கொரோனா வைரஸ்: உலக அளவில் 30 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள் - இந்தியாவில் என்ன நிலை?

பட மூலாதாரம், Reuters
உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 30 லட்சத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் எச்சரித்த மறு நாளே இந்த புதிய உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியிருக்கிறது.
உலக அளவில் சனிக்கிழமை நிலவரப்படி 14 கோடியே ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 393 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது பதிவாகியுள்ளது. இதில் 3.15 கோடி பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில், இந்தியாவில்தான் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் ஒரு கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக பதிவாகியுள்ளது.
உயிரிழப்பு அளவில் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோவுக்கு அடுத்த நிலையில், இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 649 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக சுமார் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் நோய் எதிர்ப்பு ஊசி மருந்தான ரெம்டெசிவீரும் இல்லாத நிலையை நோக்கி தலைநகரம் சென்று கொண்டிருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் புதிதாக 19 ஆயிரத்து 486 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக பதிவாகியுள்ளது. இதேவேளை 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், தற்போதைய நிலவரம் குறித்து இநதிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறினார்.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் ஆறாயிரம் படுக்கை வசதிகளை டெல்லியில் உருவாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அமைச்சருக்கு கொரோனா
இந்த நிலையில், இந்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை அவரே தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பிரதமர் மோதி அவசர ஆலோசனை
இந்திய பிரதமர் மோதி, நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று தீவிரம் குறித்து அரசுத்துறை உயரதிகாரிகளுடன் சனிக்கிழமை மாலையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது அவர், வைரஸ் பெருந்தொற்றை கையாளும் நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களுடன் மிக நெருக்கமாக மத்திய அரசு பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலக அதிகாரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் போதுமான அளவுக்கு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், ரெம்டெசிவீர் எதிர்ப்பு மருந்தின் விநியோகம் தடையின்றி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், தேசிய அளவில் தடுப்பூசி தயாரிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை அப்போது அதிகாரிகளுக்கு பிரதமர் பிறப்பித்ததாகவும் அவரது அலுவலக அதிகாரி கூறினார்.
தொடரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு
இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் போதிய படுக்கை வசதிகளும் இல்லாத நிலை இருப்பது, பிபிசி குழு நடத்திய கள விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு இடத்தில் ஐந்து மடங்கு விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதும் பிபிசி விசாரணையில் தெரிய வந்தது.
தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் நடந்து வரும் கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பொதுமக்களும் பக்தர்களும் வந்துள்ளதால் அங்கிருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும்போது அவர்கள் வழியாக வைரஸ் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த வாரத்தில் மட்டும் அங்கு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,600 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்தே இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கும்பமேளாவில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிகார் மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வர் நிதிஷ் குமார் ஆலோசனை நடத்தினார். ஆனால், அதில் முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில் அடுத்த சுற்று கூட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சனிக்கிழமை மட்டும் 9.344 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் டேராடூனில் கண்டறியப்பட்ட 1,179 பாதிப்புகள், ஹரித்வாரில் கண்டறியப்பட்ட 617 பாதிப்புகளுடன் சேர்த்து புதிதாக சனிக்கிழமை 2,753 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் அந்த மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 403 ஆக பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில், நாக்பூரில் 6,956 பாதிப்புகளும் 79 உயிரிழப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.
கேரளா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 855 பேருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் 11,269 பேருக்கும், மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 7,713 பேருக்கும் வைரஸ் பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் போபாலில் வரும் 26ஆம் தேதிவரை கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 17 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், அவருக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர்
- இளவரசர் ஃபிலிப் இறுதி நிகழ்வு இன்று: 30 பேர் மட்டுமே பங்கேற்க ஏற்பாடு
- இளவரசர் ஃபிலிப்: அரசி மீது கொண்டிருந்த தளராத விசுவாசம் கொண்டாடப்படும்
- விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை - ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
- விவேக் மறைவு, கண்ணீரில் தமிழ்நாடு: நரேந்திர மோதி, எடப்பாடி, ஸ்டாலின், கலைஞர்கள் இரங்கல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












