என் பெயரையோ, பதவியையோ தவறாக பயன்படுத்தக் கூடாது - இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ.இறையன்பு எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். `என்னுடைய நூல்களை எந்தத் திட்டத்தின்கீழும் வாங்கக் கூடாது' என பள்ளிக் கல்வித்துறைக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற நாள் முதலாக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், அன்புடன் வேண்டுகிறேன் என்ற தலைப்பில் செய்தி அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் பணிநேரம் முடிந்த பின்பும் விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும் என் அனுபவங்களை தொகுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராக பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின்கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். எந்த வகையிலும், என் பெயரோ பதவியோ தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதே நோக்கம்.

அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்குப் பதிலாக விநியோகிக்க வேண்டாம் என அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன். இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின் உள்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு, சபாநாயகரானார் அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநில முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்பட 234 உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அனைவரும் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று சட்டப்பேரவையின் 16ஆவது கூட்டத்தொடர் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, மு.க. ஸ்டாலினுக்கு தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களும், அதன் பிறகு எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனக்கூறி ஸ்டாலின் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி, கடவுள் அறிய என்றும் கூறி பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.அகர வரிசைப்படி மற்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக, சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு போட்டியிட ராதாபுரம் தொகுதி திமுக உறுப்பினர் அப்பாவு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அப்பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட பகல் 12 மணிவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பேரவையின் புதிய தலைவராக அப்பாவு தேர்வாகியிருக்கிறார்.

இதே போல துணைத் தலைவர் பதவிக்கு கு. பிச்சாண்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்தும் யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், பேரவை துணைத் தலைவராகியிருக்கிறார். இருவரது தேர்வு தொடர்பான அறிவிப்பை பின்னாளில் சட்டப்பேரவை செயலாளர் வெளியிடவிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இருவரும் புதன்கிழமை தங்களுடைய பதவிகளை முறைப்படி ஏற்கவிருக்கின்றனர்.

கேரளாவின் மூத்த அரசியல்வாதி 101 வயது கெளரி அம்மாள் மரணம்

கேரள மாநில அரசியலில் மிகவும் வயோதிகம் அடைந்த 101 வயது கெளரி அம்மாள் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமிதியின் தலைவருமான கே.ஆர். கெளரி அம்மாள், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நல பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரை சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

1919ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, ஆலப்புழாவின் பத்தனக்காடு கிராமத்தில் கே.ஏ. ராமன், பார்வதி அம்மாள் தம்பதிக்கு ஏழாவது மகளாகப் பிறந்தார் கெளரி அம்மாள். 1948ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த அவர், 1964ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அரசியல் பணியைத் தொடர்ந்தார். 1994ஆம் ஆண்டில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியேற்றியது. அதன் பிறகு 1994இல் ஜனாதிபதிய சம்ரக்ஷணா சமிதி என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார். வயது மூப்பு மற்றும் உடல் நல பிரச்னை காரணமாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கெளரி அம்மாள் விலகினார்.

கேரள மாநில அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துள்ள கெளரி அம்மாள், அம்மாநிலத்தில் நீண்ட காலம் அமைச்சராக இருந்த பெருமைக்குரியவர். 1957ஆம் ஆண்டு, அரூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அவர், 13 முறை எம்எல்ஏ ஆக இருந்துள்ளார். அவர் எம்எல்ஏ ஆக தேர்வான 1957ஆம் ஆண்டில்தான் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக ஆட்சிக்கு வந்தது. அந்த காலத்தில் அவர் கலால், வருவாய் துறை, குடிமைப்பொருள் விநியோகத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலத்தில்தான் புரட்சிகர நில சீர்திருத்த மசோதாவை கெளரி அம்மாள் கொண்டு வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :