"10.5% உள்ஒதுக்கீடு ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம்" - குற்றம்சாட்டும் மு.க. ஸ்டாலின்

வன்னிர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நிறைவேற்றியபோது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதை கைதட்டி வரவேற்று விட்டு இன்று அது தற்காலிகமானது என்று கூறுவது ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூரில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஸ்டாலின், "கடைசியாக நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வன்னியர் உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கைதட்டி வரவேற்றார். இப்போது அது தற்காலிகமான சட்டம் தான், நிரந்தரமான சட்டம் இல்லை என்கிறார்.

"வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் அதையே சொல்கிறார். ஆனால் இன்று பாமக தலைவர் ராமதாஸ் முதலமைச்சருடன் இது பற்றி பேசினேன், அவர் வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தரமானது என்று உறுதி அளித்ததாகச் சொல்லி இருக்கிறார். தொகுதியில் வெற்றி பெறுவதற்காக பன்னீர்செல்வம் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறார். அதிமுக மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்களுக்குள் கோஷ்டி சண்டை நடக்கிறது. அடுத்து அமையப் போகும் திமுக அரசு, சமூக நீதி அரசாக இருக்கும். அனைத்து சமூகத்தினரும் திருப்தி அடையக் கூடிய விதத்தில் சட்டத்தை இயற்றுவோம்," என்றார் ஸ்டாலின்.

மேலும் ஜல்லிக்கட்டு பற்றி பேசிய ஸ்டாலின், "தான்தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த பன்னீர்செல்வம், பிரதமர் மோதிதான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என்று நேற்று நடந்த கூட்டத்தில் அவரைப் பார்த்து கூறினார். ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்டதற்கு காரணம் இளைஞர்கள். ஓபிஎஸ், அவர்களை கொச்சைப்படுத்த கூடாது. போராடிய இளைஞர்களை அடித்து விரட்டி விட்டு, இன்று ஜல்லிக்கட்டு நாயகன் என்று பாராட்டுகிறார்," என்றார்.

ஓபிஎஸ்-ஐ விடாக்கண்டன் என்றும் இபிஎஸ்-ஐ கொடாக்கண்டன் என்றும் விமர்சித்த ஸ்டாலின், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அதிமுகவிற்கு முதலில் துரோகம் செய்தது யார்? ஓபிஎஸ் மூன்று முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். இப்போது துணை முதலமைச்சராக இருக்கிறார். அதைப் பயன்படுத்தி தொகுதிக்கு ஏதாவது செய்தாரா? ஜெயலலிதாவிற்காவது உண்மையாக இருந்தாரா? ஒரு தியாக நாடகத்தை பதவிக்காக நடத்தினார். ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்திருக்கிறார் என்று கூறி தர்ம யுத்தம் என்ற பெயரில் சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்தார்.

சாவுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க விசாரணை கமிஷன் அமைத்தார்கள். பிறகு ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார்கள். அதற்கு பிறகு விசாரணை கமிஷனை ஓபிஎஸ் மறந்து விட்டார். ஆஜராக சொல்லி பலமுறை சம்மன் அனுப்பியும் ஒருமுறை கூட ஓபிஎஸ் ஆஜராகவில்லை. ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த இவரை தேனி மாவட்ட மக்கள் நிராகரிக்க வேண்டும்," என்று பேசினார் ஸ்டாலின்.

தேனி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அதிமுக எம்.பியாக இல்லாமல், பாஜக எம்.பி போலவே செயல்படுகிறார். அவர் லெட்டர் பேடில் கூட மோதி படம் தான் இருக்கிறது, என்று குறிப்பிட்ட ஸ்டாலின், அதிமுக வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் அவர்கள் பாஜக எம்எல்ஏ-க்களாகத்தான் செயல்படுவார்கள், என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: