உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா பாதிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகத்தின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் தானும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக நேற்று அவர் அறிவித்திருந்த நிலையில், இப்போது இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக இன்று (ஏப்ரல் 14, புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சில ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதால், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு நோய்த்தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் நான், மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன். நான் அனைத்து வேலைகளையும் மெய்நிகர் முறையில் செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

"மாநில அரசின் அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் நடைபெறுகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்வதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் பரவல் தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,84,372 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் இந்த நோய்த்தொற்றால் 1,027 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,73,825 ஆகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,72,085 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 11,11,79,578 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: