எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி - அதிமுக தலைமை அலுவலகத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அதிமுக நிர்வாகிகள் அளித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டத்தில் என்ன நடந்தது?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அ.தி.மு.க 65 இடங்களில் வென்றது. இதையடுத்து, `எதிர்கட்சித் தலைவர் யார்?' என்ற கேள்வி அ.தி.மு.க முகாமில் எழுந்தது. இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யார் எதிர்கட்சித் தலைவர் என்பதில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவு உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மோதல்

இந்தக் கூட்டத்தில், ` வன்னியர் இடஒதுக்கீடு, தே.மு.தி.கவை வெளியேற்றியது போன்ற காரணங்களால்தான் நாம் தோல்வியை தழுவினோம். இதற்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பு' என ஓ.பி.எஸ் தரப்பினர் குற்றம் சாட்ட, ` மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ததன் காரணமாகத்தான் இவ்வளவு இடங்களை வெல்ல முடிந்தது. அதனால் எடப்பாடியே எதிர்கட்சித் தலைவராக வர வேண்டும்' என கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதை ஓ.பி.எஸ் தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. `இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாங்கள் விட்டுக் கொடுக்க முடியும்?' என எதிர்க்குரல் எழுப்பினர். இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் பேசியுள்ளனர்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வெளியே இரண்டு பிரிவாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர். இருப்பினும், எந்தவித முடிவும் எட்டப்படாததால், `திங்கட்கிழமை காலையில் மீண்டும் பேசி முடிவு செய்யப்படும்' என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்தச் சூழலில் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டனர். அப்போதும், எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இரண்டு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வெளியே போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

என்ன நடந்தது?

கூட்டத்தில் எடப்பாடி தரப்பினர் பேசுகையில், ` கொங்கு மண்டலத்தில் இருந்துதான் அதிகப்படியான எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் செலவுகளையும் நாங்கள்தான் செய்தோம். தமிழ்நாடு முழுக்க எடப்பாடி தானே சுற்றுப்பயணம் செய்தார்' என கூறியுள்ளனர்.

இதற்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ் தரப்பினர், `அப்படியானால், இருவருக்கும் பொதுவாக தனபாலை முன்னிறுத்தலாம்' என கூறியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத தனபால், "நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை. எனக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்” என கூறிவிட்டார்.

எம்.எல்.ஏக்களில் பெரும் பகுதியினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்ததால் ஓ.பி.எஸ்ஸால் எதையும் முன்னெடுக்க முடியவில்லை. இதையடுத்து, எடப்பாடியை தேர்வு செய்ததாகத் தயாரான அறிக்கையில் கையொப்பம் போட்டு விட்டு கூட்டத்தில் இருந்து முதல் ஆளாக அதிருப்தியுடன் ஓ.பி.எஸ் வெளியேறியுள்ளார். ‘இது தொடர்பாக வெளியான அறிக்கையிலும், "ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக" என்றே கூறப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் ஆவடிகுமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``அ.தி.மு.க தொண்டர்களின் உழைப்பினால்தான் இந்தத் தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் வெல்ல முடிந்தது. `பதவி வேண்டும்' எனக் கூறுகிறவர்கள் எல்லாம், இந்தக் கட்சிக்குள் வரும்போது என்ன கொண்டு வந்தார்கள்? பதவிகளை அனுபவித்தவர்களே விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால், எதையும் அனுபவிக்காமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் தியாக உள்ளத்தோடுதான் இந்தக் கட்சிக்காகத் தொடர்ந்து உழைத்து வருகிறார்கள். இந்தக் கட்சியின் நலனை விரும்புகிறவர்கள் யாரும் தன்னை முன்னிலைப்படுத்த மாட்டார்கள்.

இதுதான் தலைமைப் பண்பா?

டெல்லிக்குப் போனாலும், `என் மகனுக்குப் பதவி கொடுங்கள்' என்கிறார். `எதிர்கட்சித் தலைவர் பதவி என்றாலும் எனக்கே கொடுங்கள்' என கேட்பவரால், எப்படி ஒரு கட்சியை ஒருங்கிணைக்க முடியும்? கடந்த 4 வருடங்களாக இந்தக் கட்சி இணைந்து செயல்படும்போது, ` எனக்குப் பதவி கொடுங்கள், என் ஆதரவாளர்களுக்குப் பதவி கொடுங்கள்' என்று கூறிக் கொண்டே இருக்கிறார். இதை தலைமைக்குரிய பண்பாக பார்க்க முடியவில்லை. `நான் தேர்தலில் போட்டியிடவில்லை, மாநிலம் முழுவதும் எடப்பாடியின் வெற்றிக்காக பாடுபடுவேன்' என்று ஓ.பி.எஸ் கூறியிருந்தால் சரியாக இருந்திருக்க முடியும்.

தேனி மாவட்டத்திலேயே இவருடைய ஒரு தொகுதியில் மட்டும்தானே வெல்ல முடிந்தது. வன்னியர் இடஒதுக்கீட்டை எடப்பாடி அளித்ததன் மூலமாக தென்மாவட்டம் தோற்றது என ஓ.பி.எஸ் தரப்பினர் கூறுகின்றனர். அப்படியென்றால், 65 இடங்களில் அ.தி.மு.க வென்றதற்குக் காரணம் எடப்பாடியின் பிரசாரம் தானே. அதனால், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதே சரியானது" என்கிறார்.

ஏன் விட்டுக் கொடுத்தார் ஓ.பி.எஸ்?

ஆனால், இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓ.பி.எஸ் தரப்பினர் சிலர், ``கட்சியின் நலனுக்காக ஓ.பி.எஸ் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார். அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்த பிறகு கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் எடப்பாடி தரப்பினர் நிறைவேற்றவில்லை. ஆட்சி அதிகாரத்திலும் ஓ.பி.எஸ்ஸுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஓ.பி.எஸ் அறிவித்தார். இருவருமே இணைந்துதான் வேட்பாளர்களை அறிவித்தார்கள்.

சொல்லப் போனால், தென் மாவட்டத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் வெற்றி பெற்றனர். ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலர் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டனர். உதாரணமாக, மதுரையில் வென்ற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பலரும் எடப்பாடியின் ஆதரவாளர்கள்தான். `தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓ.பி.எஸ் கை ஓங்கிவிடக் கூடாது' என்பதற்காகவே இவ்வாறு செய்தனர். வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பி படிவத்தில் ஓ.பி.எஸ் மட்டும் கையொப்பம் போடாமல் இருந்திருந்தால் பெரிய சிக்கல் வந்திருக்கும். `இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும்' என்பதற்காகத்தான் ஓ.பி.எஸ் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார். இந்தமுறையும் அதையேதான் செய்தார்" என்கின்றனர் விரிவாக.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :