You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசி: மாநிலங்களுக்கான கோவேக்சின் விலை ரூ. 400 ஆக குறைப்பு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு வழங்க சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்ட ரூ. 600 தொகையை ரூ. 400 ஆக குறைத்திருப்பதாக கோவேக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல, மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்து விலையும் டோஸ் ஒன்றுக்கு ரூ. 1,200 ஆக அந்த நிறுவனம் குறைத்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு, அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்து விநியோகித்து வருகிறது. அந்த நிறுவனம், சமீபத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தனது தடுப்பூசி விலையை ரூ. 400 ஆக உயர்த்தியது. பிறகு அந்த விலையில் ரூ. 100 குறைக்கப்பட்டு ரூ. 300க்கு வழங்கப்படும் என சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்தார்.
இந்தியாவில் கோவிஷீ்ல்டு, கோவேக்சின் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசியை புழக்கத்தில் விற்று வருவதால், அவை திடீரென விலையை உயர்த்திய நடவடிக்கை பரவலான விமர்சனங்களை உள்நாட்டில் தூண்டியது. கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கோரினார்கள். ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி வழங்கியபோதும், அந்த தடுப்பூசி எப்போது இந்தியாவில் விற்பனையாகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இருப்பினும், தயாரிப்பு செலவினத்தை கருத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான கோடியில் ஏற்படும் செலவினத்தை சமாளிக்க நிதி வழங்குமாறு மத்திய அரசை தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரி வருகின்றன. இத்தகைய சூழலில்தான் தடுப்பூசி விற்பனை விலையை அவை அதிகரித்து பிறகு குறைத்தன.
கோவேக்சின் தயாரிக்கும் தடுப்பூசி மருந்து நிறுவனம் விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக வியாழக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், நாட்டில் நிலவும் மிக சிக்கலான பெருந்தொற்று சூழலில் நாட்டின் பொது சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களை கருத்தில் கொண்டு மாநில அரசுகளுக்கு வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி மருந்தை டோஸ் ஒன்றுக்கு ரூ. 400க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு முதலில் முன்கள பணியாளர்களுக்கும் அதன் பிறகு 60 வயது கடந்தவர்கள், பின்னர் 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ஆகியோர் தடுப்பூசி பெறலாம் என்று அறிவித்தது. இவர்களின் வரிசையில் 18 வயது முதல் 45 வயதுடையவர்களும் மே 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த தடுப்பூசி நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உடன்பாட்டின்படி, மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் 50 சதவீத கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி மருந்தை வாங்க ஆர்டர் செய்து அதை நாட்டின் இளம் தலைமுறையினருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், மத்திய அரசுக்கு வழங்கப்படும் தடுப்பூசியை டோஸ் ஒன்றுக்கு ரூ. 150 என்ற அளவில் விற்க சீரம் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களில் சுமார் 1.33 கோடி பேர் தடுப்பூசி பெற அரசு ஆதரவுடன் இயங்கும் கோவின் செயலியில் முன்பதிவு செய்துள்ளனர்.
பிற செய்திகள்:
- கொரோனா சிகிச்சை உபகரணங்கள்: ஐ.நா உதவியை நிராகரித்த இந்தியா
- பருவநிலை மாற்றம்: ஒரு சிறிய பச்சை கல் நமது எதிர்காலம் குறித்து விடுக்கும் எச்சரிக்கை
- யோகி ஆதித்யநாத்: "கொரோனா ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை" - பிறகு உயிரிழப்பு அதிகரிப்பது ஏன்?
- கொரோனா தடுப்பூசி தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா?
- என்ஜிடி நிபுணத்துவ உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்த கிரிஜா வைத்தியநாதன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: