You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஊடரங்கு அல்லது பொது முடக்கத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக வெளிவரும் தகவலை நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நாளை (ஏப்ரல் 6, செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள், தேர்தல் பரப்புரையின்போது கட்டுக்கடங்காமல் வரும் கூட்டம் போன்ற காரணங்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாநிலத்தில் 3,581 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் வைரஸ் பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 8,99,807 ஆக பதிவாகியிருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 1,344 பேருக்கு வைரஸ் பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2,53,760 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாநிலத்தில் 14 கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இத்துடன் மாநிலத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 778ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு மற்றும் அது தொடர்புடைய சிகிச்சை நடவடிக்கையை ஆராய, சென்னையில் தடுப்பூசி கையிருப்பில் உள்ள கிடங்குக்கு சென்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தீவிரமாகி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தில் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என தகவல்கள் வெளிவருகிறதே என்று கேட்கப்பட்டது.
அத்தகைய தகவல்கள் வெறும் வதந்தியே என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறிய ராதாகிருஷ்ணன், கொரோனா வைரஸ் பரவலுக்கான காரணங்களையும் அதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் விவரித்தார்.
"தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை. ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமலாகும் என்ற தகவலை நம்ப வேண்டாம். அதே சமயம், வரும் 7ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
"தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதுவரை 32 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது. 54 லட்சம் கொரோனா தடுப்பூசி நம்மிடம் இருந்தாலும் தினமும் 15 ஆயிரம் பேர்தான் தடுப்பூசி போடுகின்றனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
"சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்," என்று கூறிய அவர், தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நாளில் என்ன செய்ய வேண்டும்?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் வாக்குச்சாவடிக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா பாதித்தவர்களும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்குரிமை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது கடைசி ஒரு மணி நேரம் மட்டும் அவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். இது தொடர்பாக தங்களின் விவரத்தை தேர்தல் வாக்குச்சாவடி அல்லது தேர்தல் ஆணைய தொலைபேசி உதவி எண்ணில் பெற்று தங்களின் வாக்குப்பதிவு தொடர்பான தகவலை அளித்தால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதித்தவர் வாக்குப்பதிவு செலுத்த வரலாம்.
"ஏப்.7ஆம் தேதிக்கு பிறகு கொரோனா பரவாமல் தடுக்க காய்ச்சல் குறித்து வீடு வீடாக நேரில் ஆய்வு செய்யப்படும். தடுப்பூசி போடுவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்.
காய்ச்சல் வந்தால் தள்ளிப்போடாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா பாதிப்பு போல் தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார் ராதாகிருஷ்ணன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: