You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: அமைதியான போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை - கடுமையாக விமர்சிக்கப்படும் டிரம்ப்
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீஸ் பிடியில் இருந்தபோது கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் ஏழாவது நாளாக தொடர்கின்றன.
பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும் அதை மீறி ஏராளமான மக்கள் இந்த மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அருகே உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்துக்கு செல்வதற்காக அருகே அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் அதிபர் உத்தரவின் பேரில் கண்ணீர் புகை குண்டுகள், தீக்குண்டுகள் உள்ளிட்டவை வீசி கலைக்கப்பட்டதற்காக அதிபர் டிரம்ப் விமர்சிக்கப்படுகிறார்.
அந்த புகழ் பெற்ற தேவாலயத்தின் முன் நின்றபடி பைபிளைத் தூக்கிக் காட்டி போஸ் கொடுத்தார் டிரம்ப். பிளடல்பியா சிட்டி ஹாலில் பேசிய அதிபர் தேர்தல் போட்டியாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன், டிரம்ப் "பைபிளை தூக்கிக் காட்டியதற்குப் பதில் அதைத் திறந்து படித்திருந்தால் எதையாவது கற்றிருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
கொல்லப்படுவதற்கு முன்பு, ஃப்ளாய்டு பேசிய வாக்கியமான "என்னால் சுவாசிக்க முடியவில்லை" என்ற வார்த்தையைப் பேசிய பைடன் இந்த சொற்கள் நாடு முழுவதும் எதிரொலிப்பதாக கூறினார்.
கொள்கையைவிட அதிகாரத்திலேயே அதிபர் டிரம்ப் அக்கறை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய பைடன், அதிபர் தமது கடமையான மக்கள் மீது அக்கறை காட்டுவது என்பதைக் கைக்கொள்ளாமல், தமது ஆதரவாளர்களின் உணர்வுகளுக்கு தீனி போடுவதிலேயே குறியாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனிடையே போராட்டக்காரர்களுக்கு முட்டி போட்டு ஆதரவு தெரிவித்த நியூயார்க் போலீஸ் துறைத் தலைவர் டெரன்ஸ் மோனஹன் தங்கள் போலீஸ் படையில் இனவெறி செயல்படுவதாக கூறுவதை ஏற்கமுடியாது என்று தெரிவித்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இப்படித் தெரிவித்தார். இனவாத சம்பவம் நடந்திருக்கலாம். ஆனால் அதற்குக் காரணமானவர் இந்த துறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், போலீஸ் துறையையே இனவாத போலீஸ் துறை என்று கூறுவதை ஏற்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் காவல் மரணத்தை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செயிண்ட் லூயிஸ் நகரில் நான்கு காவல் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என அந்நகர காவல் துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனினும் உயிராபத்தை உண்டாக்கும் காயங்கள் அவர்களுக்கு உண்டாகவில்லை.
கலிஃபோர்னியா கடலோரப் பகுதிகளில் இருக்கும் சான் பிராசிஸ்கோ, சான் ஜோஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன.
அப்பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் சூறையாடல்களும் நடந்துள்ளன.
மினசோட்டா தலைநகர் மினியாபொலிஸில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணமடைந்த சதுக்கத்தில் பல்லாயிரம் போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர்.
ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்தை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களின்போது வன்முறை ஏற்பட்டுள்ளதாக சியாட்டில் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல் அதிகாரிகளை நோக்கி கற்கள், பாட்டில்கள், பட்டாசுகள் ஆகியவை வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெடிச்சத்தங்களும், கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தப்பட்டதால்தால் உண்டான புகை மூட்டமும் எங்கும் காண முடிகிறது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடந்தாலும், அது தொடர்ந்து அமைதியான முறையில் இருப்பதாக போர்ட்லேண்ட் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
வால்நட் க்ரீக் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பெண் போராட்டக்காரர் ஒருவர் சுடப்பட்டார்.
காரில் வந்த நபர் சுட்டுவிட்டு தப்பிவிட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் எப்படி இறந்தார்?
அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலிஸாரின் பிடியில் இருக்கும்போது, காவலரின் கட்டுப்பட வைக்கும் முயற்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததார் எனஅவரது மரணம் சட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில், மே 25 அன்று நடந்த கைது செய்யும் முயற்சியின்போது, அவர் உயிரிழந்தார்.
ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
கொரோனா வைரஸ் ஊரடங்கை மீறி அமெரிக்காவில் போராட்டம்
ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்ததைக் கண்டித்து ஏழாவது நாளாக நடக்கும் போராட்டத்தால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் பற்றி எரிகின்றன.
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் போராட்டக்காரர்கள் மீண்டும் குவிந்து, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜனாதிபதிகள் தேவாலயம் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தீவைத்தனர். கலவரத் தடுப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசினர். பதிலுக்கு போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.
ராணுவம் அனுப்பப்படும்: வெள்ளை மாளிகையில்பேசிய டிரம்ப்
இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,''ஓர் அதிபராக, அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை. அமெரிக்கச் சாலைகளில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவம் அனுப்பப்படும்'' என்றார்.
கலவரம், கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களை அழிப்பதை நிறுத்தவும், சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தத் தயார் என டிரம்ப் கூறினார்.
மேலும் அவர்,''அமெரிக்காவில் இப்போது நடப்பது அமைதியான போராட்டம் அல்ல. இவை உள்நாட்டுப் பயங்கரவாத செயல். அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தப்படுவதும் மனிதக்குலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும், கடவுளுக்கு எதிரான குற்றமாகும்,'' என்றார்.
''ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மோசமான மரணத்தால் அமெரிக்கர்கள் கிளர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், கோபமான போராட்டக்காரர்களால் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டிற்கு செலுத்தப்படும் அஞ்சலி பாதிக்கப்படக்கூடாது'' என டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
டிரம்ப் கையில் பைபிள்
பல மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் தங்களது குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன எனவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் நடந்த கலவரம் மிகவும் அவமானகரமானது என கூறிய டிரம்ப், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றார்.
மக்களிடம் உரையாடிய பிறகு, போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதில் சற்று சேதமடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செயிண்ட் ஜான் தேவாலயத்திற்கு டிரம்ப் நடந்தே சென்றார்.
தேவாலயத்திற்கு வெளியே கையில் பைபிளை வைத்திருந்தபடி பேசிய டிரம்ப்,'' நமது நாடு உலகின் சிறந்த நாடு. நான் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்போகிறேன்'' எனக் கூறினார்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைது செய்யப்பட்டது ஏன்?
மே 25ஆம் தேதியன்று, மினியாபொலிஸ் நகரில் மளிகைக் கடை ஒன்றில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் 20 டாலர் கள்ள நோட்டு ஒன்று தந்ததாக வந்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க போலீஸார் வந்துள்ளானர்,
போலீஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
போலிஸாரில் பிடியில் இருந்தபோது ஜார்ஜ் இறந்துபோனார். இதனால் அமெரிக்கா முழுக்க போராட்டங்கள் துவங்கியது.
1968ல் மார்டின் லூதர் கிங் கொலைக்கு பிறகு அமெரிக்காவில் இப்போதுதான் இந்த அளவிற்கு இனக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது என பிபிசியின் நிக் பிரியண்ட் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: