You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாகும் நிலையில் நக்சலைட் தாக்குதலில் இறந்த வீரர்
(முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.)
திருமணம் நடந்து 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாகும் நிலையில் பாதுகாப்புப் படை வீரர் நக்சலைட்டு தாக்குதலில் பலியான சோகம் நடந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"சத்தீஷ்கரில் சமீபத்தில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற சண்டையில், பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. 31 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவர், திருமணம் நடந்து 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாக இருந்த சூழலில் நக்சலைட்டு தாக்குதலில் பலியான சோகம் நடந்துள்ளது.
பிஜாப்பூரின் செர்பால் கிராம பகுதியை சேர்ந்தவர் கிஷோர் எந்திரிக். கடந்த 2002ம் ஆண்டு கிஷோருக்கும், ரிங்கி என்பவருக்கும் திருமணம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பின்னர் கிஷோர் தந்தையாக உள்ளார். அவரது மனைவி ரிங்கி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நக்சல்களுக்கு எதிரான தாக்குதலில் கிஷோரின் சகோதரர் ஹேமந்தும் அவர்களை எதிர்த்து போரிட்டுள்ளார். இதில், வேறு பிரிவில் இருந்த தனது சகோதரரை பாதுகாத்த கிஷோர் நக்சலைட்டுகளின் தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளார்.
அவரது இறுதி சடங்குகளை சகோதரர் முன்னின்று நடத்தியுள்ளார். இதில் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"2047-ம் ஆண்டில் புதிய இந்தியா உருவாகும்"வெங்கையா நாயுடு நம்பிக்கை
வரும் 2047-ம் ஆண்டில் புதிய இந்தியா உருவாகும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளதாக இந்து தமிழ்த் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக குஜராத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "கடந்த 1947-ம் ஆண்டில் நாடு விடுதலை அடைந்தது. அதன்பிறகு சுதந்திர போராட்ட தலைவர்களின் அடிச்சுவட்டில் நடந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளோம். இப்போது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இந்த நேரத்தில் இந்தியாவின் வலிமையை உலகம் உணர்ந்து அங்கீகரித்துள்ளது. இதற்காக உழைத்த பிரதமர் நரேந்திர மோதி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
வரும் 2047-ம் ஆண்டில் நாட்டின் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது புதிய இந்தியா உருவாகும். அடுத்த 25 ஆண்டுக்குள் நமது நாடு அபரிமித வளர்ச்சி பெறும். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
"வாக்குப் பதிவு இயந்திரங்களை கண்காணித்திட வேண்டும்"
வாக்கு எண்ணிக்கை வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன் கண்காணித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் பணபலம் - அதிகார பலம் ஆகியவற்றை மீறியும் - ஆங்காங்கே காவல் துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்தும் கழகத்தினரும் - கூட்டணிக் கட்சித் தோழர்களும் தேர்தல் பணியாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
அமைச்சர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் கழக வேட்பாளர்களும், கழக முன்னணியினரும் களத்தில் நின்று பணியாற்றி இன்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவிற்குப் பேருதவியாக நின்று ஆக்கபூர்வமான ஜனநாயகக் கடமையாற்றியிருப்பது போற்றுதலுக்குரியது.
வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும் - தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று நம் வேட்பாளர்கள் இருந்திடலாகாது.
ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் - மதுரை மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை நாம் இந்த நேரத்தில் மறந்துவிடக் கூடாது.
எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நம் தலையாயக் கடமையாகிறது.
எனவே, கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் - கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவரும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட மையங்களில் மிகுந்த கவனத்துடனும் - எச்சரிக்கையுடனும், 24 மணி நேரமும் - இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காவல்துறையின் பணி என்று நினைத்து கழக வேட்பாளர்கள் - தோழர்கள் கவனக்குறைவாக இருந்திடாமல் - வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் "டர்ன் டியூட்டி அடிப்படையில்" அமர்ந்து - கண்காணித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: