ரஃபால் விமானம்: இடைத்தரகருக்கு பிரெஞ்சு நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியதாக சர்ச்சை

ரஃபால்

பட மூலாதாரம், Getty Images

சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரஃபால் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைப்புச் செய்தியாகி வருகிறது.

ரஃபாலின் உற்பத்தி நிறுவனமான டஸ்ஸோ, ஒப்பந்தத் தொகைக்கு அதிகமாக, தனியாக, ஒரு இந்திய இடைத்தரகருக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளது என்று பிரெஞ்சு ஊடக நிறுவனமான மீடியாபார்ட் அளித்த பிரத்யேக அறிக்கை தான் இந்தச் சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது.

அகஸ்டா ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில் ஈடுபட்டதற்காக இந்த இடைத்தரகர் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. கிக்பேக் மற்றும் ஊழல் குறித்த மீடியாபார்ட்டின் மூன்று பகுதி அறிக்கை, ரஃபால் ஊழல் தொடர்பான சில புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது, சில புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

'இந்தியாவில் ரஃபால் போர் விமானத்தின் விற்பனை: ஒரு மோசடி மறைக்கப்பட்ட கதை' என்ற தலைப்பில் வெளியான இந்த அறிக்கை, "இந்த சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தின் மூலம், டஸ்ஸோ நிறுவனம், அந்த இடைத்தரகருக்கு 10 மில்லியன் யூரோக்களை வழங்கியது. இந்த இடைத்தரகர் மீது வேறு ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமான அகஸ்டா ஹெலிகாப்டர் விவகாரத்திலும் விசாரணை இந்தியாவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த வலைதள அறிக்கையின்படி, பிரெஞ்சு ஊழல் தடுப்பு நிறுவனமான 'எஃப்.ஏ' இன் வழக்கமான தணிக்கையின் போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது என்று கூறப்படுகிறது. மேலும், விஷயம் வெளிவந்த பிறகும் அதிகாரிகளை எச்சரிக்க வேண்டாம் என்று எஃப் ஏ முடிவு செய்தது குறித்தும் அதிர்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, ரஃபால் விமானங்களின் மாதிரியை வழங்க இடைத்தரகருக்கு பணம் வழங்கப்பட்டது. இந்த மாடல்களின் எண்ணிக்கையின்படி, ஒரு விமானத்தின் மாதிரியின் விலை 20,000 யூரோக்கள் எனக் காட்டப்பட்டது. ஒரு போலி விமான மாதிரியின் விலை 20,000 யூரோக்களாக எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியை அறிக்கை எழுப்பியுள்ளது.

சுதந்தரமான விசாரணைக்கு கோரிக்கை

இந்திய விமானப்படை

பட மூலாதாரம், IAF

திங்களன்று, இந்தச் செய்தி குறித்த காங்கிரஸ் கட்சியின் கருத்து வெளிவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த காங்கிரஸ் கோரியது.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், "60,000 ரூபாய் கோடி மதிப்பிலான, நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கூடுதல் தொகை, இடைத்தரகர்கள், சம்பந்தப்பட்டிருப்பது இந்த ஒப்பந்தத்தின் மீதான ஐயங்களை மீண்டும் ஒரு முறை வலுவாக்கியுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிவந்தது உண்மையாகி விட்டது. மோடி அரசாங்கம், "கொள்ளையடிக்க மாட்டோம், யாரையும் கொள்ளையடிக்க விட மாட்டோம்" என்று கூறி வந்த நிலையில், இப்போது கமிஷன், இடைத் தரகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதை நாங்கள் கூறவில்லை, ஒரு பிரெஞ்சு செய்தி நிறுவனமான நியூஸ் போர்டல் நேற்று இரவு பிரெஞ்சு ஊழல் தடுப்பு நிறுவனம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. ரூ .60,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள இந்த மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில், அரசாங்க கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்துவது, தேசிய நலன்களுடன் விளையாடுவது, முதலாளித்துவப் போக்கு இப்போது வெளிப்பட்டுள்ளது. பாதுகாப்பு கொள்முதல் செயல்முறை வெளிப்படையாகக் கேள்விக்குரியதாகியுள்ளது. " என்று தெரிவித்தார்.

மறுபுறம், ஆளும் பாரதிய ஜனதா இந்தச் செய்தியை மறுத்துள்ளது. இந்த அறிக்கை 'ஆதாரமற்றது' என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புறக்கணித்துள்ளார்.

ரஃபால் ஊழல் என்பது என்ன?

இந்திய விமானப்படை

பட மூலாதாரம், IAF

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஃபால் தொடர்பாக இந்தியாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இது மோடி அரசாங்கத்தின் மிகப்பெரிய நெருக்கடியாக கருதப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அரசாங்கத்தைக் குற்றமற்றதாக அறிவித்தது. அத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது, ஒரு வருடம் கழித்து, இந்த ஒப்பந்தத்தில் அரசாங்கத்தை குற்றமற்றதாக அறிவித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரி மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . உச்சநீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு, அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்டிருந்தது. ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு மாநிலங்களவையில் உறுப்பினராக்கப்பட்டார்.

பிரெஞ்சு பாதுகாப்பு குழுவான டஸ்ஸோவின் 36 ரஃபால் ஜெட் போர் விமானங்களை வாங்குவதற்காக 2016 ஆம் ஆண்டில் பிரான்சும் இந்தியாவும் 7.8 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ரஃபால் என்பது இரண்டு என்ஜின் மல்டி-ரோல் போர் விமானமாகும், இது பிரெஞ்சு நிறுவனமான டஸ்ஸோ ஏவியேஷனால் தயாரிக்கப்படுகிறது. இதில் பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

126 விமான ஆர்டர்கள், 36 ஆக குறைந்தது ஏன்?

இந்திய விமானப்படை

பட மூலாதாரம், IAF

இரண்டாவது அதன் விலை பற்றியது. டஸ்ஸோ ஏவியேஷனின் 2016 ஆண்டு அறிக்கையில், டிசம்பர் 31, 2016 நிலவரப்படி, 20 கோடியே மூன்று லட்சத்து 23 ஆயிரம் யூரோவுக்கான பழைய ஆர்டர் இருந்தது. 31 டிசம்பர் 2015 நிலவரப்படி, 14 கோடியே ஒரு லட்சத்து 75 ஆயிரம் யூரோவுக்கான ஆர்டர்கள் இருந்தன.

2016 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் 36 ரஃபேல் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டதாக டஸ்ஸோ கூறுகிறது.

மூன்றாவது சர்ச்சை தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனம் பற்றியது. அவரது நிறுவனமான ரிலையன்ஸ் டிஃபென்ஸின் சுயவிவரம் மற்றும் நிறுவனத்தின் தகுதி குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்களின் எண்ணிக்கையின்படி, அனில் அம்பானியின் இந்நிறுவனம் அனுபவமற்றது என்று கூறப்படுகிறது. இந்த சர்ச்சையின் போது, ஃப்ரான்ஸின் முன்னாள் அதிபர், பிரான்சுவா ஹாலந்தின் அதிர்ச்சியூட்டும் அறிக்கையும் வெளிவந்தது. இதில், பல மில்லியன் டாலர் 'ரஃபேல் ஒப்பந்தத்தில்', அனில் அம்பானியின் நிறுவனம், இந்திய அரசாங்கத்தால் ஆஃப்செட் கூட்டாளியாக பிரான்சின் மீது 'திணிக்கப்பட்டது ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் குறித்த முக்கிய நிகழ்வுகளும் நேரங்களும்

இந்திய விமானப்படை

பட மூலாதாரம், IAF

ஜனவரி 31, 2012: பிரான்சுடன் ரஃபால் பற்றிய பேச்சுவார்த்தைகள் 2012 முதல் நடந்து வருகின்றன. ஏரோஃபைட்டர் மற்றும் ஸ்வீடனின் சாப் போன்ற நிறுவனங்களை வென்று இந்த டெண்டரை தஸ்ஸோ பெற்றது. ஆனால் இரண்டு வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் முறையான உடன்பாடு எட்டப்படவில்லை.

ஜூலை 2014: மோதி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களுக்குள், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான லாரன்ட் பேபியஸ் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து ரஃபால் ஒப்பந்தத்தை வலியுறுத்தினார்.

டிசம்பர் 2014: இந்தியாவும் பிரான்சும் 126 ரஃபால் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை விரைவாகக் கண்காணிக்க விலை நிர்ணயம் மற்றும் டஸ்ஸோவுக்கு ஒரு உத்தரவாத விதி போன்றவை குறித்து ஆய்ந்தன.

ஏப்ரல் 10, 2015: பாதுகாப்பு கொள்முதல் அளவுருக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் இந்திய விமானப்படை 36 ரஃபேல் போர் விமானங்களைப் பறக்கத் தயாரான நிலையில் வாங்குவதாகவும் இவை இந்திய விமானப்படையின் இரண்டு படைப்பிரிவுகளுக்கு 18 போர் விமானங்களை வழங்கும் எனவும் அறிவித்தன.

அக்டோபர் 3, 2016: இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் மற்றும் டஸ்ஸோ ஏவியேஷன் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சி இது என்றும் அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 2018: ஃப்ரான்சின் முன்னாள் அதிபர் பிரான்சுவா ஹோலாந்தெ இந்திய ஆஃப்செட் கூட்டாளராக ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை அனுமதிப்பதைத் தவிர, வேறு வழி இருக்கவில்லை என்பதையும், பிரெஞ்சு வெளியீடான மீடியாபார்ட்டுக்கு இந்திய தரப்பிலிருந்து ரிலையன்ஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்றும் வெளிப்படுத்தியபோது மத்திய அரசுக்கு முதல் பின்னடைவு ஏற்பட்டது. அதே மாதத்தில், அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய பொது நல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

டிசம்பர் 14, 2018: ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழல் வழக்கும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்று கூறி இந்திய உச்ச நீதிமன்றம் மோதி அரசை விடுவித்தது.

மே 2019: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் பலர் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நவம்பர் 14, 2019: பிரெஞ்சு நிறுவனமான தஸ்ஸோ ஏவியேஷனுடனான ரஃபேல் போர் ஜெட் ஒப்பந்தத்தில் அரசாங்கத்தைக் குற்றமற்றதாக அறிவித்து, 2018 ஆம் ஆண்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காணொளிக் குறிப்பு, “ரஃபேல் விவகாரம்: எங்கள் பக்கம் உண்மை இருப்பதால், பதிலளித்து கொண்டே இருப்போம்”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: