You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகாரை தொடர்ந்து உ.பி காஸிபூர் நதிக்கரையிலும் சடலங்கள் - காவல்துறை விசாரணை
- எழுதியவர், சீது திவாரி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக,
பிகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தின் சௌஸா பகுதியில் உள்ள சௌஸா மயானத்தில் கங்கையின் கரையில் குறைந்தது 40 சடலங்கள் மிதந்து கிடந்தன. உள்ளூர் நிர்வாகம் பிபிசியுடனான உரையாடலில் இதை உறுதிப்படுத்தியது. ஆனால் உள்ளூர் பத்திரிகையாளர்கள் சடலங்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருந்ததைத் தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, உள்ளூரில் வெளியான படங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அங்குள்ள விலங்குகளுக்கு சடலங்கள் இரையாவதையும் காண முடிந்தது.
சௌஸா வட்டார வளர்ச்சி அதிகாரி அசோக் குமார், பிபிசியிடம் "30 முதல் 40 இறந்த உடல்கள் கங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள் உத்தரபிரதேசத்திலிருந்து மிதந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. அந்தப் பகுதிவாழ் மக்களிடம் நான் விசாரித்தபோது, இந்தச் சடலங்கள் தங்களுடைய பகுதியைச் சேர்ந்தவை அல்ல என்று உறுதியளிக்கிறார்கள்." என்றார்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநில எல்லையான காஸிபூரில் உள்ள நதிக்கரையிலும் சில சடலங்கள் மிதந்துள்ளன. இந்த தகவலை காஸிபூர் மாவட்ட ஆட்சியர் எம்.பி. சிங் உறுதிப்படுத்தினார். "சடலங்கள் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவை தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்," என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பக்ஸரில் என்ன நடந்தது?
இதற்கிடையில், பக்ஸர் மாவட்ட ஆட்சியர் அமன் சமீர் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, "காஸிபூர் மற்றும் பலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் சடலங்களை அந்தந்த இடங்களில் தகனம் செய்வது தாடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருகிறோம். இதேவேளை சில சடலங்கள் பக்ஸர் பகுதியில் வந்தால், அவை மரியாதையுடன் தகனம் செய்யப்படும். பக்ஸர் பகுதி, உத்தரபிரதேசம் மற்றும் பிகார் மாநிலத்தின் எல்லை மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கில், கங்கை நதிக்கரையில் உத்தர பிரதேசத்தின் பலியா உள்ளது. மேற்கில் காஸிபூர் மாவட்டம் உள்ளது," என்று கூறினார்.
ஆனால் உள்ளூர் பத்திரிகையாளர் சத்யபிரகாஷ், மாவட்ட நிர்வாகத்தின் கூற்றை ஏற்கவில்லை.
விறகு தட்டுப்பாடு, சடலங்களை மிதக்க விடும் குடும்பங்கள்
"கங்கையில் இப்போது வெள்ளப்பெருக்கு இல்லை. கீழைக் காற்று வீசுகிறது, இது மேலைக்காற்று வீசும் காலமல்ல. அப்படியிருக்க, சடலங்கள் எப்படி மிதந்து வர முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
தொடர்ந்து அவர், "மே 9ஆம்தேதி, நான் அதைப் பற்றி முதன்முதலில் அறிந்தபோது, அங்கு 100 இறந்த உடல்களைக் கண்டேன். இந்த எண்ணிக்கை மே 10ஆம் தேதி குறைந்திருந்தது. உண்மையில், பக்ஸரின் இந்த மயானம் புராண முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, இப்போது, கொரொனா காரணமாகச் சடலங்களை எரிக்க இடம் கிடைப்பதில்லை. அதனால்தான் மக்கள் இறந்த உடல்களை எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சௌஸாவுக்குக் கொண்டு வருகிறார்கள். " என்று கூறுகிறார்.
"ஆனால் இங்கு விறகுக் கட்டைகளுக்கான வசதி இல்லை. படகுப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் கங்கையில் சடலங்களை மிதக்க விடுகிறார்கள். படகுப் போக்குவரத்து இருந்தால், பலர் சடலத்தில் பானையைக் கட்டி, கங்கையில் விடுகிறார்கள்." என்று அவர் விளக்குகிறார்.
அந்தக் கரையில் இருக்கும் பண்டிட் தீன் தயால் பாண்டே உள்ளூர் ஊடகவியலாளர்களுடன் உரையாடியபோது, "பொதுவாக, இரண்டு முதல் மூன்று சடலங்கள் தினமும் இந்தக் கரைக்கு வந்து கொண்டிருந்தன, ஆனால் இங்கு கடந்த 15 நாட்களில் சுமார் 20 சடலங்கள் இங்கு வந்துள்ளன. இந்தச் சடலங்களை கங்கையில் மிதக்க விடுகிறார்கள். இவை தொற்று பாதிக்கத்தவர்களின் உடல்கள். இங்கே நாங்கள் கங்கையில் சடலங்களை விடுவதை அனுமதிப்பதில்லை. ஆனால் மக்கள் கட்டுப்படுவதில்லை. நிர்வாகம் இங்கே ஒரு காவலாளியையும் நியமித்துள்ளது. ஆனால் அவர்கள், அவருக்கும் செவிசாய்ப்பதில்லை. " என்று கூறுகிறார்.
சடலங்களை எரிக்கும் மாவட்ட நிர்வாகம்
அந்தப் பகுதியில் வசிக்கும் அஞ்சோரியா தேவி, "மக்களுக்கு நாங்கள் அனுமதி மறுக்கிறோம். ஆனால் உங்கள் குடும்பத்தினர் எங்களுக்குச் சடலங்களை எரிக்க, விறகு கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி மக்கள் போராடுகிறார்கள்.
தற்போது, பக்ஸர் நிர்வாகம், இந்தப் பகுதியிலேயே ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் குழிகளைத் தோண்டி இறந்த உடல்களை அடக்கம் செய்யும் பணியை முடித்து வருகிறது.
பக்ஸரின் உள்ளூர் பத்திரிகையாளர்கள், இங்குள்ள கோவிட் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தகனத்திற்கு 15-20 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவதாகக் கூறுகிறார்கள்.
உள்ளூர்வாசி சந்திரமோகன் கூறுகையில், "தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை நடந்துள்ளது. அந்தச் செலவைச் செய்த பின்னர், தகனத்திற்கும் பண்டிதரிடம் கொடுக்கப் போதுமான பணம் இல்லை. ஆம்புலன்ஸிலிருந்து சடலத்தை வெளியே எடுக்க இரண்டாயிரம் ரூபாய் கேட்கப்படுகிறது. இந்த நிலையில் கங்கைத் தாய் தான் உதவி செய்கிறாள். சடலங்களை அப்படியே கங்கையில் விட்டு விடுகிறார்கள்." என்று தெரிவிக்கிறார்.
பிகாரில் அதிகரிக்கும் கொரொனா
மே 9 வரை, இம்மாநிலத்தில் 1,10,804 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். மீட்பு விகிதம் 80.71% ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பக்ஸர் மாவட்டத்தைப் பொருத்தவரை, 1216 நோய்த் தொற்று கண்டிருக்கின்றனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில சுகாதாரத் துறையின் புள்ளிவிவரம், இதுவரை 80,38,525 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. அதிகம் பாதிக்கப்பட்டது தலைநகர் பட்னா தான்.
எச்.ஆர்.சி.டி, ஆம்புலன்ஸ் கட்டணம், தனியார் மருத்துவமனை கட்டணங்களை மாநில அரசு நிர்ணயித்துள்ளது, ஆனால் அவை கண்டிப்பாக பின்பற்றப்படுவதில்லை.
பிகாரில் தினமும் 10,000 நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன, மேலும் 60 க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்கின்றன. கொரோனாவால் பிஹாரில் இதுவரை 3,282 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மாநிலத்தில் 11,259 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, 67 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
பிற செய்திகள்:
- இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை - தொற்று பரவல் பற்றிய கவலை தரும் தரவுகள்
- சபாநாயகர் ஆகிறார் ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு: பின்னணி என்ன?
- எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி - அதிமுக தலைமை அலுவலகத்தில் என்ன நடந்தது?
- ஆந்திர கொரோனா திரிபு 1,000 மடங்கு வேகமாக பரவுமா? உண்மை என்ன?
- 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்களின் உடல்கள் - குகையில் கிடைத்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :