You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மராத்தா இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு தமிழக இட ஒதுக்கீட்டைப் பாதிக்குமா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்கள் என்று வகைப்படுத்தி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், வேலைவாய்ப்பிலும் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் 2018ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டதுதான் மகாராஷ்ட்ரா எஸ்இபிசி சட்டம்-2018. அந்த சட்டத்தைத்தான் செல்லாது என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"அந்தச் சட்டம் அரசியல் சாசனத்தில் பிரிவு 16ல் குறிப்பிடப்பட்டிருக்கும் சமத்துவம் என்ற கொள்கைக்கு முரணானது" என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மராத்தா இனத்தவருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 2018ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா எஸ்இபிசி 2018ஆம் சட்டம் இயற்றப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு சதவீதம் 68 ஆக உயர்ந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.
நீதிபதிகள் அசோக் பூஷண், எல். நாகேஸ்வரராவ், எஸ். அப்துல் நஸீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பத்து நாட்கள் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்ட வழக்கு, மார்ச் 26ஆம் தேதி தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில், மே 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பில், அரசுப் பணிகளில் மராத்தா சமூகத்தினர் எந்த அளவுக்கு இருக்கின்றனர் என்பதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மராத்தாக்கள் போதுமான அளவில் அரசுப் பணிகளில் இடம்பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டது.
ஒரு சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், பிரிவு 16 (4)ன் படி போதுமான அளவில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்க வேண்டும். மாறாக, விகிதாசார அளவில் பிரதிநிதித்தும் இல்லை என்று கூறி இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமா என்பது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட கெக்ய்வாட் ஆணையம் விகிதாசார பிரதிநிதித்துவம் இல்லை எனக் கூறி இந்த இட ஒதுக்கீட்டை பரிந்துந்துரைத்துள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதேபோல மராத்தாக்கள் கல்வி நிலையங்களிலும் போதுமான இடங்களைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தது.
இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யும் நிலை தற்போது ஏற்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஆனால், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில அம்சங்கள் இந்தியா முழுவதிலும் இடஒதுக்கீடு வழங்கப்படும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. அதாவது, அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட 102வது திருத்தத்திற்குப் பிறகு, சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்களை அடையாளம் காணும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என இந்தத் தீர்ப்பு குறிப்பிடுகிறது.
இந்த திருத்தத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் 338 பி, 342 ஏ ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்ட பிறகு, பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கியவர்களை அடையாளம் காணும் அதிகாரம் குடியரசு தலைவருக்கும் அந்தப் பட்டியலைத் திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குமே உள்ளது என்றும் தீர்ப்பு கூறுகிறது.
அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 102வது திருத்தம் என்ன?
மாநில அளவிலான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை எந்தெந்த சமுதாயங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்கும் அதிகாரம் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் அதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கும் இருந்து வந்தது. இந்த நிலையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்ற அமைப்பிற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் அளிப்பதற்காக 2018ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 102வது திருத்தம். அதன் மூலம் 338 B, 342 A ஆகிய பிரிவுகள் அரசியல் சாஸனத்தில் சேர்க்கப்ப்பட்டன.
338 B பிரிவின் மூலம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 342A பிரிவின் மூலம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த சாதிகளை சேர்க்கலாம் என்ற அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், நாடாளுமன்றத்திற்கும் மட்டும்தான் உண்டு என குறிப்பிடப்பட்டது.
இந்தச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தச் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்த தெரிவுக்குழுவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு விளக்கம் அளித்த மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டும், மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யார், யாரைச் சேர்ப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசிடமே இருக்கும் என்று கூறினார்.
இது தவிர, மராத்தா வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதிட்ட தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 342 A பிரிவு சேர்க்கப்பட்டது மத்திய இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது தொடர்பானது தானே தவிர, இச்சட்டத் திருத்தத்தால் மாநில அரசுகளில் அரசுகளின் அதிகாரம் எந்த வகையிலும் பறிக்கப்படவில்லை என்று கூறினார். மாநில அளவில் யார், யாருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த விளக்கத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால், ரவீந்திர பட் தலைமையிலான 3 நீதிபதிகள் இதை ஏற்க மறுத்ததுடன், 342 A பிரிவில் உள்ள வாசகங்களின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எந்தெந்த சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என தங்களுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பினால், எந்த மாநில அரசும் எந்த ஜாதியினரையும் புதிதாக பிற்படுத்தப்பட்டோர் என அறிவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டுவோர் கருதுகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இந்தத் தீர்ப்பு குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
"அது உண்மைதான். அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 102வது திருத்தத்திற்குப் பிறகு யார் பிற்படுத்தப்பட்டோர் என்பதை மாநில அரசுகள் முடிவுசெய்ய முடியாது. மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் வேண்டுமென்றால் மற்றொரு திருத்தம்தான் செய்ய வேண்டுமென தவிர, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்ததைவைத்தோ, மத்திய அமைச்சர் உறுதியளித்ததை வைத்தோ எதையும் செய்ய முடியாது" என்கிறார் வழக்கறிஞர் கே.எம். விஜயன்.
நீதிமன்றம் கூறியிருப்பது சரியானதுதான் என்கிறார் அவர். மாநில அரசுகள் அரசியல் காரணங்களுக்காக பல்வேறு ஜாதியினரையும் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து வருகின்றன. இந்தத் திருத்தத்தின் மூலம், மத்திய அரசின் ஒப்புதலும் தேவை என்று இருப்பது நல்லதுதான் என்கிறார் விஜயன்.
ஆனால், இது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் என்பதோடு, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு, கல்வி உரிமைகளையும் பாதிக்கும் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி.
"எந்த ஜாதியினரைச் சேர்ப்பது என்ற அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லையென்றால் இனி மாநிலப் பட்டியலே இருக்காது. மத்தியப் பட்டியல் மட்டுமே இருக்கும். பிறகு படிப்படியாக மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே மாதிரியான இட ஒதுக்கீடு என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். இதனால், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளை பறிக்கும் சூழல் ஏற்படும். ஏற்கனவே மருத்துவக் கல்வியில் அது நடக்க ஆரம்பித்துவிட்டது" என்கிறார் கோ. கருணாநிதி.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியவற்றில் புதிதாக எந்த சாதியையும் தமிழக அரசால் சேர்க்க முடியாது. மாறாக இது தொடர்பான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி, அந்த பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டும் தான் அது சாத்தியமாகும். இதனால் கல்வியிலும், சமூகத்திலும் மிகவும் பின்தங்கிக் கிடக்கும் சாதிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் நினைத்தால் அது சாத்தியமாகாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 342 ஆவது பிரிவில் திருத்தம் செய்து, மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யார் யாரை சேர்க்கலாம் என்பதை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற புதிய பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இப்போது இழைக்கப்பட்டுள்ள சமூகஅநீதியை களைய முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.
50 சதவீதத்திற்கு அதிகமாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கான விதிவிலக்கான சூழல் ஏதும் அங்கே இல்லையென நீதிமன்றம் கூறியிருப்பதையும் விஜயன் சுட்டிக்காட்டுகிறார். "தமிழ்நாட்டில் 69 சதவீதத்திற்கு அதிகமாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து 1994லேயே வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கு இப்போதுவரை தள்ளிப்போடப்பட்டு வருகிறது. அந்த வழக்கு விசாரிக்கப்பட்டால், தமிழ்நாட்டிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு இருக்காது" என்கிறார் விஜயன்.
செவ்வாய்க்கிழமையன்று முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த விவகாரம் தொடர்பாக கலந்தாலோசித்தார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது, அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புப் பெற்றது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 9வது ஷெட்யூலில் சேர்க்கப்பட்டுவிட்டாலும், அதனை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியும் என்கிறார் விஜயன். 1974ல் கேசவானந்த பாரதி வழக்கிற்கு முன்பாக 9வது ஷெட்யூலில் சேர்க்கப்பட்ட விஷயங்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவை; தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு 1990களில்தான் 9வது ஷெட்யூலில் சேர்க்கப்பட்டது என்பதால் விரைவில் அதை நீதிமன்றம் விசாரித்து, அதனைக் குறைக்கும் என்கிறார் விஜயன்.
பிற செய்திகள்
- கணக்கில் வராத கொரோனா இறப்புகளை கணக்கிடும் இந்திய செய்தியறை
- கொரோனாவுக்கு சுய மருத்துவம் - காஜியாபாதில் செயல்படுத்திய தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி
- `கொரோனா பெருந்தொற்றை தடுத்திருக்க முடியும்` - ஆய்வுக் குழு தகவல்
- தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்க புதிய சிகிச்சை நெறிமுறை
- சிக்கல் தரும் சீன மக்கள்தொகை: குறையும் பிறப்பு விகிதம்; அதிகரிக்கும் முதியவர்கள்
- ஆக்சிஜன் தட்டுப்பாடு, சடலங்களின் குவியல்: இந்தியாவை பிரதிபலிக்கும் நேபாளம்
- சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி
- தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :