கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்

கோவை ஸ்மார்ட் சிட்டி

கோவை பெரியகுளம் அருகே 12 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. சுவரின் அருகே குடியிருப்புகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கோவை மாநகரப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளத்தை சுற்றிலும் புனரமைத்து, நடைபாதை மற்றும் பூங்காக்கள் உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக, பெரியகுளத்தின் அருகே உள்ள கரும்புக்கடை பகுதியில் அமைந்துள்ள குளக்கரையை ஒட்டிய காலி இடத்தில் சுமார் 12 அடி உயரம் கொண்ட, நீளமான சுவர் அமைக்கப்படிருந்தது.

கோவையில் நேற்று இரவு தொடர் மழை பெய்ததையடுத்து, சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இன்று அதிகாலை 3 மணி அளவில் சுவர் இடிந்து விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். சுவரின் அருகே குடியிருப்புகள் இல்லாததால் இச்சம்பவத்தில் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மழை காரணமாகவே சுவர் இடிந்து விழுந்ததாக தெரிவித்தனர். மேலும், சுவர் இடிந்தது தொடர்பாக உரிய விசாரணை நடைபெறும் எனவும் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :