பான் கார்டு - ஆதார் எண் இணைக்க மார்ச் 31 கடைசி தேதி: பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி ஆபத்தானது?

    • எழுதியவர், ரிதிகா கேரா
    • பதவி, பொருளாதார நிபுணர்

(இந்தியாவில் வருமான வரி செலுத்த தேவைப்படும் 'பான்' எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று (மார்ச் 31, 2021) கடைசி நாள் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி பிபிசி தமிழில் 2017ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட கட்டுரை மீண்டும் பகிரப்படுகிறது.)

இந்திய அரசின் ஐம்பது திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று கடந்த சில மாதங்களாக மத்திய அரசு வலியுறுத்திவருகிறது.

12 இலக்க அடையாள எண், பயோமெட்ரிக்ஸ் அதாவது கைவிரல் ரேகை, கருவிழிப்படலம் மற்றும் புகைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, இது கட்டாயமானதல்ல, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது என்று மீண்டும் உறுதியளிக்கப்பட்டது.

இருந்தாலும், மன்ரேகா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை பெற, சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என, மெதுவாகவும், மறைமுகமாகவும் அரசு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தியது.

ஆதார் எண்ணுக்காக, மக்களின் உரிமையை பறிக்கமுடியாது என்று 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபிறகு, ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓர் அதிகாரி ஒரு சூழ்ச்சியான வழியை கண்டறிந்தார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா அரசு உத்தரவுகளிலும் காணப்பட்டாலும், ஆதார் எண் பெறாதவர்கள் அதற்காக பதிவு செய்து கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் அதிலேயே குறிப்பிடப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு திசை திருப்பிவிட்டது. மக்கள் ஆதார் எண்ணை பெறுவதை கட்டாயமாக்கவேண்டும் என்ற அரசின் உத்தரவு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அது மேலும் திரிக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, ஆதார் அட்டை இல்லாத பலரின் பெயர், அரசின் நலத்திட்டப் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.

கதை இத்துடன் முடியவில்லை! பயனாளிகளாக தங்கள் பெயர் நீக்கப்பட்டது கூட தெரியாத மக்களை, 'போலி' என்று அரசு முத்திரை குத்திவிட்டது. போலிப் பயனாளிகளை அரசு எப்படி கண்டறிந்தது? ஆதார் எண்ணை பல்வேறு அரசு நலத்திட்டங்களுடன் இணைத்ததால், ஆதார் எண் பெறாதவர்கள் போலிப்பயனாளிகள் என்று அரசு சுலபமாக் கூறிவிட்டது.

இப்படி தவறான முறையால் நலத்திட்டங்களில் இருந்து விலக்கப்பட்ட மக்களுக்கு தராமல் இருக்கும் நிதியை, 'ஆதார் மூலம் சேமிக்கப்பட்டவை" என்று மத்திய அரசு பெருமையாக கூறுகிறது.

இருந்தபோதிலும், சட்டவிரோதமாக, தங்கள் உரிமையை வலுக்கட்டாயமாக இழந்தவர்களை தான், "ஆதாரால் அரசுக்கு ஏற்பட்ட சேமிப்பு" என்று நாடாளுமன்றத்திலும், நீதிமன்றங்களிலும் அரசு அறிக்கை சமர்ப்பிக்கிறது.

வருமான வரி செலுத்த பயன்படுத்தப்படும் பான் அட்டை எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, இல்லாவிட்டால், பான் எண் ரத்து செய்யப்படும் என்றும் பிறகு வருமான வரியை தாக்கல் செய்யமுடியாது என்றும் கூறுகிறது. மேலும், புது பான் அட்டை வாங்குவதற்கும் ஆதார் எண்ணை அரசு கட்டாயமாக்கிவிட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து போடப்பட்ட ஒரு பொதுநல மனுவை நீதிபதிகள் சிக்ரியும், பூஷணும் விசாரித்தனர். பான் அட்டையை இணைக்கக் கோரும் சர்வாதிகார போக்கை மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தாதர் சுட்டிக்காட்டியதும், இது குறித்த விளக்கத்தை உடனடியாக கூறுமாறு நீதிபதிகள் அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலுக்கு நீதிபதிகளிடம் கூற போதுமான விளக்கம் ஏதும் இல்லை.

உதாரணமாக, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டபோது எந்த சட்ட கட்டமைப்பும் இல்லை என்றும், தற்போது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தின் அந்த உத்தரவுகள் இனி பொருத்தமானவை அல்ல என்று அரசு தலைமை வழக்கறிஞர் ரோஹத்கி கூறினார்.

உடனடியாக, இது உண்மையல்ல என்று ரோஹத்கி மற்றும் நீதிபதிகளுக்கு நினைவூட்டிய மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ஆதார் அட்டையை காரணமாக கொண்டு மக்களின் உரிமைகளை யாரும் மறுக்கமுடியாது என்பதை உறுதி செய்வதற்காக, பிற உத்தரவுகளுடன் இந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.

வேறு உறுதியான எந்த கருத்தையும் பதிலாக கூற முடியாத அரசு வழக்கறிஞர், போலி பான் எண் குறித்த விவகாரத்தை எழுப்பினார். ஆனால், பான் அட்டைகளில் போலி என கண்டறியப்பட்ட 0.4% அட்டைகளை ரத்து செய்திருப்பதாக, மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு மக்களவையில் ஒத்துக் கொண்டிருந்தது.

இவ்வளவு குறைந்த அளவிலான பான் அட்டைகளின் போலியை கண்டறிவதற்காக பான் அட்டையை, ஆதார் எண்ணை இணைப்பது என்பது, எலியை பிடிப்பதற்காக வீட்டிற்கு தீ வைப்பதற்கு ஒப்பான செயலாகும்.

பிறகு ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அரசு தரப்பு அளித்த விளக்கத்தில், போலி தகவல்களைக் கண்டுபிடித்து நீக்குவதற்கு தாயாரின் விவரங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், போலிகளை நீக்குவதற்கு இன்னும் சில முறைகள் உள்ளதாகவும் அவை ஆபத்தானவை அல்ல என்றும் தெரிவித்திருந்தது.

இறுதியாக, ஆதார் அடிப்படைத் தகவல் மையத்திலும், போலிகள் இருப்பதாகவும், போலி எண்கள் பயன்படுத்தப்படுவதாகவும் உதாரணங்கள் இருக்கின்றன.

இணைப்பதில் என்ன சிக்கல்?

கடந்த சில வாரங்களில், பல்வேறு அரசாங்க வலைத்தளங்களில் யுஐடி எண் மற்றும் மக்கள் தொடர்பான பிற தரவுகள் பெரிய அளவில் கசிந்த்து. இது, யுஐடி எண்ணை பொதுத்தளத்தில் வெளியிடுவதை தடுக்கும் ஆதார் சட்டத்துக்கு முரணானது. இந்த தரவுகள் தவறான கைகளிடம் சிக்கினால், அவை மிகப்பெரிய அளவில் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

இரண்டாவதாக, நமது அரசியல்சாசனப்படி, 'வரையறுக்கப்பட்ட அரசு' என்ற கருத்தும் உள்ளது. அரசின் நோக்கங்களுக்கு வரம்புகளை நிர்ணயிப்பது தான் அதன் நோக்கம். ஏனென்றால், ஜனநாயகத்தில் அரசுக்கு அதிக உரிமைகள் கொடுத்து, அதை கைகளை அவிழ்த்துவிட்டால், அது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடத் தொடங்கும், இதுபோன்ற ஊடுருவல்கள் அதிகரித்தால், அது ஜனநாயகத்தின் ஆணிவேரையே அசைக்கும், சுய தணிக்கைக்கு வழிவகுக்கும்.

(ரிதிகா கேராவின் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை அவரது சொந்தக் கருத்துகள். ஆதார் அட்டைக்கு எதிரான இயக்கத்தை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: