You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா
புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்காலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். முன்னதாக தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பாஜக மாநில மைய குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் கல்யாணசுந்தரம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட பலர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
"2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்ற போது இந்தியாவில் சிறிய மாநிலமான புதுச்சேரியை இந்தியாவிற்கு முன் மாதிரியான மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காக 115 திட்டங்களை இந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த திட்டங்களை எல்லாம் தடுக்கும் வேலையை நாராயணசாமி செய்தார். ஒரே ஒரு முறை பாஜகவை ஆட்சியில் அமரவைத்துப் பாருங்கள். இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலமாக புதுச்சேரியை மாற்றிக் காட்டுகிறோம்," என்று உரையாற்றினார் அமித் ஷா.
"இங்கிருக்கும் காங்கிரஸ் ஆட்சி தானாக கவிந்துவிட்டது. அதிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக பாஜகவில் இணைகின்றனர். நாராயணசாமியுடன் இருப்பவர்களை அவர் புரிந்துகொள்ளாத காரணத்தினால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. அவருடைய தலைவரிடமே பொய் கூறியவர் நாராயணசாமி, அதே போன்று அவருடன் இருப்பவர்களிடமும் அதே பொய்யைக் கூறி வந்ததால், அனைவரும் பிரிந்து பாஜகவில் இணைந்துள்ளனர்," என்றார் அமித் ஷா.
தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆட்சி நடப்பதால் தான் அனைவரும் பாஜகவில் இணைகின்றனர். புதுச்சேரி மட்டுமின்றி மொத்த இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விடும்," எனத் தெரிவித்தார்.
"மிக முக்கியமான உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார்களா? நீதிமன்றம் உத்தரவைக் கூட மதிக்காமல் பாஜகவிற்குப் பயந்து இந்த தேர்தலை நடத்தவில்லை. நாராயணசாமி அவர்களே வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜகதான் ஆட்சி அமைக்கப் போகிறது. உங்களால் எங்கும் தப்பிக்க முடியாது," என்றார்.
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த ஹைதராபாத் மற்றும் பெங்களூரிலிருந்து பறக்கும் பாதை திட்டம் அமைக்கப்போவதாக அமித் ஷா பேசினார்.
"உலகின் உன்னதமான மூத்த தமிழில் மொழியில் பேச முடியாமல் என்பது வருத்தமாக இருக்கிறது. நான் தமிழ் மொழியில் பேசி இருந்தால் அதிக அளவில் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். குஜராத்தில் நரேந்திர மோதி முதல்வராக இருக்கும் போது தமிழ் பேச ஆசைப் பட்டேன், வேலை பளு காரணமாக கற்றுக்கொள்ள முடியவில்லை என்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மோதி கூறியிருந்தார்."
"தற்போது பிரதமரான பிறகும் தமிழ் கற்றுக்கொள்ளும் ஆசையை விடவில்லை. விரைவில் கற்றுக்கொண்டு தமிழில் பேசுவேன் என்று மோதி கூறுகிறார். அப்படிப்பட்ட உன்னதமான மொழியில் பேச நானும் விரும்புகிறேன்," என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
பிற செய்திகள்:
- ’9, 10, 11 வகுப்புத் தேர்வுகள் ரத்து முடிவு பத்து லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்’
- மலேசியாவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பெண் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்
- ஒரேயொரு டோஸ் போதும்: ஜான்சன் & ஜான்சனின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி
- "அரசின் அடிமைத்தனத்தில் இருந்து கோயில்கள் விடுதலை பெற வேண்டும்" - ஜக்கி வாசுதேவ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: