You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட 706 ஆசிரியர்கள் கோவிட் காரணமாக உயிரிழப்பா?
- எழுதியவர், சமீராத்மஜ் மிஷ்ரா
- பதவி, லக்னெளவிலிருந்து இந்தி பிபிசிக்காக
உத்தரபிரதேசத்தில் கொரோனா அலைக்கு இடையே பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படுவது குறித்து ஆரம்பத்திலிருந்தே கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் இப்போது கொரோனா தொற்று காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவது வேறுவிதமான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்டு உயிரிழந்ததாக கூறப்படும் 706 ஆசிரியர்களின் பட்டியலை , மாநில தேர்தல் ஆணையம் மற்றும் உ.பி. முதலமைச்சரிடம் ஒப்படைத்த ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சங்கம், மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறும் கோரியுள்ளது.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரியுள்ளன. அதே நேரத்தில் ஆசிரியர் சங்கத்தின் இந்த கூற்று குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
பயிற்சி அளிப்பதிலிருந்து வாக்குப்பதிவு வரை மாநில தேர்தல் ஆணையம் எங்குமே கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறத்தவில்லை என்று ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக நிலைமை மோசமானது.
தேர்தல் பணியில் ஈடுபட்ட 706 ஆசிரியர்கள் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும், ஏராளமான ஆசிரியர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் கூறி ஆசிரியர் சங்கம், மாவட்டம் வாரியான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களின் குடும்பத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிடவே முடியாது என்று சங்கம் கூறுகிறது.
"கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்தல் ஆணையம் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தியது., கோவிட்டிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு, சங்கம் தேர்தலுக்கு முன்பு ஏப்ரல் 12 அன்று கோரியது. ஆனால் இதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை," என்று உத்தரபிரதேச ஆரம்பக்கல்வி ஆசிரியர் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் தினேஷ் சந்திர ஷர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.
"தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த நிலையில், பாதுகாப்பு ஏதுமின்றி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாக்குப்பதிவு பணிக்காக அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நோய்வாய்பட்டனர். இதுவரை சுமார் 706 ஆசிரியர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்."என்றார் அவர்.
உயர் நீதிமன்றத்தை எட்டிய விவகாரம்
ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பணிக்கு பிறகு தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் சிகிச்சைக்குப் பின்னர் இறந்தவர்களின் பட்டியலை இந்த அமைப்பு தயாரித்துள்ளது என்று தனது கூற்றை நியாயப்படுத்தி தினேஷ் சந்திர ஷர்மா வாதிடுகிறார்,.
"மே 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் உள்ளது. பஞ்சாயத்து தேர்தல்கள் எப்படியும் நடத்தப்பட்டுவிட்டன, சில நாட்களுக்குப் பிறகு முடிவுகள் வந்தால் என்ன நஷ்டம்?,"என்று டாக்டர் தினேஷ் சந்திர ஷர்மா கேள்வி எழுப்புகிறார்.
தேர்தல் ஆணையம் எங்கள் பேச்சைக் கேட்கவில்லையென்றால், ஆசிரியர்கள் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா சீற்றத்திற்கு இடையே பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தியது குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் பதில் கோரியுள்ளது. பஞ்சாயத்து தேர்தலின் போது பணியில் ஈடுபட்டு, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்குமாறும் உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது.
முன்னதாக, பணியில் இருந்த 135 ஆசிரியர்கள் கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பான விசாரணை மே 3ஆம் தேதி நடைபெறும்.
இது குறித்து சரியான தகவல்களை வழங்குமாறு மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலுக்காக மாநில தேர்தல் ஆணையரை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அவருடன் உரையாட முடியவில்லை.
"மே 3ஆம் தேதி, தேர்தல் ஆணையக்குழு உயர்நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும். ஆனால் ஆணையத்தின் பல அதிகாரிகளும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஆணையம், மாவட்ட அதிகாரிகளுக்கு கடிதங்களை எழுதி, பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் இறப்பு விவரங்களைக் கேட்டுள்ளது, "என்று மாநில தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.
அதேசமயம், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் தேர்தல்கள் நடத்தப்பட்டன; தேர்தல் செயல்முறையை தேர்தல் ஆணையம் நடத்தியது; இதுபோன்ற சூழ்நிலையில், தனக்கு இதில் அதிக பங்கு இல்லை என்று மாநில அரசு கூறியுள்ளது.
புள்ளிவிவரம் குறித்து ஆராய உள்ள மாநில அரசு
"தேர்தல் பணி மற்றும் மீதமுள்ள நடைமுறைகள் தேர்தல் ஆணையம் மூலம் முடிவு செய்யப்பட்டன. இருப்பினும், உயிரிழந்த ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் அவர்கள் மாநில அரசு பணியாளர்களாக இருந்ததால், அவர்களின் இறப்பை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின்படி தகுந்த உதவி வழங்கப்படும், "என்றும் மாநில தகவல்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் நவனீத் செய்கல் தெரிவித்தார்.
இருப்பினும், தேர்தல் பணியில் ஈடுபட்டு இறந்தவர்களின் பட்டியல் இரண்டு நாட்களில் 135 இல் இருந்து 706 ஆக அதிகரித்தது, நவனீத் செய்கலை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தத் தரவுகளை மாநில அரசு சரிபார்க்கும் என்றும், இது உண்மையாக இருந்தால், குடும்பங்களுக்கு பொருத்தமான மற்றும் விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும் என்றும் செய்கல் கூறுகிறார்.
பட்டியல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும்கூட, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறக்கும் செய்திகள், முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல்களுக்குப்பிறகு அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப்பிறகு வரத் தொடங்கியது.
ஆக்ராவில், பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுத் திரும்பிய ஆரம்ப பள்ளிகளைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர். அவர்களில் நான்கு பேர் நகரசபை பள்ளிகளிலும், ஒருவர் அரசு உதவி பெறும் பள்ளியிலும் பணியாற்றியவர்கள்.
ஏப்ரல் 15 ஆம் தேதி நடந்த பஞ்சாயத்து தேர்தலில் தேர்தல் பணியை செய்த மாவட்ட ஆசிரியர்கள் பின்னர் வீடு திரும்பியதாக உத்தரபிரதேச உயர் ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் மகேஷ்காந்த் ஷர்மா தெரிவித்தார்.
அப்போதிருந்து அவர்கள் காய்ச்சல், சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டனர். இவர்கள் அனைவரின் கொரோனா சோதனையும் பாஸிட்டிவாக இருந்தது. இதில் ஆறு பேர் சிகிச்சையின் போது இறந்தனர்.
இதற்கிடையில் இந்த விஷயத்திலும் அரசியல் ஆரம்பமானது. கொரோனா தொற்று காரணமாக இறந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.
அதே நேரத்தில், பஞ்சாயத்து தேர்தலில் ஏராளமான ஆசிரியர்களின் மரணம் பயமுறுத்துவதாக உள்ளது; அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மாநிலப் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வாத்ரா, குறிப்பிட்டுள்ளார்.
உத்திர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல்கள் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டன. கடைசி கட்டமாக ஏப்ரல் 29 அன்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெறும்.
ஆசிரியர்கள் தொடர்ந்து முறையிட்ட போதிலும் வாக்குப்பதிவின்போது அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் விளைவை அவர்கள் சந்திக்கவேண்டியிருந்தது. இந்த நிலையில் விரைவான தொற்றுப்பரவலைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைக்கப்படவேண்டும் என்று ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: