You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மது போதையில் பாலியல் தொல்லை: ராமநாதபுரம் அருகே கணவனை எரித்து கொன்ற மனைவி
மதுபோதையில் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவனை தூங்கி கொண்டிருந்த போது மண்ணெய் ஊற்றி உயிருடன் மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் ராமநாதபுரம் அருகே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே உள்ள முனுசுவலசை கிராமத்தை சேர்ந்தவர் 42 வயதான முனியசாமி. முனியசாமி மது பழக்கத்திற்கு அடிமையானர்.
முனியசாமி வேலைக்கு செல்லாததால், அவரது மனைவி மல்லிகா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், 4 வயது பெண் குழந்தையும் 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
முனியசாமி மனைவி கூலி வேலைக்கு சென்று வரும் பணத்தை வாங்கி தினசரி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும், மது போதையில் வீட்டிற்கு வரும் முனியசாமி, தன் மனைவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் இந்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய காவல் துறையினர்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு இருவருக்கு இடையே தகராறு முற்றி போய் முனியசாமி மல்லிகாவில் முகத்தில் கடித்ததில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த மல்லிகா, குழந்தைகளை அம்மாவிட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இரவு முனியசாமி மது போதையில் தூங்கி கொண்டிருந்த போது தனது குடிசை வீட்டில் மண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் வீட்டிற்குள் மதுபோதையில் தூங்கி கொண்டிருந்த முனியசாமி கருகி உயிரிழந்தார் என காவல் துறை தெரிவிக்கிறது.
இரவு தனக்கும் தனது கணவருக்கு இடையே ஏற்பட்ட தகராரில் என்னை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி கதவை அடைத்து விட்டார். இதனால் நான் என் அம்மா வீட்டுக்கு சென்று விட்டதாகவும், காலையில் வந்து பார்க்கும் போது இரவு மண்ணெய் விளக்கு கவிழ்ந்து வீடு பற்றி எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தப்பி வர இயலாமல் தனது கணவர் தீயில் கருகி இறந்து விட்டதமாகவும் மல்லிகா, ஞாயிற்றுக் கிழமை காலை அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
முனியசாமி இறப்பில், சந்தேகம் இருப்பதாக காவல் துறையினருக்கு ஊர் மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்ப இடத்துக்கு வந்த காவல் துறையினர், மனைவி மல்லிகாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மல்லிகா தனது கணவரை மண்ணெய் ஊற்றி கொலை செய்ததாக ஓப்பு கொண்டதால் கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
கொலை செய்ததை ஒப்புக்கொண்ட மல்லிகா
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கேணிக்கரை காவலர் ஒருவர், மல்லிகாவுக்கு முனியசாமி தினமும் மது போதையில் பாலியல் கொடுத்து வந்துள்ளார், உடல் உறவுக்கு சம்மதிக்காவிட்டால் முரட்டு தனமாக அடித்து தாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
பல முறை மல்லிகா இது குறித்து தனது உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். ஆனால் கடந்த சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே பிரச்னை முற்றியதில் முனியசாமி மல்லிகாவின் கண்ணத்தில் கடித்துள்ளார்.
இதனால் மல்லிகா வலி தாங்க முடியாமல் அன்று இரவுவே முனியசாமியை வீட்டில் உள்ளே தூங்கி கொண்டிருந்த போது வீட்டை பூட்டி விட்டு தனது குடிசை வீட்டின் மீது மண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். இதில் மது போதையில் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த கணவர் உயிருடன் எரிந்து பலியானதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார் என காவலர் தெரிவித்தார்.
'குற்ற உணர்ச்சியுள்ள மன நிலை இருப்பார்'
இந்த நிகழ்வு குறித்து மன நல மருத்துவர் சிவ பாலன் பிபிசி தமிழிடம் பேசுகையில், இந்த பெண் தனது கணவன் மீது நீண்ட நாட்களாக இருந்து வந்த கோபத்தின் அடிப்படையில் நிதானம் இழந்து இந்த செயலை செய்து இருக்க கூடும்.
மல்லிகா நீண்ட நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்திருப்பார். உயிரிழந்த முனியசாமி மது பழக்கத்திற்கு அடிமையானதால் ஒரு குடும்பத் தலைவனாக எந்த ஒரு கடமையையும் செய்திருக்கமாட்டார். எனவே அந்த பெண் முழு பொறுப்பையும் ஏற்று குடும்பத்தை நடத்தி வந்திருப்பார்.
தான் இவ்வளவு குடும்ப பாரங்களை சுமந்தும் தொடர்ந்து தனது கணவர் கொடுமை செய்கிறாரே என்ற ஒரு விரகத்தியில் நிதானம் இழந்து இந்த கொலையை செய்திருப்பார். நிச்சயமாக நீண்ட நாள் திட்டமிட்டு இந்த கொலையை செய்திருக்க மாட்டார். ஆனால் ஏன் இப்படி செய்தோம் என்ற குற்ற உணர்ச்சியுள்ள மன நிலையில்தான் இப்போது இருப்பார் என்கிறார் மன நல மருத்துவர் சிவபாலன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :