தகவல்
கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியை அதிகரிப்பதற்கு இந்திய அரசு எடுத்த முடிவு, அறிவியல் தரவுகளின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் எடுக்கப்பட்டது என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இந்த முடிவை எடுக்க ஒப்புக்கொண்டதாக அமைச்சர் கூறும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் இதை மறுத்துள்ளனர்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனீகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில், சீரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இதுவரை சுமார் 26 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 90 சதவிகிதம் கோவிஷீல்டு தடுப்பூசிதான் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசிடம் தடுப்பூசி பற்றாக்குறையால் இந்த முடிவா?
கடந்த மே மாதம், இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு இடையிலான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்களாக இந்திய அரசு உயர்த்தி அறிவித்த பின்பு இது இந்திய அரசிடம் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் எடுக்கப்பட்டுள்ள முடிவு என்ற விமர்சனங்கள் எழுந்தன.
நோயெதிர்ப்பு ஊட்டலுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் (National Technical Advisory Group on Immunisation - NTAGI) யாருடைய எதிர்ப்பும் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறியுள்ள அறிக்கையையும் ஹர்ஷ்வர்தன் தமது ட்விட்டர் பதிவில் இணைத்துள்ளார்.
"(அறிவியல்) தரவுகளை மதிப்பீடு செய்வதற்கு இந்தியாவிடம் மிக விரிவான பொறிமுறை உள்ளது. இத்தகைய முக்கியமான விவகாரம் அரசியல் ஆக்கப்படுவது துரதிஷ்டவசமானது, என்றும் சுகாதார அமைச்சர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் என்.கே. அரோரா கூறுவது என்ன?
ஹர்ஷ்வர்தன் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள என்.கே. அரோராவின் அறிக்கையில் பிரிட்டனின் சுகாதார ஒழுங்காற்று அமைப்பான பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி 12 வார காலமாக இருந்த போது அதன் வீரியம் 65% முதல் 88% ஆக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு டோஸ்களுக்கு இடையே 12 வார கால இடைவெளியை பின்பற்றியதன் அடிப்படையில்தான் பிரிட்டன் அங்கு பரவிய 'ஆல்ஃபா' வகை கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது. அது ஒரு நல்ல திட்டம் என்று நாங்களும் கருதினோம். 'அடினோவெக்டர்' தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் போது அவை சிறப்பாகச் செயல்படுவதற்கான அறிவியல் காரணங்களும் உள்ளன என்று அரோரா தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் கோவிட் நடவடிக்கை குழு, தமது உறுப்பினர்கள் யாரின் எதிர்ப்பும் இல்லாமல் இந்த முடிவை எடுத்தது. நோயெதிர்ப்பு ஊட்டலுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பொழுதும் அங்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதன் காரணமாக இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது என்று மருத்துவர் அரோரா கூறுகிறார்.
'நாங்கள் அப்படி பரிந்துரை செய்யவில்லை'
ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்துவதற்கான காலத்தை 6 முதல் 8 வாரங்களில் இருந்து இரட்டிப்பாக்கி 12 முதல் 16 வாரங்களாக அதிகப்படுத்துவதற்கு தாங்கள் ஆலோசனை கூறவில்லை என்று NTAGI உறுப்பினர்கள் மூவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவின் உறுப்பினரும் தேசிய நோய் பரவல் மையத்தின் முன்னாள் இயக்குநருமான எம்.டி. குப்தே, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளபடி இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 8 முதல் 12 வாரங்கள் ஆக அதிகரிக்க மட்டுமே தாங்கள் ஆதரவளித்ததாகக் கூறியுள்ளார்.
ஆனால் 12 வாரங்களுக்கு மேலாக இந்த இடைவெளியை அதிகரிப்பது மூலம் உண்டாகும் விளைவுகள் குறித்த தரவுகள் அந்தக் குழுவிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் இன்னொரு உறுப்பினரான மேத்யூ வர்கீஸும், 8 முதல் 12 வாரங்களாக கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளி அதிகரிக்கவே தாங்கள் பரிந்துரை செய்ததாகத் தெரிவித்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
கோவிட் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினரான ஜெ.பி.முலியில், NTAGI கூட்டத்தில் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால் 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :