You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா விதி மீறல்: 300 முறை ஸ்குவாட் பயிற்சி தண்டனையால் உயிரிழந்த 28 வயது இளைஞர்
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்கு 300 முறை ஸ்குவாட் போன்ற உடற்பயிற்சியை செய்யுமாறு காவலர்கள் கூறியுள்ளனர்.
அதைச் செய்து முடித்த இளைஞர் அடுத்த சில நாட்களில் உயிரிழந்துவிட்டார் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
பிலிப்பைன்ஸில் இருக்கும் கேவிடே மாகாணத்தில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருக்கின்றன.
டரென் மனாக் பெனரெடொண்டோ என்பவர், பிலிப்பைன்ஸில் உள்ள கேவிடே மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை மாலை 18.00 மணிக்கு தண்ணீரை வாங்கியவரை காவல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய நபர்கள் அனைவரையும் ஒன்றாக 100 முறை ஸ்குவாட் போன்ற உடற்பயிற்சியை செய்யுமாறு கூறியுள்ளனர்.
அனைவரும் சரியாகச் செய்யவில்லை எனில், மீண்டும் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி 300 முறை ஸ்குவாட் பயிற்சியை செய்திருக்கிறார்கள் என இறந்த டரென் மனாக்கின் உறவினர் அட்ரியன் கூறியுள்ளார்.
டரென் மனாக் வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிக்கு மிகுந்த வலியோடு வீடு திரும்பினார் என அவரது சகோதரர் கூறினார்.
டரென் மனாக் அசையவே மிகவும் சிரமப்பட்டார் என அவரோடு உறவில் வாழ்ந்து வந்த லிவ் இன் கூட்டாளி ரெசெலின் பால்செ கூறினார். அது வெறுமனே ஒரு உடல் வலி என டரெ மனாக் கூறியதால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார் ரேசெலின்.
அதற்கு அடுத்த நாள் அவர் நிலை குலைந்து விழுந்து மூச்சு விடுவதை நிறுத்திவிட்டார்.
டரென் மனாக் பெனரெடொண்டோ இறந்ததை அவரது உறவினர் அட்ரியன் லுசெனா ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.
ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்களுக்கு எந்த வித உடல் ரீதியான தண்டனைகளும் வழங்கப்படுவது இல்லை. வெறுமனே அதிகாரிகள் அறிவுரைகளை மட்டுமே வழங்கின்றனர். ஒருவேளை எந்த அதிகாரியாவது தண்டனை வழங்குகிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என, ஜெனரல் ட்ரியாஸ் நகரத்தின் காவல் துறைத் தலைவர் மார்லோ சோலெரோ உள்ளூர் ஊடகத்திடம் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒர் விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறும், அப்படிப்பட்ட தண்டனைகள் கொடுமையானது எனவும் கூறியுள்ளார் ஜெனரல் ட்ரியாஸ் நகரத்தின் மேயர் ஓனி ஃபெரர். மேலும், தான் டரென் மனாக்கின் குடும்பத்தினரோடு தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார் மேயர் ஃபெரர்.
இச்சம்பவத்திற்கு முன்பே, கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் துன்புறுத்தப்படுவதாக மனித உரிமைகள் குழு கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
காவலர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள், கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களை நாய்களை அடைக்கும் கூண்டில் அடைப்பதாகவும், உச்சி வெயிலில் கட்டாயப்படுத்தி அமர வைப்பதாகவும் மனித உரிமைகள் குழு கூறியது நினைவுகூரத்தக்கது.
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என கடந்த வியாழக்கிழமை, ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டெ மிகக் கடுமையாக எச்சரித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்? அஜித் வாக்களிக்க வந்தபோது என்ன நடந்தது?
- நிர்வாணமாக படம் எடுத்து வெளியிட்டதாக 11 இளம் பெண்கள் உள்பட 12 பேர் கைது
- அசாமில் 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: வாக்குப் பதிவு தொடங்கியது
- சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - 400 சொற்களில் எளிய விளக்கம்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: