மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

பட மூலாதாரம், MNM
(அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.)
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி அமைக்க, மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடனும் இந்திய ஜனநாயகக் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்திவந்தது.
இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவில் சமத்துவ மக்கள் கட்சிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் தலா 40 இடங்களை ஒதுக்கீடு செய்ய முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து மூன்று கட்சிகளின் தலைவர்களும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே. குமரவேலும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சரத்குமாரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ரவி பச்சைமுத்துவும் கையெழுத்திட்டனர்.

பட மூலாதாரம், MNM
முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. இந்த முறை இரு கட்சிகளும் முந்தைய கூட்டணிகளில் இருந்து விலகி, மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தன.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.கே. குமரவேல், மேலும் சில கட்சிகள் தங்களுடன் பேசி வருவதாகவும் செவ்வாய்க்கிழமை மாலையில் இது தொடர்பான செய்திகள் வெளியாகலாம் எனவும் தெரிவித்தார்.
கடந்த தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணி வாக்குகளைப் பிரித்ததுபோக, இடங்கள் ஏதும் வெல்லவில்லை; அதுபோல இந்தக் கூட்டணி ஆகிவிடுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, "அப்போது கலைஞர், ஜெயலலிதா என இரண்டு ஆளுமைகள் இருந்தனர். இப்போது இல்லை. ஆகவே எங்கள் கூட்டணிதான் முதன்மை கூட்டணியாக இருக்கும்" என்றார் குமரவேல்.
இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், எந்தெந்தத் தொகுதிகளில் எந்தெந்தக் கட்சிகள் போட்டியிடும் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













