You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: மாறிவரும் பிரசார முறைகள்: தமிழக மக்களின் உள்ளத்தை கவரும் காரணி எது?
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சியில் தயாராகி வருகின்றன. குறிப்பாக, தமிழக அரசியல் களத்தில் இருபெரும் கட்சிகளாக விளங்கும் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் முன்னெப்போதுமில்லாத வகையில் தங்களது கட்சிகளின் முகமாக விளங்கிய தலைவர்கள் இல்லாமல் தேர்தலை எதிர்நோக்கி உள்ளன.
தேர்தலை பொறுத்தவரை, கட்சிகள் மாறலாம், அவற்றின் காட்சிகள் மாறலாம் அல்லது கொள்கைகள் மாறலாமே தவிர, ஆட்சிக்கட்டிலில் அமர விரும்பும் அனைவரும் இலக்கு வைப்பது ஒன்றே ஒன்றைத்தான் - அதுதான் மக்களின் வாக்கு.
ஆம், அரசியலை பொறுத்தவரை எது மாறுகிறதோ இல்லையோ, மக்களின் வாக்குகளை பெற்றுதான் ஆட்சியை பிடிக்க முடியும். எனினும், மக்களின் வாக்குகளை பெறும் பிரசார செயல்திட்டம் என்பது ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய பரிணாமத்தை பெற்று வருவதை யாராலும் தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில், பிரசார முறைகள் காலத்திற்கேற்றவாறு எப்படியெல்லாம் மறுபாடடைந்துள்ளன என்பது குறித்த வரலாற்று பார்வையையும், சமீபத்திய காலத்தில் தொழில்நுட்பத்தின் வருகை அதில் எப்படிப்பட்ட மாற்றங்களை சாத்தியமாக்கியுள்ளது என்பது குறித்த நவீனகால கண்ணோட்டத்தையும், உண்மையில் ஒரு வாக்காளரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரசார செயல்முறையாக எது உள்ளது என்பது குறித்த மனநலம் சார்ந்த பின்னணியையும் இந்த கட்டுரை அலசுகிறது.
தொலைந்துபோன தெருமுனை கூட்டங்கள்
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 1990கள் வரை தெருமுனை கூட்டங்களே தமிழக அரசியலின் அடிநாதமாக திகழ்ந்ததாக வரலாற்று பின்னணியை விளக்குகிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் தலைவர் ராமு மணிவண்ணன்.
"1950 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் தமிழக அரசியலும், தேர்தல் பிரசாரங்களும் கொள்கை மற்றும் மக்களுடனான நேரடி தொடர்பை மையப்படுத்தியாக அமைந்திருந்தன. அப்போதெல்லாம் எவ்வித கட்சி பின்னணியும் இல்லாத பொது மக்கள் மிக அதிக அளவில் தேர்தல் பிரசார கூட்டங்களில் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள். ஆனால், 1980-90களில் அரசியலில் பணப்புழக்கம் அதிகரிக்க தொடங்கியவுடன், பாரம்பரிய பிரசார முறைகளும் அழிவுற தொடங்கிவிட்டன" என்கிறார் அவர்.
"மக்களை நேரடியாக, தைரியமாக சந்தித்தல், குறைகளை கேட்டறிந்து நம்பிக்கை அளித்தல், கட்சியின் கொள்கையை முன்னிறுத்துதல் உள்ளிட்டவற்றை முதலாக கொண்டு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்த தமிழக அரசியல் களத்தில், எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாகவும், கூட்டத்தை கூட்டி காட்டுவதே பலம் என்ற போலியான பிம்பத்தினாலும், அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்குமான நேரடி தொடர்பு 1990களில் குறையத்தொடங்கி, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக பணம், சாராயம், பிரியாணி உள்ளிட்டவை கட்சிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற விடயங்களும் சாதி அரசியலும், இரண்டாயிரமாவது ஆண்டுகளில் வெளிப்படையாகவே செய்யப்பட்டன."
அப்போது முதல் மோசமடைய தொடங்கிய தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அணுகுமுறை, இந்த தேர்தலில் மிகவும் இழிவான நிலையை அடைந்துவிட்டதாக ஆதங்கப்படுகிறார் ராமு மணிவண்ணன். "ஒரு மாநிலத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறிமாறி ஆண்டு வரும் திராவிட கட்சிகள், தங்களது அனுபவத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் யார் பணம் கொடுத்தாலும் விலை போகக் கூடிய, களநிலவரம் சிறிதும் அறியாத தேர்தல் உத்தி வகுப்பாளர்களிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து, கோடிக்கணக்கான பணத்தை கொட்டுவது, எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்று விட வேண்டுமென்ற வெறியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. மக்களுடனான நேரடி தொடர்பு இல்லாமலேயே, பணம், சாதி, அதிகாரம், கவர்ச்சியான தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்குகளை பெற்றுவிட முடியும் என்ற மனநிலை தமிழக அரசியல் எவ்வளவு கீழ்த்தரமான நிலையை அடைந்துவிட்டது என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது" என்று அவர் கூறுகிறார்.
தேர்தல் உத்தி வகுப்பாளர்களின் தேவை என்ன?
தேர்தல் உத்தி வகுப்பாளர்களின் தேவையே இல்லையா, இன்னமும் அரசியல் கட்சித் தலைவர்கள் சிறிய மற்றும் பெரியளவிலான கூட்டங்களை நடத்தி, அதில் பங்கேற்று வருவதை பார்க்க முடிகிறதே என்று அவரிடம் கேட்டபோது, "ஒரு தொகுதியில் 30-40 ஆண்டுகளாக களப்பணி ஆற்றிவரும் ஒரு கட்சித் தொண்டருக்கு அங்குள்ள மக்களின் மனநிலைக்கு ஏற்ப செயல்பட்டு பிரசாரத்தை முன்னெடுக்க தெரியுமா அல்லது யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களின் வெற்றிக்காக, களநிலவரம் தெரியாமல் பெரும்பாலும் ஓரறைக்குள் கணினியின் முன் உட்கார்ந்திருப்பவர்களுக்கு மக்களின் எண்ணவோட்டம் தெரியுமா? என்ற கேள்வி எழுகிறது" என்று கூறும் பேராசிரியர் ராமு மணிவண்ணன், "இப்போது நடக்கும் பெரும்பாலான தேர்தல் பொதுக் கூட்டங்களில் அதன் அடிப்படை மாண்பே கடைபிடிக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, எந்த கட்சி கூட்டத்தை நடத்துகிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர்களே அந்த இடத்தை ஆக்கிரமிக்கின்றனர். ஒருவேளை மாற்றுக்கருத்தை கொண்டவர்கள் தப்பித்தவறி கேள்வி கேட்டாலும் அதை நேருக்குநேர் எதிர்கொள்ளாமல் அவர்களை அப்புறப்படுத்தும் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. தங்களது தலைமைகளிடம் நற்பெயர் வாங்குவதற்காக சாதாரண மக்களை பணம், சாராயம், பிரியாணி கொடுப்பதாக கூறி அழைத்து வரும் அட்டூழியங்கள் இயல்பான ஒன்றாக மாறிவிட்டன" என்கிறார் அவர்.
"தங்களை கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகளின் போக்கை விமர்சிக்க சமூக ஊடகங்களை முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய ஆயுதமாக வாக்காளர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கேயும் வாக்காளர்களை அறுவடை செய்ய குறிவைத்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் நினைப்பதை போன்று சமூக ஊடகங்களில் கிடைக்கும் லைக்குகள் எல்லாம் வாக்குகளாக மாறுவதில்லை. இவ்வாறாக மாறிவரும் தேர்தல் கலாசாரத்தில் வெற்றியை மட்டுமே குறிவைத்து அரசியல் கட்சிகள் செயல்பட்டால் ஜனநாயகம் வெற்றிபெறாது, பணநாயகம் மட்டுமே செல்லுபடியாகும் அவலநிலை உண்டாகும்."
தமிழக அரசியலில் ஊடகங்களின் பங்கு குறித்து பதிலளித்த அவர், "1970-80களில் செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளின் வாசகர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தில் இருந்தது. அப்போதெல்லாம், பெரும்பாலான ஊடகங்களின் உரிமையாளர்கள் கட்சி சாயம் இல்லாத, நடுநிலையானவர்களாக கருதப்பட்டார்கள். ஆனால், இப்போதோ ஊடகம் என்றாலே அதன் பின்னால் எந்த கட்சி அல்லது எவ்வித ஊழல் செய்தவர்கள் இருக்கிறார்கள் என்ற அளவுக்கு தரம் மட்டுப்போய் கிடக்கிறது. அரசியலில் திரும்புமுனைகளை ஏற்படுத்திய ஊடகங்கள் இந்த காலத்தில், நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று, ஒருவர் விடுதலை ஆவதை தொடர்ந்து பல மணிநேரங்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு நேரலை செய்யும் போக்கை என்னவென்று சொல்வது? கட்சிக்கொரு ஊடகம் அல்லது ஒவ்வோர் ஊடகத்திற்கு பின்பும் ஒரு கட்சி என்ற மோசமான நிலையில் தமிழ்நாட்டில் ஊடகங்களின் நிலை உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது எது?
செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் களம் காலம் செல்ல செல்ல புதிய பரிணாமங்களை அடைந்துகொண்டே இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேற்கண்ட எந்த பிரசார முறை மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அது வாக்குகளாக மாறுகின்றன என்று உளவியல் மருத்துவர் ஷாலினியிடம் கேட்டபோது, "எந்த ஒரு தனிப்பட்ட பிரசார உத்தியும் வெற்றியை உறுதிசெய்துவிடும் என்று கூறிவிட முடியாது. தமிழகத்தில் இன்னமும் கூட, திறன்பேசி பயன்படுத்தாத, சமூக ஊடகங்களை பயன்படுத்தாத மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களே தேர்தலின் முடிவை நிர்ணயிக்கின்றனர். பெரும்பாலான சமூக ஊடக பயனாளர்கள் தங்களை தாங்களே தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர்களாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், களநிலவரம் வேறுவிதமாக உள்ளது" என்கிறார்.
ஓரறையில் இருந்தவாறே காணொளி எடுத்து, சமூக ஊடகங்களில் பணம் செலவழித்து குறிப்பிட்ட தொகுதியை சேர்ந்த மக்களை அதை அவர்களின் அலைபேசியிலேயே அதை பார்க்க செய்யுமளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை மக்களுக்கு உள்ளதா என்று கேட்டபோது, "தேர்தலில் என் வாக்கை கோருபவர் 'என் வீட்டிற்குத்தானே வர வேண்டும்' என்ற உணர்வே பெரும்பாலான மக்களின் மனநிலையாக இன்னமும் உள்ளது. 'வாக்கு கேட்பதற்குகூட நமது பகுதிக்கு வராத ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்றால் நமக்கு என்ன செய்துவிட போகிறார்' என்ற மக்களின் இயல்பான எண்ணத்தை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று ஷாலினி கூறுகிறார்.
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பேசிய அவர், "மக்கள் தங்களை அதிகாரம் படைத்தவர்களாக நினைப்பது வாக்குச்சாவடிக்குள் சென்று தங்களது விருப்பத்திற்குரிய வேட்பாளருக்கு வாக்களிக்கும்போதுதான். மற்ற சமயங்களில் எல்லாம், தங்களை யாருமே கண்டுகொள்ளவில்லையே என்ற எண்ணமே அவர்களுக்குள் மேலோங்கி காணப்படுகிறது. எனினும், என்னதான் ஒரு வேட்பாளர், வாக்காளரின் வசிப்பிடத்துக்கே சென்று வாக்கு கேட்டாலும், அதன் மூலம் அவர்கள் எடுக்கும் முடிவு கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கு பிறகு பெரும்பாலும் மாறும்நிலையே இப்போதெல்லாம் நிலவுகிறது. அதாவது, ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு தேவையானவற்றை இலவசமாக தருவதாக எந்த கட்சி கூறுகிறதோ அவர்களுக்கு வாக்களிக்கும் நிலைக்கு மக்கள் செல்கின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றிபெற்றதற்கு அவரது தேர்தல் அறிக்கையே முக்கிய காரணம்" என்று கூறுகிறார்.
எரிச்சலூட்டுகின்றனவா விளம்பரங்கள்?
அரசியல் கட்சிகள் நினைக்கும் அளவுக்கு உத்தி வகுக்கும் நிறுவனங்களின் இருப்பு தேர்தல் முடிவுகளில் பலனளிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் ஷாலினி, "உத்தி வகுக்கும் நிறுவனங்களை பணியமர்த்தினால் தேர்தலில் வென்றுவிட முடியுமென்ற எண்ணத்தை இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஏற்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோதிதான். ஆனால், அது உண்மையாக இருக்க முடியாது. ஏனெனில் ஒரு கட்சி ஒரு நிறுவனத்தை அணுகினால், அதன் எதிர்க்கட்சி மற்றொரு நிறுவனத்தை அணுகி இந்த பணியை செய்ய முடியாதா என்ன? என்னைப் பொறுத்தவரை வெற்றிபெறும் வழியாக யார் யார் என்னென்ன சொல்கிறார்களோ, அவற்றையெல்லாம் செய்துவிட வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் மனநிலையையே இது வெளிப்படுத்துகிறது" என்று அவர் கூறுகிறார்.
தங்களது கட்சியின், ஆட்சியின் சாதனைகளை - வாக்குறுதிகளை மையப்படுத்தி இந்த தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறுபட்ட விளம்பரங்களை வழக்கம்போல செய்தித்தாள்கள் மட்டுமின்றி சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், இதுபோன்ற விளம்பரங்களை தொடர்ச்சியாக வாக்காளர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க நேரிடுவது அவர்களின் மனதில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர் ஷாலினியிடம் கேட்டபோது, "தொடர் விளம்பரங்கள், 'நீ அப்படி என்னதான் செஞ்சுட்ட' என்பது போன்ற விரக்தியை மக்களிடையே ஏற்படுத்தலாம். ஏனெனில், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களில் உண்மைத்தன்மை குறித்த கேள்வி மக்களின் மனதில் எழுவதோடு, இது அப்பட்டமாக தேர்தலுக்காக செய்யப்படுவது அவர்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது" என்று கூறுகிறார்.
ஆக, அரசியல் கட்சிகளின் மனநிலையும், மக்களின் எதிர்பார்ப்பும் வேறுபட்ட பாதையில் இருப்பதாக வல்லுநர்கள் கருதினாலும், மே 2ஆம் தேதி ஒரு முடிவு எட்டப்படத்தான் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
பிற செய்திகள்:
- ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தினருக்கு 196 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை
- தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி - வெற்றி யாருக்கு?
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்