You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2006 சட்டமன்ற தேர்தல்: தி.மு.கவின் முதல் 'மைனாரிட்டி' அரசு அமைந்தது எப்படி? - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. அரசு, ஐந்தாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தது. ஜெயலலிதா ஏன் ஆட்சியை இழந்தார்? தி.மு.கவுக்கு ஏன் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை? ஒரு பரபரப்பான ஐந்தாண்டுகளின் கதை இது.
2001ஆம் ஆண்டு ஆட்சியமைத்த அ.தி.மு.கவின் ஐந்தாண்டு காலத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஐந்தாண்டுகளுக்குள் இரண்டு முறை முதலமைச்சர் பதவியிலிருந்தவர்கள் மாறினா். முதல்முறை ஜெயலலிதா பதவிவிலகி, ஓ. பன்னீர்செல்வம் புதிய முதல்வரானார். பிறகு மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் விலகி, ஜெயலலிதாவே முதல்வரானார்.
2001 தேர்தலில் வெற்றிபெற்று, உடனடியாகப் பதவியேற்றதே சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில், தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கினார் ஜெயலலிதா. சென்னை நகரில் பாலங்கள் கட்டியதில் 12 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் 2001ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அதிகாலை கைதுசெய்யப்பட்டார் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி. நள்ளிரவில் வீடுபுகுந்து அவர் கைதுசெய்யப்பட்டவிதம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, மு.க. ஸ்டாலின் நீதிமன்றத்தில் சரணடைய அவரும் கைதுசெய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, முரசொலி மாறன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த அடுத்தடுத்த கைதுநடவடிக்கைகள் அரசியல் அரங்கை உலுக்கத் தொடங்கின. இந்தக் கைதுகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி ஆளுநரிடம் கோரியது மத்திய அரசு. இதற்குப் பிறகு ஆளுநரைத் திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டது. இதனால், ஆளுநர் ஃபாத்திமா பீவி தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக ஆளுநராக ரங்கராஜன் பதவியேற்றார்.
இந்த நிலையில்தான், டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால் அவர் பதவியேற்றது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதிய முதல்வராக வருவாய்த் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
இதற்குப் பிறகு, தன் மீதான வழக்கிலிருந்து விடுபடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார் ஜெயலலிதா. டான்சி வழக்கு தவிர, கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே என்ற ஹோட்டல் தொடர்பான வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் மேல் முறையீடு செய்தார் ஜெயலலிதா.
இந்த மேல் முறையீடுகளை விசாரித்த நீதிபதி என். தினகர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, இந்த வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயலலிதா தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தடை நீங்கியது.
இதையடுத்து 2002 பிப்ரவரி 21ஆம் தேதி ஆண்டிப்பட்டி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றிபெற்றார். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் பதவிவிலகிக் கொள்ள புதிய முதலமைச்சராக 2002 மார்ச் 2ஆம் தேதி மீண்டும் பதவியேற்றார் ஜெயலலிதா. இதற்கு நடுவில் சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி அகற்றப்பட்டது.
மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா, தனது அதிரடிகளைத் துவங்கினார். மதுரை திருமங்கலத்தில் 2002ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் 'விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்' என்று பேசினார். இதையடுத்து ஜூலை 11ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து திரும்பிய வைகோ சென்னை விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்த காவல்துறையினர், அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதற்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களில் அன்னதானத் திட்டம், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளைப் பலியிடத் தடைச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா.
இதையடுத்து அவர் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் சிலவற்றை ரத்து செய்தார் முதலமைச்சர். மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், கதர் வாரியப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு முன்பாக, அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்தும் தொடர்ந்து பேசிவந்தார் ஜெயலலிதா. எல்லாம் சேர்ந்து பெரும் போராட்டமாக வெடித்தது. அரசு ஊழியர்கள் வீடு புகுந்து கைதுசெய்யப்பட்டனர்.
எஸ்மா சட்டம் அமலுக்கு வந்தது. பணிக்கு வராத ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்திருந்தவர்கள் தற்காலிகப் பணியில் நியமிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் மாநிலத்தை மட்டுமல்லாமல், நாட்டையே அதிரவைத்தன.
ஆனால், இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இருந்தன. 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது அ.தி.மு.க. உடனடியாக, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு, கோழி பலியிடத் தடைச் சட்டம் ஆகியவை திரும்பப்பெறப்பட்டன. அரசு ஊழியர்களின் சலுகைகளில் சில திரும்பத் தரப்பட்டன.
இதற்குப் பிறகு அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பெறத்தக்கவையாக அமைந்தன. ஒன்று, பல வருடங்களாக தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்திருந்த காடுகளுக்குள் இருந்தபடி இரு மாநில காவல்துறையின் கண்களிலும் விரலைவிட்டு ஆட்டிவந்த சந்தனமரக் கடத்தல் வீரப்பன் 2004 அக்டோபரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அடுத்ததாக, காஞ்சி மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதியின் கைது நடவடிக்கை. சங்கரராமன் என்பவர் வரதராஜரப் பெருமாள் கோவில் வளாகத்திலேயே சங்கரராமன் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரத்தில் ஜெயந்திர சரஸ்வதியும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த விஜயேந்திர சரஸ்வதியும் கைதுசெய்யப்பட்டனர். பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து வருகைதரும் ஒரு மடத்தின் பீடாதிபதிகள் கைதுசெய்யப்பட்டது இந்திய அரசியல் வட்டாரத்தை உலுக்கியது. நாடு முழுவதும் இருந்த இந்து மடாதிபதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இப்படியாக பெரும் பரபரப்புகள் மிகுந்த ஆட்சிக்காலமாக ஜெயலலிதாவின் இந்த இரண்டாவது ஆட்சிக் காலம் அமைந்தது.
தமிழ்நாட்டு தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது, தேர்தலுக்கு ஒரு ஆண்டே இருந்த நிலையில், புதிய கட்சி ஒன்று தமிழக அரசியல் வானில் உதயமானது. அது நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசிவந்த அவர், தேர்தல் நெருக்கத்தில் 2005ஆம் ஆண்டு செப்டம்பரில் மதுரையில் கட்சியின் துவக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார் விஜயகாந்த். கட்சியின் பெயரில் தேசியம், முற்போக்கு, திராவிடம் என எல்லாம் கலந்து பெயரை வைத்திருந்தது ஆரம்பத்தில் கேலிக்கு உள்ளானாலும், கட்சி துவக்க விழாவில் மதுரையில் கூடிய கூட்டம் மலைக்க வைத்தது.
ஊழலை எதிர்க்கப்போவதாகவும் தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல், தனித்தே போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார் விஜயகாந்த்.
தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை 2004ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்றிருந்ததால், 2006வரை கூட்டணிக்குள் பெரிய பிரச்னை ஏதும் எழவில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது வழக்கம்போலவே ம.தி.மு.க. சிக்கல்களை ஏற்படுத்தியது.
பேச்சு வார்த்தையின் துவக்கத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கோரியது ம.தி.மு.க. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதில், காங்கிரசிற்கு அடுத்ததாக தி.மு.க. கூட்டணியில் தானே பெரிய கட்சியாக இருக்க வேண்டுமென்பதில் அக்கட்சித் தலைவர் வைகோ உறுதியாக இருப்பது புரிந்தது. அதாவது, காங்கிரஸைவிட குறைவான தொகுதிகள், அதே நேரம் பா.ம.கவைவிட அதிகமான தொகுதிகள் என்பதில் குறியாக இருந்தார் வைகோ.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முடிவேதும் ஏற்படாத நிலையில், ம.தி.மு.கவைச் சேர்ந்த சில தலைவர்கள் அளித்த பேட்டிகள் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. முடிவில் 21 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்றது தி.மு.க. ஆனால், குறைந்தது 25 இடங்களையாவது தர வேண்டுமென்றது ம.தி.மு.க. இந்த நிலையில்தான், அக்கட்சியுடனான கூட்டணிக்கு பகிரங்கமாக அழைப்புவிடுத்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
முடிவாக 22 இடங்களுக்கு இறங்கிவந்தது தி.மு.க. ஆனால், அதற்கு வைகோ மறுத்துவிட்டார். இதற்குப் பிறகு, நினைத்ததைப் போலவே வைகோ - ஜெயலலிதா சந்திப்பு நடந்தது. தி.மு.க. கூட்டணியில் வைகோ கோரிய 35 இடங்கள், அ.தி.மு.க கூட்டணியில் அவருக்கு ஒதுக்கப்பட்டன. ஒரு மேடைப் பேச்சிற்காக 'பொடா' சட்டத்தின் கீழ் தன்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடனேயே அவர் கூட்டணி அமைத்தது, அரசியல் அரங்கில் பெரும் ஆச்சரிய அலைகளை எழுப்பியது.
2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த திருமாவளவன் 2006 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியிலேயே தொடர விரும்பினார். ஆனால், தனது கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகரத்தைப் பெறும்வகையில் எட்டுத் தொகுதிகளாவது வேண்டுமென்றார் திருமாவளவன். அது முடியாதென்றால் குறைந்தது 6 தொகுதிகளாவது கொடுக்க வேண்டுமென்றார். ஆனால், அத்தனை இடங்களைக் கொடுக்க தி.மு.க. விரும்பவில்லை.
இந்தத் தருணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகளுக்கு சிறப்பான உறவு இருந்தது. ஆகவே, தி.மு.க. கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகிவந்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பவதாக வெளிப்படையாவே கூறினார் திருமா. இதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பா.ம.கவுக்கு ஒதுக்கும் இடங்களில் வி.சி.கவுக்கு சில இடங்களை ஒதுக்கினால் தங்களுக்குப் பிரச்னையில்லையென மு. கருணாநிதி ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், திருமாவளவன் இப்படிச் சொல்வது சரியானதல்ல என்றது தி.மு.க.
முடிவில், அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் திருமாவளவன். அ.தி.மு.க. கூட்டணியில் அவருக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ம.தி.மு.கவுக்கு 35 இடங்கள், வி.சி.கவுக்கு 9 இடங்கள் போக 188 இடங்களில் போட்டியிட்டது அ.தி.மு.க.
தி.மு.க. கூட்டணியில் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்தன. மத்தியில் ஆட்சியில் இருப்பதாலும் அந்தக் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இடம் பெற்றிருப்பதாலும் பெரும் எண்ணிக்கையில் இடங்களை எதிர்பார்த்தது காங்கிரஸ். ஆனால், 40 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என்றது தி.மு.க. முடிவில் 48 தொகுதிகள் காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 31 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. முடிவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உட்பட 132 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது தி.மு.க. 1980ல் 109 இடங்களில் போட்டியிட்டது தி.மு.க. அதற்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையில் தி.மு.க. போட்டியிட்டது இந்தத் தேர்தலில்தான்.
தே.மு.தி.கவைப் பொறுத்தவரை, விஜயகாந்த் தொடர்ந்து கூறிவந்தபடி தனித்தே போட்டியிட்டது. புதிதாக துவங்கிய கட்சியாக இருந்தாலும் 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார் விஜயகாந்த். அந்தக் கட்சியில் விஜயகாந்தையும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனையும் தவிர பெரிதாக வேறு யாரையும் மக்களுக்குத் தெரியாது என்றபோதிலும் துணிச்சலாகக் களமிறங்கியது அக்கட்சி.
இப்படி ஆளாளுக்கு ஒருபுறம் சென்றுவிட தேர்தல் களத்தில் தனித்து நின்றது பா.ஜ.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பா.ஜ.க., இந்த முறை தனித்துவிடப்பட்டது. ஆகவே, 225 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி.
அ.தி.மு.கவின் சார்பில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டார் ஜெயலலிதா. பெரிய குளத்தில் ஓ. பன்னீர்செல்வமும் ராயபுரத்தில் ஜெயக்குமாரும் போட்டியிட்டனர். காட்டுமன்னார் கோவிலில் து. ரவிக்குமாரும் மங்களூரில் கு.செல்வப்பெருந்தகையும் முகையூரில் சிந்தனைச்செல்வனும் போட்டியிட்டனர். கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. ம.தி.மு.கவைப் பொறுத்தவரை வெள்ளக்கோவில் தொகுதியில் கணேசமூர்த்தியும் எழும்பூரில் மல்லை சத்யாவும் வாசுதேவநல்லூரில் சதன் திருமலைக்குமாரும் போட்டியிட்டனர்.
தி.மு.கவைப் பொறுத்தவரை, சேப்பாக்கத்தில் கட்சித் தலைவர் மு. கருணாநிதியும் துறைமுகத்தில் க. அன்பழகனும் மு.க. ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் மதுரை மத்தியத் தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனும் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் கட்சியில், கடையநல்லூரில் பீட்டர் அல்போன்சும் வேலூரில் ஞானசேகரனும் போட்டியிட்டனர். பா.ம.கவைப் பொறுத்தவரை மேட்டூரில் ஜி.கே. மணியும் பண்ருட்டியில் வேல்முருகனும் போட்டியிட்டனர்.
தே.மு.தி.கவைப் பொறுத்தவரை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் விருதாச்சலத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் பண்ருட்டியிலும் எல்.கே. சுதீஷ் குடியாத்தத்திலும் போட்டியிட்டனர்.
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் தேர்தல் அறிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கவனம் கிடைக்கும் என்றாலும், 2006ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவனத்தைப் பெற்றது.
இதற்கு முக்கியக் காரணம், தி.மு.க. அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்: 1. ரேஷன் கடைகளில் விற்கும் அரிசியின் விலை மூன்றரை ரூபாய் என்பதிலிருந்து இரண்டு ரூபாயாகக் குறைக்கப்படும். 2. அனைத்து வீடுகளுக்கும் விலையில்லாத வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும். 3. ஏழைகளுக்கு இலவச எரிவாயு அடுப்பும் இணைப்பும் தரப்படும். 4. நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
இந்த நான்கு வாக்குறுதிகளும் தமிழக தேர்தல் களத்தை கலக்கியெடுத்தன. குறிப்பாக விலையில்லாத வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கு பார்த்தாலும் பேசுபொருளாகியிருந்தது. தி.மு.கவின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலின் கதாநாயகன் என்று குறிப்பிட்டார் அப்போதைய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.
இதையடுத்து தனது தேர்தல் பிரசாரத்தில், இலவச கம்ப்யூட்டர், அரிசி விலை குறைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார் ஜெயலலிதா. ஆனால், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என்ற தி.மு.கவின் வாக்குறுதி பெரும் கவனத்தைக் கவர்ந்திருந்தது.
அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தே.மு.தி.க., பா.ஜ.க. என நான்கு முனைப் போட்டிக்கு தேர்தல் களம் தயாராகியிருந்தது. பிரசாரம் முடிந்து மே 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 12ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்தபோது எல்லோருக்குமே ஆச்சரியம் காத்திருந்தது. சமீபகால வரலாற்றில் இல்லாத நிலையாக எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. ஆனால், தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தது.
தி.மு.க. கூட்டணியில் அக்கட்சிக்கு 96 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 34 இடங்களும் பா.ம.கவுக்கு 18 இடங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்தன. மொத்தமாக 163 இடங்கள் அந்தக் கூட்டணிக்குக் கிடைத்திருந்தன.
அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை அ.தி.மு.க. 61 இடங்களையும் ம.தி.மு.க. 6 இடங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றியது. தே.மு.தி.கவைப் பொறுத்தவரை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டும் விருதாச்சலத்திலிருந்து வெற்றிபெற்றிருந்தார். பாரதிய ஜனதாக் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வியடைந்திருந்தது.
தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் முக்கியமான தலைவர்கள் அனைவரும் வெற்றிபெற்றிருந்தனர். பா.ம.கவின் சார்பில் வேல்முருகன், ஜி.கே. மணி உள்ளிட்டவர்கள் வெற்றிபெற்றிருந்தனர். அ.தி.முகவிலும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் வெற்றிபெற்றிருந்தாலும் நயினார் நகேந்திரன், தளவாய் சுந்தரம் போன்றவர்கள் தோல்வியைத் தழுவினர். இந்தத் தேர்தலின் மூலம் ம.தி.மு.க. சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. வி.சி.கவின் சார்பில் போட்டியிட்டவர்களில் து. ரவிக்குமாரும் செல்வப்பெருந்தகையும் வெற்றிபெற்றிருந்தனர்.
தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் அறுதிப்பெரும்பான்மை பெறுமளவுக்கு அக்கட்சிக்கு இடங்கள் கிடைக்கவில்லை. அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 22 இடங்கள் தேவைப்பட்டன. ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை தி.மு.க. அமைக்குமா என்ற விவாதம் எழுந்தது. அப்படி நடந்திருந்தால் 1967க்குப் பிறகு, காங்கிரஸ் அமைச்சர்கள் பங்கேற்ற அரசாக இருந்திருக்கும்.
ஆனால், அரசில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவளிக்கப்போவதாகத் தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. அதேபோல, பா.ம.க., இடதுசாரிக் கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரிக்கப்போவதாகத் தெரிவித்தன.
இதற்குப் பிறகு, மு. கருணாநிதியை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. 2006ஆம் ஆண்டு மே 13ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார் மு. கருணாநிதி.
அவருடன் 30 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களில் ஒருவர் மு.க. ஸ்டாலின். இதுவரை தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெறாத அவர், இந்த அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
பதவியேற்றதும் மூன்று உத்தரவுகளில் கையெழுத்திட்டார் மு. கருணாநிதி: 1. நியாயவிலைக் கடைகளில் அரிசி 2 ரூபாய்க்கு விற்கப்படும். 2. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். 3. சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் 2 முட்டைகள் வழங்கப்படும்.
2009ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு முதுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து, தனது பணிகளைக் குறைத்துக்கொள்ளும் நோக்கில் துணை முதல்வராக மு.க. ஸ்டாலினை நியமிக்கப்பட்டார். முதலமைச்சர் வசம் இருந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், சிறுபான்மையினர் நலன், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: