கொரோனா: தொடரும் தூய்மைப் பணியாளர்களின் மரணங்கள்? மாநகராட்சிகளில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், DIGVIJAY SINGH
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் நலனில் உள்ளாட்சி அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை எனவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது மாநகராட்சிகளில்?
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் முன்களப் பணியாளர்கள் பலரும் சிக்கித் தவிக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளும் அவசர சிகிச்சை வார்டுகளும் நிரம்பிவிட்டன. புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலரும் வாயிலில் பல மணிநேரம் காக்க வைக்கப்படுகின்றனர். இதனால், போதிய ஆக்சிஜன் வசதியில்லாமல் அவர்கள் அவதிப்படுவதும் தொடர்கிறது.
தொடரும் மரணங்கள்

இந்நிலையில், ``அரசு மருத்துவமனைகள், கோவிட் கேர் மையங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா முதல் அலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 17 தூய்மைப் பணியாளர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை. கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி 7 பேர் உயிரிழந்துவிட்டனர். அதிலும், சில மரணங்களில் கோவிட் தொற்று ஒரு காரணமாகக் கூறப்படவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை" என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு.குமாரதேவன்.

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில விவரங்களைப் பட்டியலிட்டார். `` கடந்த மே 12ஆம் தேதி உலக செவிலியர் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், செவிலியர்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பி, அவர்களுக்கான ரிஸ்க் அலவன்ஸை கொடுத்து நிலுவைத் தொகையையும் விடுவித்தார். தற்காலிகமாகப் பணிபுரிந்து வந்த செவிலியர்களையும் நிரந்தரப் பணியாளர்களாக மாற்றினார். இந்த அடிப்படையில் பத்திரிகையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்தார். இவையெல்லாம் வரவேற்கத்தகுந்த ஒன்றுதான். அதேநேரம், கோவிட் தொற்றால் தூய்மைப் பணியாளர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ரிஸ்க் அலவன்ஸ், குறைந்தபட்ச ஊதியம் உள்பட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை."
3 லட்சம் பணியாளர்களின் நிலை?

"2013 ஆம் ஆண்டே கையால் மலம் அள்ளும்முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என அரசு சொல்கிறது. ஆனால், இன்றைக்கும் ஒவ்வொரு நாளும் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இதுதொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. `தூய்மைப் பணியின்போது இறந்தால் 10 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்' என்ற உத்தரவைக்கூட நீதிமன்றம் சென்றுதான் வாங்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சென்னை உள்பட 13 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் 3 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களில் 50,000 பேர் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக வேலை பார்க்கின்றனர்.
`தூய்மை நல வாரியம்' என்ற ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. அதற்கு ஒரு தலைவர், செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கொருமுறை இந்த வாரியமானது, அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன்மூலம், ஒவ்வொரு மாநில அரசுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குகின்றது. 2017-18, 2018-19, 2019-20 ஆகிய 3 ஆண்டுகளில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், `தூய்மைப் பணியாளர்களுக்கு ரிஸ்க் அலவன்ஸ், குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை அளிக்க வேண்டும், அவர்களுக்கான இதர வசதிகளையும் அளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளது. குறிப்பாக, குப்பை அள்ளக் கூடியவர்கள், கையுறை, முக கவசம், கை, கால்களுக்கு உறை ஆகியவற்றை அணிந்து கொண்டுதான் அள்ள வேண்டும் என்ற விதி உள்ளது.
80 ரூபாய் கூலியால் என்ன பயன்?
ஆனால், அதை யாரும் பயன்படுத்துவதில்லை. அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் இதைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து போகின்றனர். இப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களை யாரும் கேள்வியெழுப்புவதில்லை. ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 80 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனை வைத்துக் கொண்டு அவர்களால் என்ன செய்துவிட முடியும்? கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் எல்லாம் நகரத்தைவிட்டு 18 கி.மீ தள்ளி வசிக்கின்றனர். இந்தச் சம்பளத்தில் அவர்களுக்கான பேருந்துக் கட்டணமே சுமையாக உள்ளது. அவர்களுக்கு நகரப் பகுதிகளில் வீடு கட்டிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
அதிலும், பெண் பணியாளர்களின் நிலைமை மிகவும் வேதனையாக உள்ளது. அவர்களுக்கென்று விடுமுறையும் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில், வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.


அதில், `தூய்மைப் பணியாளர்களுக்கு ரிஸ்க் அலவன்ஸ், மினிமம் வேஜஸ் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தர வேண்டும்' எனக் கூறியிருந்தார். இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், `2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக் கூடாது' எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு பதில் அளித்த கோவை மாநகராட்சி ஆணையர், `ரிஸ்க் அலவன்ஸ் கொடுக்க எந்த விதிகளும் இல்லை. மினிமம் வேஜஸ் தொடர்பாக அரசாணையை வெளியிட்டு கொடுத்து வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
அரசு செய்ய வேண்டியது என்ன?

பட மூலாதாரம், Twitter
குறிப்பாக, தூய்மைப் பணியாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வசதிகளை எப்போது செய்து கொடுத்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் வைக்கப்படவில்லை. அந்தப் பதில் மனுவில் உள்ள தகவல்களும் உண்மையாக இல்லை. இந்த வழக்கை கோடை விடுமுறைக்குப் பிறகு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு நாங்கள் கேட்டுக் கொள்வது ஒன்றுதான், முன்களப் பணியாளர்களில் முன்னோக்கி ஓடக் கூடியவர்களாக இருப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்களில் தற்காலிகப் பணியாளர்களாக இருப்பவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பேரிடர் கால அலவன்ஸ்களை அளிக்க வேண்டும்.
2006 ஆம் ஆண்டு `தூய்மைப் பணியாளர் நல வாரியம்' என்ற ஒன்றை வலசை ரவிச்சந்திரனை தலைவராக நியமித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த வாரியம் மீண்டும் செயல்பட வேண்டும். கடந்த அ.தி.மு.க அரசு இந்த வாரியத்தை முழுமையாக கவனிக்கவில்லை. தூய்மைப் பணியாளர்களின் நலனில் புதிய அரசு அக்கறை செலுத்த வேண்டும்" என்கிறார்.
வருகைப் பதிவேட்டில் மட்டும் அக்கறை
``கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாக 2,500 பேரும் ஒப்பந்தப் பணியாளர்களாக 3,500 பேரும் பணிபுரிகின்றனர். கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் இவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நிறைய உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த உயிரிழப்புகள் எல்லாம் மூடி மறைக்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்படுவதில்லை" என்கிறார் தமிழக அரசின் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் உறுப்பினர் யுவராஜா என்கிற அருண்.

தொடர்ந்து பேசுகையில், `` கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தூய்மைப் பணியை நிறைவு செய்துவிட்டு வரும் தொழிலாளர்களுக்கென்று அந்தந்த வார்டுகளில் குளியல் அறைகள் அமைத்துத் தரப்படவில்லை. இதனால் அவர்கள் மூலம் நோய்த் தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் இருப்பதற்கு அதிகாரிகளும் முக்கிய காரணமாக உள்ளனர். மாநகராட்சி மருத்துவமனைகள், கோவிட் கேர் மையங்கள், சித்தா, ஓமியோபதி மருத்துவமனைகளிலும் தூய்மைப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கும் அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை" என்கிறார்.
மேலும், ``கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் வந்த பின்னரும் தூய்மைப் பணியாளர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்களின் வருகைப் பதிவேட்டை மட்டுமே அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டம் உள்பட ஏராளமான திட்டங்கள் உள்ளன. இதை சரியாகச் செயல்படுத்தியிருந்தால் குப்பைகளை கையில் தொட வேண்டிய அவசியம் தூய்மைப் பணியாளர்களுக்கு நேர்ந்திருக்காது. கோவையை போல தமிழகம் முழுவதும் பாதுகாப்பற்ற சூழலில்தான் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளோடு சத்தான உணவுகளை வழங்குவதற்கும் அரசு முன்வர வேண்டும்" என்கிறார்.
மாநகராட்சி ஆணையர் சொல்வது என்ன?
`தூய்மைப் பணியாளர்கள் நலனில் அலட்சியம் காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?' என கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``முன்களப் பணியாளர்களாக இருக்கும் தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை முன்னெடுத்தோம். ஆனால், அவர்களில் சிலர், `எங்களுக்குத் தடுப்பூசி போட விருப்பம் இல்லை' எனக் கூறிவிட்டனர். ஆனாலும், அவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்துவிட்டோம். அவர்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருகிறோம். அவர்கள் வீடு மாறி தொலைதூரம் சென்ற பிறகும் அருகிலேயே தங்கியிருந்து வேலை பார்க்கும் அளவுக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்" என்கிறார்.
`அவர்களுக்கான ரிஸ்க் அலவன்ஸ் தேவையில்லை என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறுகிறாரே?' என்றோம். `` உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தெரிவித்துள்ள தகவல் குறித்து விசாரிக்கிறேன். மேலும், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக கடந்த இரண்டு நாளில் 3 பேர் இறந்து போனதாக சொல்லப்படும் தகவலில் உண்மையில்லை. இது கடந்த 15 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்கள்.
இறந்தவர்களின் வீடுகளுக்கு நான் சென்றிருந்தேன். அது கொரோனா மரணம் அல்ல, இயற்கையான மரணம்தான். அதுவும் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறவரின் கணவர்தான் இறந்தார். அரசு ஆணையின்படி தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருகிறோம். அவர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசின் வழிகாட்டுதலின்படியே இயங்கி வருகிறோம்" என்கிறார்.
பிற செய்திகள்:
- நீராவி பிடிப்பது கொரோனாவை விரட்டியடிக்குமா? - உண்மை என்ன?
- `துரைமுருகனோடு அ.தி.மு.க வேட்பாளர் சமரசமா? காட்பாடி தொகுதியில் நடந்தது என்ன?
- 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' கி. ராஜநாராயணன் காலமானார்
- அதிக நேரம் வேலை செய்து அநியாயமாக சாகும் ஊழியர்கள் - ஆய்வில் அதிர்ச்சி
- “இந்தியாவில் கொரோனா நிலைமை கைமீறிப் போய்விட்டது” - பதவி விலகிய வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல்
- இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?
- செர்னோபில் அணு உலை அருகில் விளைந்த ஆப்பிளிலிருந்து தயாரித்த மதுபானம் பறிமுதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












