You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
10.5 % வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு, அரசுக்கு நோட்டீஸ்
10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், உடனடியாக இந்த உள் ஒதுக்கீட்டு ஆணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
மதுரை பாப்பாரப்பட்டியை சேர்ந்த போ.அபிஷ்குமார் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கடந்த பிப்ரவரி 26ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பினை வெளியிடுவதற்கு சிறிது நேரம் முன்பு தமிழ்நாடு சட்டமன்றத்தில், வன்னியர் தனி ஒதுக்கீட்டுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு 1989ம் ஆண்டு திமுக அரசு வழங்கிய 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் சாதிக்கு மட்டும் தனியாக 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்த சட்டத்தை நிறைவேற்றியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.
வன்னியர்களுக்கு மட்டும் தனியாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்திவந்த பாட்டாளி மக்கள் கட்சி, இந்த ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டதுடன், அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது.
அதே நேரம், இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டை பொதுவில் பெற்றுவந்த பிற சாதிகள் மத்தியில் இந்த சட்டத்தால் அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக தென்மாவட்டத்தில் உள்ள சீர் மரபினர் மத்தியில் இந்த சட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சட்டத்தைக் கொண்டுவரும்போதே முதல்வர் பழனிசாமி, இது தற்காலிகமான ஏற்பாடுதான் என்பதையும், சாதிவாரிக் கணக்கீடு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தென் மாவட்டத்தில் இந்த சட்டத்துக்கு தேர்தல் நேரத்தில் எழுந்த எதிர்ப்பால் இது தற்காலிக ஏற்பாடு என்பதை சில அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது.
பிற செய்திகள்:
- புலிகள் சீருடை சர்ச்சை: யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது
- சத்தீஸ்கர் தாக்குதலில் காணாமல் போன வீரரை விடுவித்த மாவோயிஸ்டுகள்
- எடப்பாடி Vs ஸ்டாலின்: சென்னை கோட்டையை பிடிப்பது யார்?
- மாஸ்க் அணியாத எளியவரை சாலையில் போட்டு அடிக்கும் போலீஸ்: மனம் கலங்க வைக்கும் வீடியோ
- திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாகும் நிலையில் நக்சலைட் தாக்குதலில் இறந்த வீரர்
- சத்தீஸ்கர் தாக்குதல்: காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரர் கதி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: