You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டு பட்டியலில் கொல்கத்தா கொரோனா நோயாளிகளை காட்டிய Medall ஆய்வகம்: தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மோசடியா?
வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாகக் காட்டி, தமிழகத்தில் கொரோனா அதிகரித்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக Medall ஆய்வகத்திற்கு தமிழக பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழகத்தின் கணக்கில் சேர்த்ததாக சென்னையிலிருந்து செயல்பட்டுவரும் Medall என்ற ஆய்வகத்திற்கு தமிழக பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸில் உள்ள தகவல்களின்படி, கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்ட மாதிரிகளை தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சியில் எடுக்கப்பட்ட மாதிரிகளாகக் காட்டி, அவை ஐசிஎம்ஆர் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. மே 19, மே 20 ஆகிய நாட்களில் 'கொரோனா நெகட்டிவ்' என வந்த நான்காயிரம் முடிவுகளை, 'கொரோனா பாசிடிவ்' என மாற்றி ஐசிஎம்ஆர் பதிவேட்டில் இந்த ஆய்வகம் பதிவுசெய்துள்ளது.
மேலும் தினமும் 'கொரோனா பாசிடிவ்' என பதிவுசெய்யப்படும் நோயாளிகளின் விவரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட தவறுகளை தமிழக பொது சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.
இதன் மூலம் வேண்டுமென்றும், அலட்சியமாகவும் இந்த ஆய்வகம் தவறுகளில் ஈடுபட்டுள்ளதாக பொது சுகாதரத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
வேறு மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் ஆகும் நோயாளிகளின் எண்ணிக்கையை தமிழகத்தின் கணக்கில் காட்டுவதன் மூலம், தமிழ்நாட்டில் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக் கணக்கு உயர்ந்தது.
இதுபோல தவறான எண்ணிக்கையைத் தந்ததால், மத்திய அரசு ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதில் தவறாகக் கணக்கிட நேரிட்டது. இதன் மூலம் மத்திய - மாநில அரசுகள் இந்த நோயைத் தடுக்க செய்த முயற்சிகளில் தடங்கல் ஏற்பட்டன.
கொரோனா இல்லாதவர்களுக்கு கொரோனா இருக்கிறது என பதிவுசெய்ததால் பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பம், பதற்றம், மன அழுத்தம் ஆகியவை ஏற்பட்டன. தவறாக முடிவு சொல்லப்பட்டவர்கள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.
இந்த ஆய்வகத்திற்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையே கூட்டணி இருக்கலாம் என கருதுவதாகவும், பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை வரவைத்து, அவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்திருக்கக்கூடும்.
உண்மையிலேயே 'கொரோனா பாசிடிவ்' வந்த நோயாளிகளின் முழுமையான விவரங்களை அளிக்காததால் அந்த நோயாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், நோய் பரவாமல் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தடைபட்டன என்றும் பொது சுகாதாரத் துறை கூறியிருக்கிறது.
ஆகவே, இந்த ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக தரப்பட்ட உரிமத்தை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை ரத்துசெய்திருக்கிறது. இந்த ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் மூன்று நாட்களுக்குள் இது தொடர்பாக விரிவான அறிக்கையை பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- குழந்தைகளை தாக்கும் கொரோனா திரிபு: சிங்கப்பூரில் பள்ளிகள் மூடல் - மக்கள் கருத்து
- நவம்பர் ஸ்டோரி - இணையத் தொடர் விமர்சனம்
- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- இஸ்ரேல்-காசா: முடிவுக்கு வந்த 11 நாள் மோதல்
- இந்திய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை தருவது ஏன்?
- கொரோனா சுய பரிசோதனை கிட்டுகளுக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் - எப்படி பரிசோதனை செய்வது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :