பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமிழ்நாட்டின் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு

rajesh das tamil nadu police

தமிழ்நாட்டின் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பிரிவு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதற்குப் பிறகு அவருக்கு கள்ளக்குறிச்சியிலும் விழுப்புரத்திலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் கவனித்துவந்தார்.

டெல்டா மாவட்ட நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்பும் நோக்கி ராஜேஷ் தாஸ் காரில் சென்றபோது, வழியில் மரியாதை நிமித்தம் சந்தித்த பெண் ஐ.பி.எஸ். அவருக்கு வணக்கம் செலுத்தினார். அவரை காரில் ஏற்றிக்கொண்ட ராஜேஷ் தாஸ், அவரிடம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அந்தப் பெண் அதிகாரி அதிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

அந்தக் கார் உளுந்தூர் பேட்டை அருகில் வந்தபோது, அங்கு சில காவல்துறை மூத்த அதிகாரிகள் நின்றிருந்தனர். கார் அங்கே நின்றதும், கதவைத் திறந்துகொண்டு வெளியில் ஓடிவந்த பெண் அதிகாரியை அங்கிருந்தவர்கள் வேறு காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு

பட மூலாதாரம், Getty Images

இதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 22ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து காவல்துறை தலைவரிடமும் உள்துறை செயலரிடமும் புகார் அளிப்பதற்காக அந்தப் பெண் அதிகாரி காரில் சென்னை நோக்கிசென்றபோது, செங்கல்பட்டு மாவட்டத்தில் அவரது காரை மறித்த மாவட்ட எஸ்.பி. கண்ணன், ராஜேஷ் தாஸிடம் போனில் பேசினால்தான் காரை அனுமதிப்பேன் என்றும் தான் சொல்லும்வரை காரை விட்டு இறங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதற்குப் பிறகு சென்னை வந்த அந்தப் பெண் அதிகாரி காவல்துறை தலைவரிடமும் உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏதுமில்லாமல் ஒரு நாள் கழிந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன.

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஒரு பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?" என்று கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பிறகு ராஜேஷ் தாஸ், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன், ராஜேஷ்தாசுக்காக பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சமரசம் பேச முயன்ற தனிப்பிரிவு ஆய்வாளர் ஒருவர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாரணைக் குழுவையும் தமிழக அரசு அமைத்தது.

ஆனால், ராஜேஷ் தாஸை இடைநீக்கம் செய்து, கைதுசெய்ய வேண்டுமென்று கோரி ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் கனிமொழி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான புகாரை சிபிசிஐடி பதிவுசெய்தது. சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 354, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: