You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மீதான வழக்குகள் வாபஸ்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய குற்றப் பிரிவு விசாரிக்கும் வழக்குகள், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்குகள் தவிர பிற வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதியன்று மிகப் பெரிய ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடைபெற்றன. அது கலவரமாக மாறியதையடுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது தமிழ்நாடு அரசு. இந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை மே மாதம் 14ஆம் தேதியன்று அரசுக்கு அளித்தது.
இந்த இடைக்கால அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக இந்தப் போராட்டம் தொடர்பில் காவல்துறையால் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப்பெற ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவையற்ற வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட மொத்த வழக்குகளில் மத்திய குற்றப்புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், தனியார் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் திரும்பப்பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி சம்பவத்திற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப்பெறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிவாரணம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட 94 பேரில் 93 பேருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் காயங்களுக்கும் நிவாரணமாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், சிறையில் இறந்துவிட்ட ஒருவரின் 72 வயது தாய்க்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுமென்றும் அரசு தெரிவித்துள்ளது.
காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டுமென்றும் அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியிருந்தது. அந்த பரிந்துரையையும் ஏற்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- ரூ.200 கோடி துவரம் பருப்பு டெண்டர் ரத்து: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் என்ன நடந்தது?
- பாஜக அரசுக்கு எதிரான புலனாய்வு செய்தி, பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு: யார் இந்த தருண் தேஜ்பால்?
- இஸ்ரேல்-காசா: முடிவுக்கு வந்த 11 நாள் மோதல்
- இந்திய கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை தருவது ஏன்?
- கொரோனா சுய பரிசோதனை கிட்டுகளுக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் - எப்படி பரிசோதனை செய்வது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :