இந்திய கொரோனா திரிபு 'சர்வதேச கவலைக்குரியது': உலக சுகாதார அமைப்பு - தடுப்பூசி, மருந்துகள் வேலை செய்யுமா?

இந்தியாவில் கடந்த ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு 'சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு' (variant of global concern) என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

இந்தத் திரிபில் உள்ள B.1.617 மரபணுப் பிறழ்வு பிற திரிபுகளை விட மிகவும் சுலபமாகப் பரவக் கூடியது என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் இது குறித்த மேலதிக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் திரிபின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுகள் மட்டுமே 'சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு' என வகைப்படுத்தப்பட்டிருந்தன.

சுலபமான பரவல், தீவிர நோய் தொற்றை உடலில் உண்டாக்குதல், இவற்றை எதிர்கொள்ள உடலிலுள்ள நோய் எதிர்ப்பான்களுக்கு (antibodies) குறைவான ஆற்றலே இருத்தல், இவற்றுக்கு எதிராக சிகிச்சை மற்றும் தடுப்பூசியின் வீரியம் போதிய அளவு இல்லாமல் போவது ஆகிய பல தன்மைகளில் ஏதாவது ஒன்றை கொண்டிருக்கும் மரபணுப் பிறழ்வு 'கவனத்துக்குரிய திரிபு' (variant of interest) என் வகைப்பாட்டிலிருந்து 'கவலைக்குரிய திரிபு' என்ற வகைப்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பால் நிலை உயர்த்தப்படும்.

இந்திய திரிபுக்கு எதிராக கொரோனாதடுப்புசிகள் செயல்படுமா?

இந்தியாவில் நிலவி வரும் கொரோனா இரண்டாம் அலைக்கும் இந்தத் திரிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கூறுகிறது. எனினும் இது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் இந்திய கொரோனா திரிபுக்கு எதிராக செயல்படும் திறன் உடையவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. எனினும் இது திரிபுக்கு எதிரான தடுப்பூசிகளின் வீரியம் குறைந்து இருப்பதற்கான சில ஆதாரங்கள் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் திங்களன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் திங்கள் கிழமை வரை 3 கோடியே 48 லட்சம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. இந்து ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 2.5% மட்டுமே.

மருத்துவமனை முதல் சுடுகாடு வரை நரேந்திர மோதி அரசுக்கு அழுத்தம்

இந்தியாவில் மருத்துவமனைகள் முதல் சுடுகாடு வரை இடப் பற்றாக்குறை நெருக்கடியை உண்டாக்கியுள்ள சூழலுக்கு இந்த திரிபுதான் காரணமா என்ற நோக்கிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உண்டாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக உள்ளது.

திங்களன்று இந்தியாவில் 3,66,16 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் 3754 பேர் கோவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர் என்றும் அலுவல்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அரசு வெளியிடும் தரவுகளை விட உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

செயற்கை ஆக்சிஜனை கொண்டு வரும் டேங்கர் தாமதமாக வந்தடைந்ததால் ஆக்சிஜன் இல்லாமல் ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் 11 கோவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்குகள் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் கடந்த மாதம் முதலே அமலில் உள்ளன. ஆனால் கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கத்துக்கும் அழுத்தங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்து சமய விழாக்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடுவதற்கும், தேர்தல் பிரசாரங்களை பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதித்ததும் தற்போதைய நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது என்று ஏற்கனவே நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கம் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :