You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி எப்போது? முடிவுகள் எப்போது வெளியாகும்? - தமிழக அரசியல் செய்திகள்
தமிழகத்தின் நடப்பு சட்டப்பேரவையான 15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம், 2021ஆம் ஆண்டு மே 23ம் தேதியுடன் முடிவடைகிறது.
2021ஆம் ஆண்டு மே 24ஆம் தேதிக்குள் 16வது சட்டப்பேரவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்குள் புதிய சட்டப்பேரவை பதவியேற்க வேண்டும்.
2016இல் நடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வென்றது. அ.இ.அ.தி.மு.க சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா தலைமையிலான அரசு மே 23, 2016 அன்று பதவியேற்றது. அதனால் மே 23, 2021ஆம் தேதியுடன் 15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிகிறது.
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
- தேர்தல் அறிவிக்கை - மார்ச் 12
- வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 19
- வேட்பு மனு பரிசீலனை - மார்ச் 20
- வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 22
- வாக்குப்பதிவு - ஏப்ரல் 6
- தேர்தல் முடிவுகள் - மே 2
காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இதே அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும்.
தமிழகத்தில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது?
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். கடந்த காலங்களைப் போல, இது ஒரே கட்டமாக நடக்கும்.
2016 தேர்தலில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக எழுந்த புகார்களால் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு 232 தொகுதிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட தேதியில் வாக்குப்பதிவு நடந்தது.
எந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரு கூட்டணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன.
திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி சமீபத்தில் அதிலிருந்து வெளியேறியுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. தேமுதிக இந்தக் கூட்டணியில் இருப்பது குறித்த அலுவல்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இரு கூட்டணிகளிலும் பல சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சரத்கு மாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அமைந்துள்ளதாக அறிவித்துள்ளன.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
தேர்தல் வெற்றியாளர் எவ்வாறு முடிவு செய்யப்படுவார்?
போட்டியிடும் வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
இரண்டு அல்லது அதற்கும் அதிகமான வேட்பாளர்கள் சம எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றால், அவர்கள் பெயர்கள் எழுதப்பட்ட சீட்டுக் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.
இத்தகைய சூழல் மறு வாக்கு எண்ணிக்கை, நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்டவற்றுக்கு இட்டுச் செல்லும்.
தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே சம்பந்தப்பட்ட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். இது பற்றி அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எந்த அளவுக்கு அறிந்து கொள்வது முக்கியமோ, அதை விட முக்கியம், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வாக்காளர்கள் அறிந்து கொள்வது அவசியம்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்ப்பது, சரிபார்ப்பது எப்படி?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்த்துக் கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தில் அல்லது செல்பேசி செயலியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
இணையம் மூலம் செய்ய இயலவில்லை என்றால் உங்கள் பகுதியில் நடக்கும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் அல்லது உங்கள் பகுதியின் தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாக சென்று அதற்கான விண்ணப்பத்தை வழங்கலாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 - முக்கிய வேட்பாளர்கள் யார்?
அதிமுக தரப்பில் தற்போதைய முதலமைச்சர் மற்றும் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிக கவனம் பெறும் வேட்பாளராக இருப்பார்.
அமமுக தரப்பில் தினகரன் முக்கிய வேட்பாளராக இருப்பார். சிறை தண்டனை பெற்றவர் என்பதால் வி.கே. சசிகலா அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் அதிக கவனம் பெறுபவர்களாக இருப்பர். திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்தத் தேர்தலில் போட்டியிட்டால் அவர்மீதும் அதிக கவனம் இருக்கும்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தேர்தலில் போட்டிடுவார்களா என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய கவனம் பெறும் தொகுதிகள் எவை?
முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்றே தெரிகிறது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடவே வாய்ப்பு அதிகம்.
ஜெயலலிதா மரணத்தால் காலியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக தொடங்கும் முன்னரே சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார் டிடிவி தினகரன்.
மு.கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதிக்கு 2019இல் நடந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பூண்டி கலைவாணன் வென்றார். திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இந்தத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் கடந்த இரு தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்றார். இம்முறையும் அவர் இதே தொகுதியைத் தெரிவு செய்யலாம்.
இதற்கு முன்பு ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக்கூடும் என்ற உறுதிப்படுத்தப்படாத செய்தியை தமிழக ஊடகங்கள் சில வெளியிட்டுள்ளன.
தேர்தல் நாளன்று அரசியல் கட்சியினர் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
தேர்தல் நடத்தை விதிகளின் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் உள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முடிவுகள் எப்போது வெளியாகும்?
வழக்கமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த மூன்றாவது நாள் தேர்தல் முடிவு வெளியாகும்.
ஒரு கட்டமாக அல்லாமல் பல கட்டமாக வாக்குப்பதிவு நடந்தால், கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த மூன்றாவது நாள் தேர்தல் முடிவு வெளியாகும்.
சென்ற தேர்தலின்போது தமிழகத்துடன் தேர்தல் நடந்த பிற மாநிலங்களுக்கான பல்வேறு கட்ட வாக்குப் பதிவுகளும் முடிந்தபின்னர், மே 13, 2011 அன்று முடிவுகள் வெளியாகின. அதுபோல இந்த முறை மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.
2016இல் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக மே,13 2016 அன்று நடந்தது. இதற்கான முடிவுகள் மே 16, 2016 அன்று வெளியாகின.
2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 13, 2011 அன்று நடந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: