உ.பி அரசியல்: மோதி - அமித் ஷாவுக்கு நேரடி சவால் விடுக்கத் துணிந்தாரா யோகி ஆதித்யநாத்?

    • எழுதியவர், சமீராத்மஜ் மிஷ்ரா
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

உத்தர பிரதேச மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பல நிகழ்வுகள் சமீபத்திய வாரங்களாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரும் உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு நடத்தி வரும் கூட்டங்கள், அம்மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த கூட்டங்களின் தாக்கமாக விரைவில் மாநில பாஜக அளவிலும் அமைச்சரவையிலும் மாற்றத்துக்கான சாத்தியம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இந்த விவகாரம் கட்சியின் எல்லா நிலைகளிலும் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த களேபரத்துக்குக் காரணம், உத்தர பிரதேச அரசியலில் ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஒத்திசைவு இல்லாமல் புதிதாக ஒரு பிரமுகர் மாநில அரசியலில் நுழைக்கப்பட்டிருக்கிறார். உத்தர பிரதேச பாரதிய ஜனதா கட்சிக்குள் எரிகல் போல அவரது பிரவேசம் இருப்பதாக உள்ளூர் கட்சிக்காரர்கள் பார்க்கிறார்கள்.

யார் இந்த அரவிந்த் குமார் சர்மா?

அந்த நபரின் பெயர் அரவிந்த் குமார் சர்மா. இவர் ஒரு முன்னாள் ஐஏஎஸ் உயரதிகாரி. குஜராத் பிரிவைச் சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோதியிடம் மிகவும் நெருக்கமாக பழகக்கூடியவராகவும் அவரது நம்பிக்கைக்கு உகந்தவராகவும் அறியப்படுகிறார்.

மத்திய அரசுப்பணியில் இருந்து கடந்த ஜனவரி 11ஆம் தேதி விலகிய இவர், அடுத்த மூன்று நாட்களிலேயே உத்தர பிரதேச பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் அவர் தேர்வானார்.

திடீரென கட்சிக்குள் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு அடுத்த சில நாட்களிலேயே மேலவை உறுப்பினர் பதவி வழங்கி அழகு பார்த்த பாஜக மத்திய தலைமையின் நடவடிக்கை, மாநில பாஜகவினர் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி பதவி ஓய்வுக்கு பிறகு மாநில அரசுக்குள் நுழைவது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. அதுவும் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருப்பது அவரை வேறு ஒரு உயர் பதவிக்கு தயார்படுத்துவதற்காகவோ என்று உத்தர பிரதேச அரசியலை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ஒரு சிலர் இவரை மாநில முதல்வராக்க மத்திய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதா என்றும் வாதிடுகிறார்கள். அதே சமயம், உத்தர பிரதேசத்தில் மாநில துணை முதல்வர் பதவி அல்லது யோகியின் அமைச்சரவையில் இடம் போன்ற வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

இது ஒருபுறமிருக்க, மாநிலத்தில் தன்னிச்சையாக முதல்வர் யோகி செயல்படுவதால், அவரது அதிகாரத்தை குறைக்கும் விதமாக ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை தங்களின் பிரதிநிதியாக மாநில அரசியலுக்குள் நுழைய விட்டிருக்கிறார்கள் பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்று ஒரு தரப்பு அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இப்படியான ஊகங்கள் பலவும் அரவிந்த் குமார் சர்மா, பாஜகவில் சேர்ந்ததில் இருந்து கடந்த நான்கு மாதங்களாக உலா வந்தாலும், இதுவரை அவருக்கு எந்தவொரு கட்சிப்பொறுப்போ ஆட்சிப்பொறுப்போ வழங்கப்படவில்லை.

பிறகு ஏன் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பதவி ஓய்வு பெற்ற மூன்றே நாட்களில் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்? அவருக்கு அடுத்த சில வாரங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி தரப்பட வேண்டும்? இவை எல்லாம் யாருடைய ஆசீர்வாதத்தில் நடந்தன? என்று பாஜகவினர் கேட்கிறார்கள்.

உண்மையான பின்னணி என்ன?

இதுகுறித்து உத்தர பிரதேச பாஜகவில் உள்ள தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர், "அரவிந்த் சர்மாவை எந்த சூழ்நிலையிலும் தமது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள முடியாது," என்பதை மாநில முதல்வர் தெளிவுபடுத்தி விட்டார். இந்த பதில், பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது," என்று கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியில் இப்போது இரு பிரிவினர் இரு வேறு பிரசார முழக்கத்தை பல கூட்டங்களில் முன்னெடுக்கிறார்கள். ஒரு பிரிவினர், யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வரானது எப்படி என்பதை அவர் நினைவுபடுத்திப்பார்க்க வேண்டும் என்று பொது இடங்களில் பேசி வருகிறார்கள், மற்றொரு பிரிவினர், மோதி இந்தியாவை ஆளுகிறார், யோகி உத்தர பிரதேசத்தை ஆளுகிறார். ஆனால், இருவருக்கும் உள்ள மக்கள் செல்வாக்கு ஒன்றுதான். மத்தியில் மோதி எப்படியோ யோகியும் அவருக்கு நிகரானவர் என்று பேசு வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ் ஆதரவு யோகிக்கு உள்ளதா?

ஆனால், மத்தியில் ஆளும் மோதிக்கு இருப்பதை விட கூடுதலான ஆதரவு யோகிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்தியில் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் யோகேஷ் மிஷ்ரா கூறுகிறார்.

"உத்தர பிரதேசம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம். இங்கு முதல்வராக இருப்பது மிகப்பெரிய விஷயம். இங்கு முதல்வராக இருப்பவர் தன்னை நாட்டின் பிரதமருக்கு நிகரானவராக கருதிக் கொள்கிறார். இங்கு இவர் முதல்வராவதற்கு ஆதரவாக இருப்பது ஆர்எஸ்எஸ். அதன் தேர்வால்தான் யோகி முதல்வராக தொடர்கிறார். அத்தகைய ஒரு தலைவராக உருவெடுத்துள்ள யோகியை பலவீனப்படுத்த திடீரென மத்தியில் இருந்து பாராசூட் மூலம் குதித்து விட்ட அரவிந்த் குமார் சர்மாவை முதல்வர் பதவியிலோ அவரது அமைச்சரவையிலோ அவ்வளவு வேகத்தில் அமர்த்திப் பார்க்க ஆர்எஸ்எஸ் தலைவர்கள் விரும்ப மாட்டார்கள்," என்று யோகேஷ் மிஷ்ரா தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவிக்கு வந்தார். அடுத்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நான்கு ஆண்டு பதவிக்காலத்தில் மாநிலத்தில் நிலவிய அசாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னையாகட்டும், சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்களை அடக்குவதில் ஆகட்டும், யோகி ஆதித்யநாத் தனக்கு உரிய பாணியில் அந்த செயல்பாடுகளை கட்டுப்படுத்தி விட்டார் என்றுதான் கூற வேண்டும் என்று யோகேஷ் மிஷ்ரா கூறினார்.

உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக நடத்தும் கூட்டங்களில் இதுவரை இல்லாத வகையில் யோகி அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களிடம் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் அரசியல் மற்றும் உள்கட்சியில் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தாலும், இந்த அமைச்சர்கள் தரும் புகார்களை வைத்து யோகிக்கு எதிரான நிலையை ஆர்எஸ்எஸ் தலைமை எடுக்காது என்று கருதுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் கீலான்ஸ்.

"உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை ஒரு சில குறிப்பிட்ட அதிகாரிகளின் துணையுடனேயே ஆட்சி நிர்வாகம் நடக்கிறது. அவர்களிடமே அதிகார குவியல் உள்ளது. அவர்களைத்தான் யோகி நம்புகிறார். அதுதான் யோகியின் அரசியல் பாணி. இந்த பாணி கைகொடுப்பதால்தான் அவர் வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மாநிலத்திலும் கட்சியிலும் தமது செல்வாக்கு உயர எது காரணம் என்பதை அவர் அறிந்தே வைத்துள்ளார். அதனால்தான் பாஜக மேலிடம் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை கூட யோகி தலைமையிலேயே எதிர்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல் உள்ளது," என்று சித்தார் கூறுகிறார்.

திடீர் அதிருப்தி ஏன்?

யோகியின் செயல்பாடு மகிழ்ச்சிகரமாக இருந்தால் திடீரென அரசியலுக்குள் நுழைந்த அரவிந்த் சர்மாவின் வருகைக்கு பிறகு அவருக்கு ஏன் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சில பாஜகவினர் கேட்கிறார்கள்.

அரவிந்த் சர்மாவை தமது அமைச்சரவையில் சேர்க்க முடியாது என்பதில் யோகி உறுதி காட்டுவதால் அவர் மீது கட்சி மேலிடம் அதிருப்தியில் இருக்கிறது என்ற கருத்துக்கு அவரது செயல்பாடுகளே வலுசேர்க்கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாம் பேசிய பல்வேறு அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏக்கள் பலரும் யோகியின் செயல்பாடு மீது தாங்கள் அதிருப்தியில் இருப்பதாகவே கூறுகிறார்கள். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் கையாளும் நடவடிக்கை மக்களின் நம்பி்க்கையை பெறத் தவறி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த பின்னணியிலேயே பல ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர்களும் பாஜக மேலிடத் தலைவர்களும் உத்தர பிரதேசத்துக்கு வந்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வருவதாக அக்கட்சியினர் கருதுகிறார்கள்.

கடந்த வாரம் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரான தத்தாத்ரேய ஹோஸ்பலே, லக்னெள வந்து சில பாஜக தலைவர்களை அழைத்துப் பேசினார். லக்னெள வருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு அவர் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இது குறித்து நம்மிடையே பேசிய பாஜக உ.பி அமைப்புச்செயலாளர் சுனில் பன்சால், "ஒரு மாநிலத்துக்கு மிக முக்கியமான ஆர்எஸ்எஸ் தலைவர் வந்து முக்கியமான கூட்டத்தை நடத்துகிறார். உ.பி அரசியல் பற்றி பலருடனும் விவாதிக்கிறார். அதில் மாநில முதல்வரை ஏன் அழைக்கவில்லை. இது பற்றி மாநில முதல்வர் கவலைப்பட மாட்டாரா?" என்று கேட்கிறார்.

ஹோஸ்பலே தனது லக்னெள பயணத்தின்போது அங்கு இரண்டு நாட்கள் தங்கியபோதும், அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசவில்லை. அந்த நேரத்தில் யோகி ஆதித்யநாத் சோன்பாத்ராவில் இருந்தார். அதனால், தமது லக்னெள பயணத்திட்டத்தை ஒரு நாள் நீட்டித்து அங்கேயே தங்கினார். பிறகு முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு முதல்வர் லக்னெள வரும்வரை காத்திருக்க வேண்டுமா அல்லது மும்பை திரும்பட்டுமா என்று ஹோஸ்பலே கேட்டிருக்கிறார். ஆனால், கடைசிவரை அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வராததால் மூன்றாம் நாள் லக்னெளவில் இருந்து மும்பைக்கு ஹோஸ்பலே திரும்பினார்.

மத்திய தலைமையை எதிர்க்கும் அளவுக்கு வல்லமை படைத்தவரா யோகி?

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் யோகேஷ் மிஷ்ரா கூறுகையில், "பாஜக மேலிட தலைமையை எதிர்க்கும் அளவுக்கு யோகி துணிய மாட்டார். அவர் அடிப்படையில் மக்கள் தலைவராகி, சாதனை படைத்து முதல்வர் பதவிக்கு வரவில்லை. அவர் முதல்வராக தேர்வானவர். முதல்வராக தேர்வாகும்வரை அவர் கட்சியின் நிர்வாகி ஆகக்கூட கிடையாது," என்று கூறினார்.

பாஜக மேலிடம் போடும் கணக்கு இதுதான் என்று விவரித்த பத்திரிகையாளர் யோகேஷ்வர், ஒரு வேளை யோகியின் செயல்பாடுகளால் அதிருப்தி கூடி அவரது தலைமையில் தேர்தலை சந்திக்கும் பாஜக தோல்வியைத் தழுவினால், அதன் தாக்கம் அடுத்து வரும் மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கலாம். மேற்கு வங்கத்தில் தோல்வியைத் தழுவிய பிறகு மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும் அதே நிலையை அனுபவித்தால், அது பாஜகவின் மத்திய தலைமைக்கும் ஆட்சித் தலைமைக்கும் சங்கடமாகி விடும் என்று மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள். அத்தகைய ஆபத்தான நிலையை விலைகொடுத்து வாங்க கட்சி மேலிடம் தயாராக இல்லை. எனவேதான் அதற்கான முன்னோட்ட நடவடிக்கைகளில் இப்போது முதலே கட்சி மேலிடம் ஈடுபட்டிருக்கிறது," என்றார்.

இதேவேளை, மற்றொரு பத்திரிகையாளர் சித்தார், "யோகியின் வலுவான அடித்தளமே அவர் மீது யாரும் குறிப்பிட்டு எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என்பதுதான். அந்த ஒரு பலமே அவருக்கு எதிரான பலவீனங்களை சுக்குநூறாக்கி விடும்," என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :