தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்ப்பது எப்படி? வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது எப்படி?

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்த்துக் கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தில் அல்லது செல்பேசி செயலியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இணையம் மூலம் செய்ய இயலவில்லை என்றால் உங்கள் பகுதியில் நடக்கும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் அல்லது உங்கள் பகுதியின் தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாக சென்று அதற்கான விண்ணப்பத்தை வழங்கலாம்.

அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கும் முன்பு வாக்காளர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன என முதலில் பார்ப்போம்.

வாக்காளர் ஆவதற்கு என்னென்ன தகுதிகள்?

  • வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விரும்புபவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதி வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். எனவே நீங்கள் எந்த ஆண்டு உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விரும்புகிறீர்களோ, அந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உங்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
  • நீங்கள் எந்தத் தொகுதியில் வாக்காளராகச் சேர விரும்புகிறீர்களோ அந்த பகுதியிலேயே நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • வாக்காளராக உங்கள் பெயரை சேர்த்துக் கொள்வதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி?

இணையதளம் அல்லது செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது ஆகியவற்றை நீங்கள் செய்ய முடியும்.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவைகளுக்கான இணையதளமான https://www.nvsp.in என்ற இணைய தளத்தின் முகப்பில் உள்ள அல்லது VOTER HELPLINE செல்பேசி செயலியின் முகப்பு பக்கத்தில் உள்ள FORMS எனும் பக்கத்திற்கு சென்று இவற்றை நீங்கள் செய்யலாம்.

https://www.nvsp.in இணைதளம் அல்லது VOTER HELPLINE செயலி மூலம் நீங்கள் இவற்றை செய்ய உங்கள் செல்பேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை (Electoral Photo Identity Card - EPIC) எண் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு கணக்கை நீங்கள் உருவாக்க வேண்டும்.

பெயர் நீக்கம், வாக்காளர் அட்டையில் உள்ள விவரங்கள் திருத்தம் ஆகியவற்றுக்கு EPIC எண் அவசியம்.

  • வாக்காளராக சேர விரும்புபவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
  • ஒரு தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு நீங்கள் மாறினால் அப்பொழுதும் படிவம் 6 தான் உங்களுக்கு பொருந்தும். ஏனென்றால் வேறு தொகுதியில் ஏற்கனவே வாக்காளராக இருந்தாலும் இந்தத் தொகுதியில் நீங்கள் ஒரு புதிய வாக்காளராகவே சேர்க்கப்படுவீர்கள்.
  • வெளிநாடுவாழ் இந்தியர்கள் படிவம் 6A-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
  • உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும் உங்களுடைய ஆட்சேபனைகளை எழுப்புவதற்கும் படிவம் 7-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
  • உங்கள் பெயர், வயது, முகவரி, புகைப்படம், பிறந்த தேதி, தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அந்த தவறை உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
  • ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மட்டும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் படிவம் பூர்த்தி 8A-ஐ செய்ய வேண்டும்.

அரசின் இ-சேவை மையங்களிலும் இவற்றை நீங்கள் செய்யலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் போன்ற அரசு அலுவலர்களின் வளாகங்களிலோ தனியாகவோ இ-சேவை மையங்கள் அமைந்திருக்கும்.

வாக்காளர் அட்டை சரிபார்ப்பது எப்படி?

தமிழக அரசின் தேர்தல் இணையதளத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் (Final Publication of Electoral Roll) வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதில் உங்கள் மாவட்டம் மற்றும் உங்கள் தொகுதியின் பெயரை உள்ளீடு செய்தால், உங்கள் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளின் பட்டியலும் காட்டப்படும். சென்னை மாவட்ட வாக்காளர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தில் தனி பக்கம் உள்ளது.

உங்கள் வாக்குச்சாவடி எதுவோ, அதைத் தேர்வு செய்யவும். குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று நீங்கள் சரி பார்க்கலாம். அதில் தவறு இருந்தால் திருத்தும் கோரி விண்ணப்பிக்கலாம்.

தேசிய வாக்காளர் தேடல் இணையதளத்தில் உங்கள் பெயர், வயது, தாய்/ தந்தை/ கணவர் பெயர், மாநிலம்,மாவட்டம், தொகுதியின் பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்து உங்கள் வாக்காளர் அட்டை விவரத்தை விவரத்தை பார்க்க முடியும் .

வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்கள்

இணையம் அல்லது செல்பேசி வசதி இல்லாதவர்கள் அவ்வப்போது உங்கள் பகுதியில் நடத்தப்படும் வாக்காளர் முகாம்களில் இந்த படிவங்களை நேரில் சென்று நிரப்பலாம்.

படிவத்தை நிரப்பி புகைப்படம், முகவரிக்கான அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கி நீங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ, உங்கள் விவரங்களை திருத்தம் செய்யவோ முடியும்.

இந்த முகாம்கள் வழக்கமாக தேர்தல் சமயங்களில் வாக்குச்சாவடியாக எந்தக் கட்டடம் செயல்படுமோ, அங்கு நிகழும்.

பெரும்பாலும் இவை உங்கள் பகுதியில் இருக்கும் பள்ளிகளாகவே இருக்கும்.

இந்த முகாம்கள் நடக்கும் தேதி முன்கூட்டியே அரசால் அறிவிக்கப்படும்.

புதிதாக பெயர் சேர்த்தால் இந்த ஆண்டு வாக்களிக்க முடியுமா?

2021ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 20ஆம் தேதி ஏற்கனவே வெளியிட்டு விட்டது.

இதில் பெயர் இல்லாதவர்கள், முகவரி, தொகுதி மாற விரும்புபவர்கள், திருத்தும் செய்ய விரும்புபவர்கள் ஆகியோர் தேர்தலுக்கு முன் அவற்றுக்காக விண்ணப்பித்தால் அவர்கள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் இனி விண்ணப்பிப்பவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியல் ஆகியவற்றில் பெயர்கள் சேர்க்கப்பட்டவர்கள் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய பின்பு வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பிப்பவர்கள் அந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: