You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தாக்கம்: பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை மீண்டும் ரத்து
உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக காணப்படுவதையடுத்து, அடுத்த வாரம் இந்தியாவுக்கு மூன்று நாட்கள் வருகை தரவிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும் அந்த உத்தேச சந்திப்பு சூழ்நிலைக்கு தக்கபடி காணொளி வாயிலாக நடத்தப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் கோவிட்-19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் பிரதமர் அடுத்த வாரம் இந்தியா வரமாட்டார் என இரு தரப்பிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் வரும் நாட்களில் இந்தியா, பிரிட்டன் இடையிலான உறவுகளைப் புதுப்பிக்கும் திட்டங்களை காணொளி வாயிலாக நடத்தும். இந்தியா, பிரிட்டன் இடையிலான உறவு முழுமையான அளவை எட்டப்பட வேண்டும் என்பதில் உறுதிகாட்டும் இரு நாட்டு தலைவர்களும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நேரில் சந்தித்து அதை முன்னெடுத்துச் செல்லவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 26 ஆம் தேதி இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அவர் சந்தித்துப் பேச உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும், அவரது அலுவல்பூர்வ பயண திட்டம் வெளிப்படையாக பகிரப்படவில்லை. டெல்லியைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மற்றும் மும்பைக்கும் போரிஸ் ஜான்சன் செல்வதாக கூறப்பட்டது. ஆனால், இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் தற்போது வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் உள்ளது.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையாக இருந்தது. பிரிட்டனில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அந்நாடு கடுமையான தாக்கத்தை அனுபவிக்கத் தொடங்கியது.
அதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டறியப்பட்ட வேளையில், கட்டுப்பாடுகளுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய அரசு தொடங்கியது.
அப்போது தமது நாட்டில் வைரஸ் பரவலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தமது இந்திய பயணத்தை மேற்கொள்ள இயலவில்லை என்று போரிஸ் ஜான்சன் கடைசி நேரத்தில் கூறியிருந்தார். கொரோனா பரவல் தணிந்த பிறகு இந்தியாவுக்கு வருவேன் என்று போரிஸ் ஜான்சனும் உறுதியளித்திருந்தார்.
அதன்படியே அவரது இந்திய பயணம் ஏப்ரல் 26ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் தீவிரமாக உள்ளதால் இரண்டாவது முறையாக தனது பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்திருக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கடைசியாக 2019ஆம் ஆண்டில் பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது நடந்த தனி நிகழ்வில் நேரில் சந்தித்துப் பேசினார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான சந்திப்பு தொடர்ந்து தள்ளிப்போகிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் 1 மற்றும் ஏப்ரல் 8ஆம் தேதி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி மருந்தை பிரதமர் நரேந்திர மோதி போட்டுக் கொண்டார்.
இதேபோல, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் டோஸ் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார். அந்நாட்டில் இந்த மாதம் முழுவதும் இரண்டாவது தடுப்பூசி பெறும் மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பிரிட்டனில் எவ்வளவு பாதிப்பு?
இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சக தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 1,619 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இத்துடன் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே ஆறுபத்து ஓராயிரத்து எண்ணூற்று ஐந்தாக பதிவாகியிருக்கிறது.
உலக அளவில் அதிக பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அதற்கு அடுத்த நிலையில், இந்தியா, பிரேஸில், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன.
பிரிட்டனில் இதுவரை பதிவான கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 44 லட்சத்து மூன்றாயிரத்து அறுபது. வைரஸ் உயிரிழப்பு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 518 ஆகும்.
பிற செய்திகள்:
- இந்திய வகை கொரோனா: தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதா? - பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு
- கொல்கத்தாவில் இனி மம்தா பேனர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு
- தமிழகத்தின் சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் வேம்பு - எப்படி சாத்தியம்?
- பெர்செவெரன்ஸ் ரோவரில் அனுப்பிவைக்கப்பட்ட ஹெலிகாப்டர்: இன்று செவ்வாயில் பறக்கவுள்ளது
- "நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: