You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு மூலம் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட அந்த கடித்தத்தில், பின்வரும் விவரங்களை அவர் தெரிவித்திருக்கிறார்:
"இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் எஸ். நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க வேண்டுமென நாங்கள் கோரி வருவது உங்களுக்குத் தெரியும்.
நளினிக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை அரசியல் சாஸனத்தில் 161வது பிரிவின்படி ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற மூவருக்கு உச்ச நீதிமன்றம் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக அறிவித்தது.
இந்த ஏழு பேரும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் அவர்களது மீதமுள்ள தண்டனையைக் குறைத்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் கோரிவருகின்றன. தமிழக மக்களும் அதையே விரும்புகிறார்கள்.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு இந்த ஏழு பேரின் தண்டனையைக் குறைத்து, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இந்த வழக்கை சிபிஐயின் பல்நோக்கு புலனாய்வுக் குழு விசாரித்தது என்பதால், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது எனக் கூறப்பட்டது. ஆனால், யார் வழக்கை விசாரித்தது என்பதற்கும் தண்டனையைக் குறைப்பதற்கும் தொடர்பில்லையென உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
அதற்குப் பிறகு, இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உண்டு என தமிழக ஆளுநர் முடிவுசெய்தார். ஆகவே மாநில அரசின் பரிந்துரையை அவர் தங்களுக்கு அனுப்பிவைத்தார்.
இந்த ஏழு பேரும் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து, பெரும் விலை கொடுத்திருக்கின்றனர். அவர்களது தண்டனை குறைப்பு மீது முடிவெடுப்பதில் ஏற்கெனவே மிகுந்த தாமதம் ஏற்பட்டு விட்டது. தற்போதைய கோவிட் சூழ்நிலையில், சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென நீதிமன்றங்களும் கூறிவருகின்றன.
ஆகவே, 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அரசு செய்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்று இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவை வெளியிட வேண்டும்"
1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கு அருகில் உள்ள திருப்பெரும்புதூரில் கொல்லப்பட்டார். அவருடைய கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்த ஏழு பேரும் 1991ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- இந்தியாவை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு தட்டுப்பாடு
- தந்தையின் உயிர் காக்க போராடிய ஒரு குடும்பத்தின் உருக்கமான கதை
- செவ்வாயில் இருந்து சீனாவின் சுரொங் ரோவர் அனுப்பிய முதல் படங்கள்
- கொரோனா சடலங்களுக்கு மத்தியில் சிகிச்சை: புதுச்சேரியில் என்ன நடக்கிறது?
- தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அதிகாரம் இனி ஆணையரிடம் - அரசு முடிவுக்கு என்ன காரணம்?
- The Family Man - Season 2 தமிழர்களுக்கு எதிரான வெப் சீரீஸ் தொடரா?
- சீமான்: "2024, 2026 தேர்தல்களிலும் தனித்தே போட்டி - எந்த சமரசமும் கிடையாது"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :