You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அதிகாரம் இனி ஆணையரிடம் - 150 வருட வழக்கம் முடிவுக்கு வர என்ன காரணம்?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பள்ளிக்கல்வி இயக்குநருக்கான அதிகாரத்தை ஆணையரிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ள சம்பவம், பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 150 ஆண்டுகளாக இருந்து வந்த பழமையான பதவியை தமிழக அரசு மாற்ற முற்படுவது ஏன்? என்ன நடக்கிறது பள்ளிக்கல்வித் துறையில்?
150 ஆண்டு பழமையான பதவி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி சாலையில் பள்ளிக்கல்வி வளாகம் செயல்படுகிறது. 1854 ஆம் ஆண்டு முதல் இந்த வளாகம் இயங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கல்விக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதில் பள்ளிக் கல்வி இயக்குநரின் பங்கு மிக முக்கியமானது.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் என்றொரு பதவி உருவாக்கப்பட்டது. இதன் ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார். அரசின் கவனத்துக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கொண்டு செல்ல விரும்பும் விஷயங்கள் எல்லாம், ஆணையர் மூலமாகவே கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், `பள்ளிக்கல்வி இயக்குநரின் முழு அதிகாரத்தையும் பள்ளிக்கல்வி ஆணையர் கவனிப்பார்' என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்த கண்ணப்பன் விலகி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கண்ணப்பனுக்கு என்ன மாதிரியான பதவி வழங்கப்படும் என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. இந்த உத்தரவால் ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கங்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
அனைத்து இயக்குநர் பதவிகளும் அகற்றமா?
தமிழக அரசின் இந்த முடிவு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், ` தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி இயக்குநர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டு இனி அந்தப் பணிக்கான பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே கையாளுவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு எடுத்துள்ள இந்த முடிவு, நிர்வாக சீர்குலைவையே ஏற்படுத்தும்.
பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி மட்டுமல்லாமல், மெட்ரிக் பள்ளி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், முறைசாரா கல்வி இயக்குநர், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளும் அகற்றப்பட்டு இந்தப் பொறுப்புகள் அனைத்தும் பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு செயல்பட்டால் அதைவிட பெரிய அபத்தம் இருக்க முடியாது. பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியில் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இதுவரை இருந்த நிலையே தொடரும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்,' எனத் தெரிவித்துள்ளார்.
சீமான் சொல்வது என்ன?
``பள்ளிக்கல்வித் துறையில் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் எனும் பதவியை நிர்வாகச் சீர்திருத்தம் எனும் பெயரில் ரத்து செய்து ஆணையமாக மாற்ற முடிவெடுத்து, தமிழக அரசு செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் இம்முடிவு கல்வியாளர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் பல்வேறு விதமான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தொடர்ந்து அறிக்கை ஒன்றில் விவரித்துள்ள சீமான், `` பள்ளிக்கல்வி நிர்வாகத்தை, பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், மண்டலக் கல்வி அலுவலர் என அனுபவம் சார்ந்து படிப்படியாகப் பொறுப்பு உயர்வு பெற்றுதான் பள்ளிக்கல்வி இயக்குனராக முடியும். இப்படி அனுபவம்மிக்க, நிர்வாகத்திறன் வாய்ந்த ஒரு பொறுப்பினை முற்றாக ரத்துசெய்து ஆணையமாக மாற்ற அரசாணை வெளியிட்டிருப்பது மிகத்தவறான நிர்வாக முடிவாகும். பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே மேற்கொள்வார் என்பது ஏற்கத்தக்கதல்ல.
பள்ளிக்கல்வி ஆணையர் பதவி என்பது ஐ.ஏ.எஸ் படித்த நிர்வாக அதிகாரிகளுக்கானது. அவர்களுக்கு பள்ளிக்கல்வி முறைமை குறித்தும் பள்ளி ஆசிரியர்களின் சிக்கல்கள், மாணவ மாணவியரின் தேவைகள், பாடத்திட்டச் சிக்கல்கள் குறித்த அடிப்படை அனுபவ அறிவும், நடைமுறைச் சிக்கல்கள் சார்ந்த தீர்வுகள் எடுக்கும் திறனும் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறானது.
எனவே, பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை மூடிவிட்டு அதை ஆணையமாக மாற்றும் தமிழக அரசின் முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் அச்சப்படுவது முழுக்க முழுக்க நியாயமானது. அதுவும் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்வது குறித்து பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்த நிர்வாகிகள் இவர்களுக்கிடையே எந்தக் கருத்து கேட்புக் கூட்டமும் நடக்காத சூழலில் தமிழக அரசு திடீரென இம்முடிவை அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது" என்கிறார்.
தொன்மைக்காகவே மதிப்பு அதிகம்
இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். அவர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க மறுத்ததால், பள்ளிக்கல்வித் துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் பொறுப்பை மட்டும் ஆணையரின் அதிகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்தப் பதவியானது, சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதுதான். பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி என்பது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் பதவி. இதன் தொன்மைக்காகவே இந்தப் பதவிக்கு வருவதற்கு போட்டி நிலவும். இனி வரும் நாள்களில் பள்ளிக்கல்வி இயக்குநர் தொடர்பான முடிவுகளை ஆணையரே எடுப்பார்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` பொது சுகாதாரத்துறை, கல்லூரி கல்வி இயக்குநரகம், பொதுப்பணித்துறை போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களையே அதிகாரிகளாக நியமிப்பது வழக்கம். அவர்களின் அனுபவங்கள் அந்தத் துறைக்குப் பெரும் உதவியாக இருக்கும். இதேபோலத்தான் பள்ளிக்கல்வித்துறையும். கல்வி அலுவலர்களாக இருந்து பதவி உயர்வின் மூலம் இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என யாராக இருந்தாலும் தங்களுக்கான தேவைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரை நேரில் சந்தித்து நிவாரணம் பெற்றுக் கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இனி வரும் நாள்களில் ஆட்சிப் பணி அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆசிரியர்கள் தங்களின் குறைகளைத் தீர்த்துக் கொள்ள முடியுமா என்பதிலும் சந்தேகங்கள் உள்ளன. அரசின் புதிய நடைமுறையில் சாதகமான ஒரே அம்சம் என்னவென்றால், ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனக்கு மேலே உள்ள இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் துறைரீதியாக விவாதிப்பது என்பது எளிதாக இருக்கும்" என்கிறார்.
அரசின் முடிவு வரவேற்கத்தக்கது
இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். ``அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இதுகுறித்து அவர் பேசுவார்" என்றார் அமைச்சரின் உதவியாளர் உமாசங்கர்.
`பள்ளிக்கல்வி இயக்குநருக்கான அதிகாரம் ஆணையரிடம் ஒப்படைக்கப்படுவது சரியானதா?' என மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பள்ளிக் கல்வி இயக்குநரால் எந்த முடிவுகளையும் விரைவாக எடுக்க முடிவதில்லை. ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமைச்சரிடம் பேசுவதற்கும் ஆட்சிப் பணியில் இல்லாத ஓர் அதிகாரி அமைச்சரிடம் பேசுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அனைத்து மண்டலங்களிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி விரைவாக முடிவுகளை எடுப்பதற்கு திறமையான ஓர் அதிகாரி தேவைப்படுகிறார். இதற்காக துறைரீதியான அனுபவங்களைக் கொண்டவர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது சரியான வாதம் அல்ல" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்குக் கீழ் உதவி செய்வதற்கு துணை இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகளை நியமித்துக் கொள்ளலாம். தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கே ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி இருக்கும்போது, பள்ளிக்கல்வித் துறைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்? அரசுத் துறையில் விரைவான முடிவுகளை எடுப்பதற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி இருப்பதை அவசியமானதாகப் பார்க்கிறேன்" என்கிறார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு 'கொரோனா வார் ரூம்' - அவசர உதவி பெறுவது எப்படி? எவ்வாறு செயல்படுகிறது?
- இஸ்ரேல் - பாலத்தீன மோதலைத் தடுக்க செளதி கடைப்பிடிக்கும் உத்தி என்ன?
- தமிழக சிறைகளில் கொரோனா அதிகரிக்கிறதா? - கள நிலவரம் என்ன?
- கி.ரா என்னும் கரிசல்காட்டு நெடுங்கதை
- கொரோனா தடுப்பை விட கைதுக்கு முன்னுரிமை தந்ததா டெல்லி காவல்துறை?
- `லிவ்-இன்' ஜோடி பாதுகாப்பு கோரி வழக்கு: பஞ்சாப் உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- இஸ்ரேல்-காசா மோதல்: சண்டை நிறுத்த அழுத்தத்துக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்
- கி.ரா. மறைவு- "பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட படைப்பாளி" திரையுலக பிரபலங்கள் உருக்கம்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :