You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், தட்டு, நாணயம் ஒட்டிக்கொள்வதாக கூறும் முதியவர் - அம்பலமானது கட்டுக்கதை
- எழுதியவர், பிரவீணா தாக்கரே
- பதவி, பிபிசி மராத்தி
கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தைப் பற்றிப் பல விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்குப் பக்க விளைவாகக் காய்ச்சல் வருகிறது. சிலருக்கு வேறு விதமான பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. ஒரு சிலருக்கு எந்தப் பக்க விளைவும் இல்லாமலும் போகிறது.
ஆனால் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரை சேர்ந்த முதியவர் ஒருவர் தடுப்பூசியின் தாக்கம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.
இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, தமது உடல் ஒரு காந்தம் போல ஆகிவிட்டது என்கிறார் அவர். அரவிந்த் சோனார் என்பது அவரது பெயர்.
ஆனால் தடுப்பூசி காரணமாக இது ஏற்பட்டிருக்க முடியாது என நிபுணர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
தனது கூற்று உண்மை என்று கூற அரவிந்த் சோனார் ஒரு வீடியோவைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார், அதில் நாணயங்கள் மற்றும் ஸ்டீல் பொருட்கள் அவரது உடலில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
"நான் என் மகனுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என் மகன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடலில் இரும்புப் பொருட்கள் ஒட்டிக் கொள்கின்றன என்ற தகவலைச் சொன்னான். அதைச் சோதித்துப் பார்க்க நானும் முயற்சி செய்தேன். அது உண்மை என்று உணர்கிறேன்." என கூறுகிறார் அரவிந்த்.
அவர் 4-5 நாட்களுக்கு முன்பு தான் ஒரு தனியார் மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் போட்டுக்கொண்டுள்ளார். தனக்குப் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என அவர் கூறுகிறார்.
நிபுணர்கள் கருத்து
அரவிந்த் சோனார் மார்ச் 9 ஆம் தேதி கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோசையும், ஜூன் 2 ஆம் தேதி இரண்டாவது டோசையும் போட்டுக்கொண்டார்.
அவருக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்பூன், தட்டு, நாணயங்கள் போன்றவை அரவிந்த் சோனாரின் உடலில் ஒட்டிக் கொள்வதைக் கண்டு, அவர் அதைப் பற்றித் தனது மருத்துவரிடம் கூறினார்.
சோனாரின் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்பதை அறிந்து கொள்ள, பிபிசி மராத்தி, அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியைச் சேர்ந்த டாக்டர் ஹாமித் தபோல்கரைத் தொடர்பு கொண்டது.
மருத்துவர் ஹாமித் கூறுகையில், "உடலில் நாணயங்கள் மற்றும் பாத்திரங்களை ஒட்டுவது இயற்பியல் விதிகளின்படி சாத்தியமாகும். சருமத்தில் ஈரப்பதம் இருந்தால் மற்றும் ஒட்டும் இடத்தில் ஒரு வெற்றிடக் குழி உருவானால் இது சாத்தியமாகும். ஆனால் இதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு படுத்துவது சரியான விஷயமல்ல. எங்களுடன் இணைந்து பணியாற்றும் குழுவினர் இத்தகைய கூற்றுகளின் உண்மைத் தன்மையைப் பல முறை வெளிப்படுத்தியுள்ளனர். " என தெளிவாகக் கூறுகிறார்.
கொரோனாவை எதிர்ப்பதில், தடுப்பூசி மிகச் சிறந்த ஆயுதம் என்றும் அதனால் இது குறித்த எந்தவொரு பரபரப்பான வதந்தியையும் தவிர்க்க வேண்டும் என்றும் ஹாமித் கூறுகிறார்.
அர்விந்தின் கூற்றை ஜே.ஜே மருத்துவக் கல்லூரியின் டீன் மருத்துவர் தத்யாரவே லஹானே நிராகரித்துள்ளார்.
"உலகளவில் கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கோவிட் தடுப்பூசிக்கும் உடலில் எஃகு மற்றும் இரும்பு பொருட்களை ஒட்டுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதைத் தடுப்பூசியுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பது தவறு. தடுப்பூசியில் அப்படிப்பட்ட எந்தப் பொருளும் இல்லை" என்கிறார் அவர்.
சோதனைக்குள்ளாகும் இந்தக் கூற்று
நாசிக் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் அசோக் தோராட், பிபிசியிடம் இந்த விவகாரம் குறித்த தகவல் ஊடகங்கள் மூலமாக கிடைத்ததாகத் தெரிவித்தார்.
"இந்த விவகாரத்தை விசாரிக்க நாங்கள் நிபுணர்களை அனுப்புகிறோம், அதன் பிறகு நாங்கள் எங்கள் அறிக்கையை அரசாங்கத்திற்கு தருவோம். பின்னர் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி மூலம் இதுபோன்ற விஷயங்கள் நடக்க வாய்ப்பில்லை என அசோக் தொராட் கூறினார்.
"எனது மருத்துவத் தொழிலில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வை நான் சந்தித்ததில்லை. அர்விந்தின் உடலில் இந்த மாற்றத்திற்கான காரணங்களை அறிந்து கொள்வது முக்கியம். இது ஆராய்ச்சிக்குரிய விஷயமாகும்." என்கிறார் அவர்.
சோனாரின் இந்தக் கூற்றுக்குப் பிறகு, இந்திய மருத்துவச் சங்கத்தின் உறுப்பினர் சமீர் சந்திரா ராத்தே, ஒரு நபரின் உடலில் உலோகம் ஒட்டிக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறு குறித்து உலோகவியலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
சமீர் சந்திரா ராத்தே, "இதற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தடுப்பூசியின் பக்க விளைவாக வலி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். இது தவிர, இப்படி ஏதாவது நடந்தால், உடனே அதைத் தடுப்பூசியுடன் தொடர்புபடுத்திவிடக்கூடாது. இதுபோன்ற வதந்திகளால்தான் தடுப்பூசி பிரச்சாரம் தொய்வடைய வாய்ப்புள்ளது. இயற்பியலாளர்கள் மற்றும் உலோகவியலாளர்கள் இத்தகைய நபர்களின் உடலில் உலோகப் பொருட்கள் எவ்வாறு ஒட்டிக்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்." என கூறுகிறார்.
பிற செய்திகள்:
- போக்சோ சட்டம்: சிறாருக்கு எதிரான பாலியல் புகார்கள் எப்படி விசாரிக்கப்படும்?
- DOM வெப் சீரிஸ் விமர்சனம்
- எத்தியோப்பியாவில் பஞ்சம்: போர் நடந்த டீக்ரே பிராந்தியத்தில் பாதிப்பு - ஐநா அதிகாரி தகவல்
- கோயில் நிலங்களில் 47 ஆயிரம் ஏக்கர் மாயமா? - அறநிலையத்துறை சொல்வது என்ன?
- காதலுக்காக 10 ஆண்டு பூட்டிய அறையில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்த பெண்
- பெற்றோரை பட்டினிபோட்டு கொலை செய்துவிட்டு கொரோனா என்று கூறிய தம்பதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்