You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தினருக்கு 196 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை
அமெரிக்காவில் போலிஸாரின் தாக்குதலால் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்திற்கு 196 கோடி ரூபாயை (27மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இழப்பீடாக கொடுக்க மினியாபோலிஸ் நகர நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஆயுதமற்று இருந்தபோது டெரெக் செளவின் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் முட்டியால் அழுத்திய காட்சி வீடியோவில் பதிவானது. காவல்துறையின் பிடியில் ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் `ப்ளாக் லைஃப்ஸ் மேட்டர்` (Black lives matter)என்ற போராட்டங்கள் வலுப்பெற்றன.
அந்த வீடியோ `மறுக்க முடியாத நீதி மற்றும் மாற்றத்தை கோருகிறது` என ஜார்ஜ் ஃப்ளாய்டின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இதுவரை மினிசோட்ட நகரில் வழங்கப்படாத ஒரு இழப்பீடாக இது உள்ளது.
"இது கருப்பின மக்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும், கருப்பின மக்களின் வாழ்வும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான வலுவான ஒரு செய்தியாகவும் இருக்கும்." என ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தின் வழக்குரைஞர் பென் க்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஃப்ளாய்ட் குடும்பத்தின் சார்பாக அவரின் வழக்குரைஞர் சிவில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.
அதிகாரிகளுக்கு தடுப்பு நடவடிக்கை நுணுக்கங்கள் குறித்த பயிற்சியை அளிக்க நகர நிர்வாகம் தவறிவிட்டது என்றும், மோசமான பின்னணியை கொண்டுள்ள அதிகாரிகளை பணியிலிருந்து நீக்க தவறிவிட்டது என்றும் மினியாபொலிஸ் நகர நிர்வாகத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது, காவல்துறையில் 19 வருடங்களாக பணியாற்றி வந்த செளவின் மீது ஏற்கனவே டஜன் கணக்கான புகார் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜ் ஃப்ளாய்டை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள காவல்துறையில் பணியாற்றிய செளவின் மீது முன்னதாக திட்டமிடப்படாத கொலை மற்றும் கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் ஒருவரை தாக்குவது போன்ற குற்றங்கள் பதியப்பட்டுள்ளன இந்த குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் மொத்தமாக 65 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும்.
தனது குற்றத்தை இதுவரை செளவின் மறுக்கவில்லை.
ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்தில் ஈடுபட்ட பிற அதிகாரிகளான அலெக்ஸாண்டர் கெங், து தாவ் மற்றும் தாமஸ் லேன் ஆகியோர் மீது கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்தான வழக்கு விசாரணை இந்த வருடத்தின் இறுதியில் தனியாக விசாரிக்கப்படும்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் எப்படி இறந்தார்?
மே 25ஆம் தேதியன்று, மினியாபொலிஸ் நகரில் மளிகைக் கடை ஒன்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் 20 டாலர் கள்ள நோட்டு ஒன்று தந்ததாக வந்த தொலைப்பேசி தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க போலீஸார் வந்துள்ளனர்,
போலீஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலிஸாரின் பிடியில் இருக்கும்போது, காவலரின் கட்டுப்பட வைக்கும் முயற்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என அவரது மரணம் சட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மினியாபொலிஸ் நகரில், மே 25 அன்று நடந்த கைது செய்யும் முயற்சியின்போது, அவர் உயிரிழந்தார்.
ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
பிற செய்திகள்:
- திமுக வேட்பாளர் பட்டியல் சுவாரசியங்கள்: படித்தவர்கள், வாரிசுகள் அதிகம், பெண்கள் குறைவு
- தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி - வெற்றி யாருக்கு?
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்