You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`கொரோனா பெருந்தொற்றை தடுத்திருக்க முடியும்` - ஆய்வுக் குழு தகவல்
கொரோனா பெருந்தொற்றை தடுத்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுயாதீன ஆய்வுக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச அரசுகள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் "ஒரு நச்சுக் கூட்டு" என அந்த குழு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசரநிலை என்று ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அறிவித்திருக்க வேண்டும் என அந்த குழு தெரிவித்துள்ளது.
இந்த உலகில் விரைவாக மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால் மேலும் ஒரு பெரிய நோய்த்தொற்று ஏற்படலாம் என்றும் அந்த குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கொரோனா காலத்தின் முந்தைய கால வாழ்க்கைக்கு சென்று கொண்டிருக்கின்றன.
இருப்பினும் ஆசிய நாடுகளில் தற்போது கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்களும், அதிக எண்ணிக்கையிலான இறப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்ல அதன் அண்டை நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி
பெருந்தொற்றுக்கான தயாரிப்பு மற்றும் எதிர்வினைக்காக உலக சுகாதார நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுயாதீன குழு `கோவிட் - 19 - இதை கடைசி பெருந்தொற்றாக மாற்றுவோம்` என்ற பெயரில் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.
இந்த குழுவின் நோக்கம் இந்த கொரோனா தொற்றால் எவ்வாறு 30 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்றும், எவ்வாறு சுமார் 15 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்றும் ஆராய்வதே.
"இன்றைக்கு நாம் இருக்கும் இந்த சூழலை நாம் தடுத்திருக்க முடியும்," என இந்த குழுவின் துணைத் தலைவர் எலன் ஜான்சன் சர்லீஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"எண்ணிலடங்கா தோல்விகள், தாமதங்கள், தகவல் பரிமாற்றம் சரியாக நிகழ்த்தப்படாமை" ஆகியவை இதற்கு காரணம் என அந்த குழு தெரிவித்துள்ளது.
மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி, சீனாவில் பெருந்தொற்று ஏற்பட்டபோது அதை சர்வதேச அவசரநிலையாக தற்போது அறிவித்ததைக் காட்டிலும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அறிவித்திருந்திருக்க வேண்டும் என அந்த குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜனவரி 22ஆம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் முதல் கூட்டம் நடைபெற்றபோதே அவசரநிலை என்று அறிவித்திருந்திருக்க வேண்டும், அதைவிடுத்து ஜனவரி 30ஆம் தேதி வரை காத்திருந்திருக்க கூடாது என அந்த குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்புக்கு பிறகும் நாடுகள் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன என்று தெரிவித்துள்ள அந்த குழு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிப்ரவரி மாதம் முழுவதும் நடவடிக்கை எடுக்காமல் தனது மருத்துவமனைகள் நிரம்பத் தொடங்கிய பிறகே பயணக் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் மற்றொரு பெருந்தொற்று ஏற்படாமல் இருக்க சர்வதேச அச்சுறுத்தல்கள் கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு, இம்மாதிரியான சூழலில் நாடுகளே பொறுப்பு என்று கூறும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை கொரோனா பெருந்தொற்று சூழலை இந்த அறிக்கை `21ஆம் நூற்றாண்டின் செர்னோபிள் நிகழ்வு` என்று விவரிப்பதை நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு விஷயம் என பிபிசியின் சர்வதேச சுகாதாரப் பிரிவு ஆசிரியர் நயோமி க்ரிம்லே தெரிவிக்கிறார்.
மேலும் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கிய 2020ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வீணடிக்கப்பட்டுவிட்டது என்றும் அந்த அறிக்கை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் நயோமி.
பிற செய்திகள்
- தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்க புதிய சிகிச்சை நெறிமுறை
- சிக்கல் தரும் சீன மக்கள்தொகை: குறையும் பிறப்பு விகிதம்; அதிகரிக்கும் முதியவர்கள்
- ஆக்சிஜன் தட்டுப்பாடு, சடலங்களின் குவியல்: இந்தியாவை பிரதிபலிக்கும் நேபாளம்
- சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர் - உருக்கமான காட்சி
- தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :