You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியாவில் நெகிழ்ச்சி சம்பவம்: 32 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பெண் குடும்பத்துடன் இணைந்தார்
சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு தம் குடும்பத்தாரைப் பிரிய நேர்ந்த ஒரு பெண்மணி, தற்போது அவர்களுடன் இணைந்துள்ளார்.
மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்களில் ஒன்றான லாபுவான் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா அடே (Salmah Adeh). தனது குடும்பத்துக்காக அதிக வருமானம் தேட முடிவு செய்த இவர் 32 ஆண்டுகளுக்கு முன்பு சரவாக் என்ற மாநிலத்துக்குச் சென்றுள்ளார்.
சரவாக் என்பது மலேசியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்று. சுமார் 25 லட்சம் பேர் அங்கு வசிக்கின்றனர்.
1988ஆம் ஆண்டு லாபுவானில் இருந்து படகு மூலம் சரவாக் மாநிலத்தில் உள்ள சிபு நகரைச் சென்றடைந்துள்ளார் சல்மா. ஆனால், அங்கு ஏதேனும் ஒரு பணியில் சேர்வதற்குள்ளாகவே அவரது தேசிய அடையாள அட்டையும் கைவசம் வைத்திருந்த ரொக்கப் பணமும் திருடு போனது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த அவர், சிபு மத்திய சந்தையில் உள்ள ஒரு காய்கறி வியாபாரியிடம் பணிக்குச் சேர்ந்துள்ளார். அவருக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தமது அன்றாடச் செலவுகளை ஈடுகட்டிய நிலையில் தங்குவதற்கு ஓர் இடமும் கிடைத்தது. ஆனால் இதுவும் அதிக காலம் நீடிக்கவில்லை.
சல்மாவைப் பணியமர்த்தியவர் திடீரென காலமானார். இதையடுத்து அதுவரை தாம் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலையை எதிர்கொண்டார் சல்மா.
ஒரே நாளில் தலைகீழாக மாறிப்போன வாழ்க்கை
ஒரே இரவில் வீடற்றவராக, தங்குமிடம் அற்றவராக வாழ்க்கை அவரது நிலையை புரட்டிப்போட்டது. இதையடுத்து காய்கறிச் சந்தையில் இருந்த மற்ற வியாபாரிகளுக்கு தாமே வலியச் சென்று சில உதவிகளைச் செய்யத் தொடங்கினார்.
வியாபாரிகளுக்கும் அப்படி ஒருவர் தேவைப்பட்டதால் சல்மாவுக்கு சிறுசிறு பணிகள் கிடைத்து வந்தன. உடனடியாக நிலைமை சீரடையாவிட்டாலும் போகப்போக எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்தி உள்ளார் சல்மா.
ஆனால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை என்பதுதான் சோகம். எனவே, சாலையோர நடைபாதையே அவரது வசிப்பிடமாக மாறியது.
சல்மா தங்கிய நடைபாதைகளும் அவற்றின் அளவும் மாறியதே தவிர அவரது வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் போகவில்லை.
குடும்பத்தைப் பிரிந்து, நல்ல வேலை கிடைக்காமல், மலேசிய பிரஜை என்பதை நிரூபிக்கத் தேவைப்படும் தேசிய அடையாள அட்டையைப் பறிகொடுத்து, தெருவில் வசித்து என கடந்த 32 ஆண்டுகள் தன் துயரத்தை யாருடனும் பங்குபோட முடியாமல், யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்தார் சல்மா.
செய்தியாளர் ஒருவர் வெளியிட்ட செய்தியால் இணைந்த குடும்பம்
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சல்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மிகவும் நலிவுற்ற நிலையில் காணப்பட்ட அவரை, ஒருவர் சிபு நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்கு சல்மாவின் நிலை குறித்து தெரியவந்தது. உடனடியாக ஊடகத்தில் அவரைப் பற்றி விரிவாக எழுதி உள்ளார். இதன்மூலம் சல்மாவின் உறவினர் ஒருவரை கண்டுபிடிக்க முடிந்தது.
எனினும், உடனடியாக சல்மாவால் தனது சொந்த மாநிலமான லாபுவானுக்கு செல்ல முடியவில்லை. மலேசியாவில் தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ளதால் மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு சார்பற்ற ஓர் அமைப்பும் சிபு சமூக நலத்துறையினரும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாக, பயணம் மேற்கொள்ள சிறப்பு அனுமதி பெற்று தற்போது தமது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார் சல்மா.
அவரது ஒரே மகளான நோர்டா சமான் தாயைப் பாசத்துடன் ஆரத் தழுவி வரவேற்றார். குடும்பத்தை மீட்க அதிக வருமானம் ஈட்டும் நோக்கத்துடன் சல்மா வீட்டை விட்டுக் கிளம்பியபோது மகள் நோர்டாவுக்கு 15 வயது. தற்போது 47 வயதில் மீண்டும் தன் தாயை நேரில் பார்க்கிறார்.
சல்மா கிளம்பிச் சென்ற பிறகு அவரைப் பற்றி எந்த விவரமும் அவரது குடும்பத்தாருக்குக் கிடைக்கவில்லை. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் சல்மாவைக் கண்டுபிடிக்க முடியாததால் ஓய்ந்து போயினர். எனினும் காலத்தின் சுழற்சியில் அவருக்கு தன் குடும்பத்தாருடன் இணையும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
"எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அம்மா சரவாக் கிளம்பிச் சென்றார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இதைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி," என்று நெகிழ்வுடன் கூறுகிறார் சல்மாவின் மகள் நோர்டா.
தனது வயோதிகக் காலத்தையாவது குடும்பத்தாருடன் நிம்மதியாகக் கழிக்க முடியுமென்ற நம்பிக்கையில் இருக்கிறார் சல்மா.
பிற செய்திகள்:
- பிஎஸ்எல்வி சி51: பிரதமர் மோதி உருவம் பொறிக்கப்பட்ட செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது
- "என்னால் தமிழ் மொழியை கற்க முடியவில்லை" - பிரதமர் நரேந்திர மோதி வருத்தம்
- ஒரேயொரு டோஸ் போதும்: ஜான்சன் & ஜான்சனின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி
- அறிவாலயத்தில் வாரிசுகளுக்காக குவிந்த மனுக்கள்: சேப்பாக்கம் அரசியலை சமாளிப்பாரா உதயநிதி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: