கொரோனா இரண்டாம் அலை: “நோயாளிகளின் கடைசி மூச்சு வரை காப்பாற்ற போராடுகிறோம்” – ஒரு செவிலியரின் வேதனை

பட மூலாதாரம், VIVEKI KAPOOR
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்திருக்கிறது. கொடூரமான மரணங்களையும், நோயாளிகள் படும் வேதனைகளையும் மருத்துவப் பணியாளர்கள் எப்போதும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல முன்கள மருத்துவப் பணியாளர்களின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. அப்படியொருவர்தான் செவிலியர் விவேகி கபூர். கொரோனா தமது வாழ்வை எப்படி மாற்றியது, தாம் பெற்ற சிறு வெற்றிகள், தோல்விகள் ஆகியவை குறித்து பிபிசியிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் பொறுப்பு செவிலியராக பணியாற்றுகிறேன். என்னுடைய மேற்பார்வையில் 25 செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். கொரோனா பெருந்தொற்று தொடங்கியபோதே பலர் பணியில் இருந்து விலகி விட்டார்கள். இவ்வளவு அபாயகரமான பணியைச் செய்வதற்கு தாங்கள் வாங்கும் சம்பளம் சொற்பமானது என அவர்கள் கூறினார்கள்.
கொரோனாவின் இரண்டாவது அலை ஏராளமான நோயாளிகளை மருத்துவமனைக்கு அள்ளி வந்துவிட்டது. டெல்லியின் பல மருத்துவமனைகளைப் போல எங்களது மருத்துமனையும் நிரம்பிவிட்டது. சிகிச்சைக்காக வந்தவர்களை திருப்பி அனுப்ப நேர்ந்தது.
வழக்கமான காலத்தைவிட 5 மடங்கு பணிகளைச் செய்கிறோம். அனைத்துச் செவிலியரும் கூடுதல் நேரம் பணியாற்றியாக வேண்டும். சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்துவிடுகிறோம். ஆனால் நேரத்துக்குப் போக முடிவதில்லை.

பட மூலாதாரம், VIVEKI KAPOOR
22 ஆண்டுகளாக நான் செவிலியராகப் பணியாற்றி வருகிறேன். இதற்கு முன்பு பேரிடர்க் காலங்களில் அதிகமான நோயாளிகள் கொத்தாக கொண்டுவரப்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நடப்பது முன் எப்போது கண்டிராதது. இப்போதெல்லாம் பணி முடியும்போது மிகவும் சோர்ந்து போய்விடுகிறேன். கிடைத்த இடத்தில் தூங்கிவிடலாம் என்பது போலத் தோன்றுகிறது. படுக்கையைக் கூட எதிர்பார்ப்பதில்லை.
செவிலியர் பணி மிகவும் புனிதமானது என்று உலகமே போற்றுகிறது. அதனால்தான் எங்களை "சிஸ்டர்" என்று அழைக்கிறார்கள். எங்களைக் குடும்பத்தில் ஒருவராகக் கருதுகிறார்கள்.
ஒரு மருத்துவமனைக்கு நோயாளி வரும்போதெல்லாம் அவர் முதலில் சந்திப்பது செவிலியரைத்தான். அங்கேயே ஒரு பிணைப்பு உருவாகிவிடுகிறது.
கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நோயாளிகள் மிகவும் பயந்திருப்பார்கள். அவர்களுக்கு உத்வேகம் அளிக்க முயற்சிப்போம்.
சிங்கம் - மான் கதையை நான் அவர்களுக்குக் கூறுவேன். மான் மிக வேகமாக ஓடக்கூடியது. ஆனாலும் சிங்கம் அதைப் பிடித்துவிடுகிறது. அதற்குக் காரணம் பயம்தான் என்று அவர்களிடம் கூறுவேன். எப்போதும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும், எதிர்மறையாகச் சிந்தித்தால் கொரோனா வெற்றி பெற்றுவிடும் என்று கூறி அவர்களுக்கு உத்வேகம் ஊட்டுவேன்.
கூப்பிட்ட நேரத்துக்கு செவிலியர் வருவதில்லை என நோயாளிகள் முதலில் புகார் தெரிவித்து வந்தார்கள். இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. மிகவும் ஒத்துழைப்புடன் நடந்துகொள்கிறார்கள்.
நாங்கள் கடினமாகப் பணியாற்றுகிறோம் என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் சாப்பிட்டீர்களா என்று கேட்பார்கள், தேநீர் அருந்த வருமாறு அழைப்பார்கள்.
முதல் அலையின்போது ஏராளமான முதியவர்கள் மருத்துவமனைக்கு வந்தார்கள். இப்போது 15 முதல் 17 வயதுடைய சிறுவர்களைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.
எங்களால் முடிந்த அளவுக்கு நோயாளியின் கடைசி மூச்சு இருக்கும்வரை அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்கிறோம்.
நோயாளி குணமடைந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நோயாளிக்கு நம்மால் இயன்ற அளவு உதவி செய்திருக்கிறோம் என்ற திருப்தி ஏற்படும்.
நோயாளி இறந்துவிட்டால், மனம் நொறுங்கிப் போவேன். அதிலும் இளம் வயதுடையோரின் மரணம் என்னை உலுக்கி எடுத்துவிடும். உடைந்துவிடுவேன்.



பட மூலாதாரம், Reuters
அண்மையில் எனது மகளின் தோழியின் தந்தை இறந்துவிட்டார். அவருக்கு இளம் வயதுதான். அவரது மரணம் என்னை வேதனைப்பட வைத்தது. ஆனால் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறு என்ன என்னால் செய்ய முடியும்?
கடந்த வாரத்தில் மட்டும் எனது மருத்துவமனையில் ஆக்சிஜன் அளவு குறைந்து 25 பேர் இறந்துவிட்டனர். எனக்கு ஆற்றாமையும் கோபமும்தான் ஏற்பட்டது.
இந்தியர் என்பதில் நான் எப்போதும் பெருமை கொள்வேன். ஆனால் தற்போது நாட்டில் நடப்பதைப் பார்த்து மனம் உடைந்துவிட்டது. நாட்டின் தலைவர்கள்தான் இதற்குக் காரணம். அனைவரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பற்றி மட்டும்தான் அக்கறைப்படுகிறார்கள்.
கொரோனா எனது பணியை எப்போதும் பதற்றமானதாக மாற்றிவிட்டது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அழுத்தத்தை உருவாக்கிவிட்டது.
அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் எனது கணவருக்கு கடந்த இரு வாரங்களாக உடல்நிலை சரியில்லை. நான் வேலையையும் பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு 3 குழந்தைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
இதற்கிடையே மதுராவில் வசிக்கும் எனது 90 வயதான அம்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெருங்கவலை ஏற்பட்டது. அவர் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.
ஆனால் சில நாள்களில் அவர் குணமாகி வீடு திரும்பிவிட்டார். நினைத்துப் பாருங்கள், 90 வயதான ஒருவர் எப்படி கொரோனா வைரஸை வென்றிருக்க முடியும் என்று? என்னுடைய பணியின் பலனாகவும் நோயாளிகளின் ஆசீர்வாதத்தாலும், கடவுள் திருப்பியளித்த கொடை இதுவென்று நான் நினைத்துக் கொண்டேன்.
என் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினரின் அன்புதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. என்னை நினைத்துக் கவலைப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் எங்களது பணி எவ்வளவு முக்கியமானது என்பதும் அவர்களுக்குப் புரிகிறது. "வீட்டைவிட்டு வெளியே வந்தால் கொரோனா தொற்றிக் கொள்ளும் என்று நாங்கள் அஞ்சிக் கொண்டிருக்கும்போது நீங்கள் வெளியே சென்று அதை எதிர் கொள்கிறீர்கள்," என்று கூறுகிறார்கள்.
எனது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தனது குடும்பத்தின் நலனுக்காக தினமும் ஒரு விளக்கு ஏற்றி வழிபடுவார். கொரோனா பெருந்தொற்று தொடங்கிய பிறகு நாள்தோறும் எனக்காக கூடுதலாக ஒரு விளக்கு ஏற்றி வருவதாக அவர் கூறியபோது நெகிழ்ந்துபோனேன். இதுதான் எனது பணியையும் வாழ்க்கையும் சிறப்பானதாக மாற்றுகிறது.
செவிலியர் விவேகி கபூர் டெல்லியில் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டேவிடம் பகிர்ந்து கொண்டது.
பிற செய்திகள்:
- கொரானா வைரஸ் நெருக்கடி: இதுவரை இல்லாத பின்னடைவை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோதி
- டெல்லி பாட்ரா மருத்துவனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 12 பேர் உயிரிழப்பு
- "நான் அவர்களிடம் படுக்கை கேட்டேன், அவர்கள் எனக்குச் சடலங்களைக் காட்டினார்கள்"
- 18 வயதுக்கு மேல் கொரோனா தடுப்பூசி: மோதி அரசின் அறிவிப்பை செயல்படுத்த மாநிலங்கள் தயாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












