கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுவதற்கான வயது வரம்பை நரேந்திர மோதி அரசு ஏன் நீக்கவில்லை?

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள, இந்திய அரசு இப்போது தனது விதிமுறைகளில் மேலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல மாநில அரசுகளிடமிருந்து எழுந்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி கோரியுள்ளது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் மக்களின் உயிரின் மதிப்பு, இந்திய மக்களின் உயிரின் மதிப்பைவிட அதிகமா என்று டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ராகவ் சத்தா, பிரதமரிடம் கேள்வி கேட்டுள்ளார். இந்திய அரசின் தடுப்பூசி ஏற்றுமதி முடிவை குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் டாக்டர் ரகு ஷர்மா, இதேபோன்ற கோரிக்கையை மத்திய அரசிடம் விடுத்துள்ளார். "மாநிலத்தில் கொரோனா தொற்று விரைவாக பரவுவதால், மத்திய அரசு உடனடியாக கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும். இதனால் குறுகிய காலத்தில் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் தொற்று பரவுவதை நிறுத்த முடியும்," என்று திங்களன்று அவர் தெரிவித்தார்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக அல்லாத கட்சி ஆட்சியில் உள்ளது.

இது தவிர, இந்திய மருத்துவ சங்கமும் செவ்வாய்க்கிழமை இதே போன்ற கோரிக்கையை விடுத்தது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஐ.எம்.ஏ , பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

வெவ்வேறு பிராந்தியங்களிலிருந்து இவ்வளவு கோரிக்கைகள் விடுக்கப்படும் நிலையில் அது குறித்து உடனடியாக மோதி அரசு ஏன் ஒரு முடிவை எடுக்கவில்லை. மத்திய அரசின் சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இதற்கு பதிலளித்தார்.

"உலகில் எல்லா இடங்களிலும் தடுப்பூசி போடுவது, மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல, தேவையின் அடிப்படையில் செய்யப்படுகிறது" என்று அவர் கூறினார்.

இதற்காக, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற உலகின் பல நாடுகளின் உதாரணத்தையும் அவர் அளித்தார். மேலும் ஒவ்வொரு நாடும் வயது வரம்புடன் கூடிய தடுப்பூசி இயக்கத்தை கட்டம் கட்டமாக ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.

ஆயினும் மக்கள் இதே கேள்வியை தொடர்ந்து எழுப்புகிறார்கள். கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான வயது வரம்பை மோதி அரசால் ஏன் இப்போது நீக்க முடியாது?

இதைப் புரிந்து கொள்ள நான் டாக்டர் சுனிலா கர்குடன் பேசினேன். டாக்டர் சுனிலா கர்க், மெளலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில், சமூக மருத்துவத் துறையின் தலைவராக உள்ளார்.

வயது வரம்புடன் கூடிய தடுப்பூசி இயக்கத்தின் தொடக்கத்தை அவர் நியாயப்படுத்துகிறார். அரசின் முடிவின் பின்னணியில் உள்ள விஷயங்கள் பற்றி அவர் விளக்குகிறார்.

முதல் வாதம்: அனைவருக்கும் கொடுப்பதில் தேவைப்படுபவர்கள் விடுபடக்கூடாது

45+ வயது வரம்பில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்றுநோய் மிகவும் ஆபத்தானது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால், இளையவர்கள் முதலில் தடுப்பூசி பெறுவார்கள், வயதானவர்கள் அதைப் பெற முடியாது.

அரசால் அவர்களுக்கு தடுப்பூசி கொடுக்க முடியாமல் போய்விட்டால், கொரோனா காரணமான இறப்புகளும் அதிகரிக்கும்.

இரண்டாவது வாதம்: தடுப்பூசி புதியது, தடுப்பூசியை வீடு வீடாகச்சென்று அளிக்க முடியாது

கோவிட் -19 தடுப்பூசி மிகக் குறைந்த காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால், சில பாதகமான விளைவுகளும் உள்ளன. இந்தியாவில் இதுவரை எந்த பெரிய அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை. ஆனாலும் நாம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

எனவே, வீடு வீடாகச் சென்றோ ரயில் நிலையத்தில் ஒரு சாவடி அமைத்தோ இதைக்கொடுக்க முடியாது. இந்திய அரசு தடுப்பூசி போட மக்களின் ஒத்துழைப்பை மட்டுமே சார்ந்திருப்பதற்கான இரண்டாவது முக்கிய காரணம் இது.

மூன்றாவது வாதம்: தடுப்பூசி தயக்கத்தை போக்குவது

ஆரம்பத்தில் தடுப்பூசி பெறுவது குறித்து மக்கள் மத்தியில் நிறைய தயக்கம் இருந்தது. அதனால்தான், மருத்துவர்கள் மற்றும் கள ஊழியர்கள் உட்பட பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

இப்போது மருத்துவர்களுக்கான பதிவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி பெறுவதற்கான தங்கள் விருப்பத்தை பல மருத்துவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

இத்தகைய சூழ்நிலை 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஏற்படக்கூடாது. எனவே அவர்களுக்கு இன்னும் சிறிது கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும்.

தடுப்பூசி இயக்கம் ஜனவரி மாதம் தொடங்கியது. இப்போது மூன்று மாதங்கள் கூட முடிவடையவில்லை.

நான்காவது வாதம்: கண்காணித்தல் கடினமாக இருக்கும்

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். 80 கோடி மக்களுக்கு தடுப்பூசி அளிப்பதே அரசின் இலக்கு. இதற்கு 160 கோடி டோஸ் தேவைப்படும்.

அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட தனியார் துறையின் உதவியும் தேவைப்படும்.

அத்தகைய சூழ்நிலையில் கண்காணிப்பு சிக்கல் ஏற்படலாம்.

கொரோனா ஒரு புதிய நோய். இப்போது மத்திய அரசுதான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறது. வயது வரம்பை நீக்குவதால் மத்திய அரசின் கண்காணிப்பில் சிக்கல்கள் உருவாகலாம்.

ஐந்தாவது வாதம்: முககவசம் என்பது இளைஞர்களுக்கு ஒரு தடுப்பூசி

வீட்டில் அமர்ந்திருக்கும் குறிப்பிட்ட வயதினருக்கு அரசு தடுப்பூசி அளிக்கிறது, ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்டவர்கள்தான் அதிக கொரோனாவைப் பரப்புகின்றனர் என்று ஒரு வாதம் நிலவுகிறது.

முக கவசம்தான் தங்களுக்கு தடுப்பூசி என்பதை இளைய வயதினர் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் சமூக இடைவெளியை கைப்பிடிக்கவேண்டியது முக்கியம். சோப்பால் கைகளை கழுவும் பழக்கத்தை அவர்கள் விட்டுவிடக்கூடாது. தடுப்பூசி 100 சதவிகித பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆறாவது வாதம்: தேசியவாதமும், கோவேக்ஸும் ஒன்றாக பயணிக்கவேண்டும்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் இந்தியா. இதன் காரணமாக இந்தியாவிற்கு சில பொறுப்புகளும் உள்ளன. கோவேக்ஸ் செயல்பாட்டில் இந்தியா கூட்டாளியாக உள்ளது. (அதாவது தேவையுள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி).

அதே நேரத்தில் இந்தியா இந்த தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு ஒரு சமூக பொறுப்பு என்ற நிலையில் விநியோகித்தது. ஆனால், மத்திய அரசு, நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை.

தற்போது, நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அரசு கவனம் செலுத்துகிறது. ஆனால் ஒன்று அல்லது இரண்டு தடுப்பூசிகள் முழு இந்தியாவிற்கும் போதாது.

இந்தியாவில் மேலும் ஆறு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது பற்றி பேசப்படுகிறது. அவை அங்கீகரிக்கப்பட்டவுடன் இந்தியா தனது சமூகப் பொறுப்பை மீண்டும் ஒரு முறை நிறைவேற்ற முடியும்.

இந்தியாவில் அடுத்த கட்டத்தில், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று டாக்டர் சுனிலா நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் சில மாநில அரசுகள் உடனடியாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்றும் சில அரசுகள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோருகின்றன.

பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?

இதற்காக மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ராஜேஷ் பரேக்கிடம் நான் பேசினேன்.

'தி கொரோனா வைரஸ் ' ' தி வேக்சின் புக்' என்ற புத்தககங்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய வாதங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

முதல் வாதம்: கொரோனாவின் இரண்டாவது அலையைச் சமாளிக்க வயது வரம்பை நீக்குவது அவசியம்

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவின் சில மாநிலங்களை தாக்கியுள்ளது. முதல் அலையை விட இப்போது கொரோனா வேகமாக பரவுகிறது. கொரோனாவுக்கு எதிராக மக்களின் நோயெதிர்ப்புத்திறன் சில பகுதிகளில் அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் இருப்பது செரோ ஆய்வில் கண்டறியப்பட்டது.

மக்களுக்கு நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும் இடங்களில், 'ஹாட் ஸ்பாட்ஸ்' உருவாகும் அதிக ஆபத்து உள்ளது. ஆகவே இப்போது அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போட அரசு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் இரண்டாவது அலையை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.

இரண்டாவது வாதம்: தடுப்பூசி இலக்கை விரைவில் அடைய முடியும்

முதல் கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போட இந்திய அரசு இலக்கு வைத்திருந்தது. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகும் அது இன்னமும் முழுமையடையவில்லை.

இந்தியாவில் ஐந்து சதவிகித மக்கள் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனர். பிரிட்டனில் 50 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. தடுப்பூசி போடுவதன் வேகம் இஸ்ரேலிலும் நன்றாக உள்ளது. இதன் காரணமாக அங்கு நோய் பரவலும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது . இதுபோன்ற நாடுகளிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது இந்தியாவில் தடுப்பூசிகள் வழங்கப்படும் வேகத்தை பார்க்கும்போது, எல்லா மக்களுக்கும் தடுப்பூசி போட மூன்று ஆண்டுகள் ஆகலாம். வயது வரம்பை நீக்குவதன் மூலம் இந்த கால அளவை மேலும் குறைக்க முடியும்.

மூன்றாவது வாதம்: தடுப்பூசி வீணாவதை தடுத்தல்

தடுப்பூசி போடமுடியாத காரணத்தால் சில தடுப்பூசிகள் வீணாகப் போகின்றன என்பதை இந்திய அரசு, மாநில அரசுகளுடனான சந்திப்பில் ஒப்புக் கொண்டுள்ளது. இந்தக் காரணத்தால் இந்தியாவில் ஏழு சதவிகித தடுப்பூசி வீணடிக்கப்படுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வயது வரம்பை நீக்கினால் தடுப்பூசி வீணாவதை தடுக்க முடியும்.

தடுப்பூசி வீணாவதை வாக்-இன் தடுப்பூசி மூலம் பெருமளவில் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை மேலும் குறைக்க உற்பத்தியாளர்கள் தடுப்பூசிகளின் சிறிய குப்பிகளைத் தயாரிக்க வேண்டும். இன்று, இருபது டோஸ் கொண்ட ஒரு குப்பி வருகிறதென்றால், அதை ஐந்து டோஸ் குப்பியாக செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று டாக்டர் சுனிலா குறிப்பிட்டார்.

நான்காவது வாதம்: இரண்டாவது அலையில் தடுப்பூசி போடுவது நிற்கக்கூடாது

இரண்டு மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதாக டாக்டர் பரேக் கூறுகிறார். இரண்டாவது அலைக்கு இடையில் ஒன்ரிரண்டு நாட்கள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட வேண்டியிருந்தது. இந்தியாவில் தொற்று எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவரும் நிலையில், இதுபோன்ற சூழல் இங்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மத்திய அரசின் பொறுப்பாகும். எனவே, இந்தியா இஸ்ரேலிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது வாதம்: இந்தியா மற்ற நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசி இயக்கத்தின் வேகம் அதிகமாக உள்ள காரணத்தால் மக்கள் தொகையின் பெரும் பகுதிக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் கொரோனா அலை அங்கு படிப்படியாக குறைந்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு இந்திய அரசு தனது திட்டமிடலை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை, இந்தியா தனது குடிமக்களுக்கு செலுத்திய தடுப்பூசியின் அளவைக்காட்டிலும் அதிக தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பியிருந்தது. அன்றைய சூழலுக்கு இது ஏற்றதாக இருந்தது. ஒரு மனிதனிடமிருந்து தொடங்கிய இந்த நோய் இன்று உலகில் இந்த நிலையை எட்டியுள்ளது. எனவே, தடுப்பூசி இயக்கத்தை உடனே விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: