You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: கொளத்தூரில் ஸ்டாலின்; சேப்பாக்கத்தில் உதயநிதி - களநிலவரம் சொல்வது என்ன?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து அறிவாலய நிர்வாகிகள், விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதியும் களமிறங்க உள்ளனர். தேர்தல் களத்தில் முதல்முறையாகக் களமிறங்கும் உதயநிதிக்கு சேப்பாக்கம் தொகுதி சாதகமாக இருக்கிறதா?
ஏழு பேர் குழு
தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், விருப்ப மனுக்களைப் பெறுவதிலும் தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்வதிலும் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. தேர்தலுக்கு இன்னும் 35 நாள்களே இருப்பதால், வரக் கூடிய நாள்களில் தேர்தல் பிரசாரங்கள் களைகட்ட உள்ளன. சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்த கையோடு, பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகளிடம் அ.தி.மு.க தலைமை பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. இவ்விரு கட்சிகளுக்கும் ஒதுக்கக் கூடிய தொகுதி நிலவரங்களை விரைவில் வெளியிட உள்ளனர்.
அதேநேரம், தி.மு.க அணியில் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் அறிவாலய நிர்வாகிகள் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துவிட்டனர். தொடர்ந்து, தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். வரும் நாள்களில் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளிடம் இவர்கள் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர்.
ஸ்டாலின், உதயநிதிக்கு குவிந்த மனுக்கள்
அதேநேரம், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைக் கொடுப்பதில் தி.மு.கவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் தொடங்கிய விருப்ப மனு பெறும் நிகழ்வு, 28 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதில், உதயநிதியின் பெயரில் மட்டுமே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளதாகத் தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும், ஆர்வத்தின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பெயரில் பணம் கட்டுவது தி.மு.க நிர்வாகிகளின் வழக்கம். இந்தமுறை உதயநிதியின் பெயரில் பணம் கட்டுவதற்குக் கடும் போட்டியே நிலவியுள்ளது.
`` தி.மு.க தலைவர் பெயரிலும் இளைஞரணி செயலாளர் பெயரிலும் ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன. குறிப்பாக, கலைஞர் போட்டியிட்ட திருவாரூர், சேப்பாக்கம் தொகுதிகளிலும் ஸ்டாலினின் முந்தைய தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியிலும் உதயநிதி போட்டியிட வேண்டும் எனவும் அதிகப்படியான நிர்வாகிகள் பணம் கட்டியுள்ளனர்" என்கிறார் தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் மேலும் சில தகவல்களை தெரிவித்தார்.
வாரிசுகளின் ஆதிக்கம்
`` உதயநிதிக்கு மட்டும் என்றில்லாமல், மாவட்டங்களில் கோலோச்சும் முன்னாள் அமைச்சர்களின் மகன்களின் பெயரிலும் கட்சிக்காரர்கள் பணம் கட்டியுள்ளனர். அந்த வரிசையில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், கே.என்.நேருவின் மகன் அருண், ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ, பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி என வாரிசுகளுக்காக பணம் கட்டுவதும் அதிகரித்துள்ளது. தங்களுக்காக பணம் செலுத்த வந்தவர்கள், சம்பிரதாயமாக வாரிசுகளுக்கும் சேர்த்துப் பணம் கட்டிவிட்டனர். இதனை அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கட்டாயத்தின் பேரில் கட்டியதாகவே பார்க்கிறோம்" என்கிறார்.
மேலும், `` இதுவரையில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. விருப்ப மனுவை வாங்குவதற்கு நேரம், காலம் பார்க்காமல் வந்து கொண்டே இருந்தனர். அதற்கான ரசீது போட்டுவிட்டு வருவதற்குத் தாமதம் ஏற்படும். இருப்பினும், அதை வாங்குவதற்காக நிர்வாகிகள் நீண்டநேரம் காத்திருந்தனர். அதனை சமாளிக்க முடியாமல் அறிவாலய நிர்வாகிகள் திணறிவிட்டனர்" என்கிறார்.
சேப்பாக்கத்தில் ஒத்துழைப்பு கிடைக்குமா?
தொடர்ந்து, சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதிக்கு உள்ள சிக்கல் குறித்து விவரித்தார். அவர் பேசுகையில், `` கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தின் பின்னணியில் தலைவர் இருந்தாலும், இளைஞரணியின் மாவட்டப் பொறுப்பில் சிற்றரசு இருந்ததால் உதயநிதியின் பெயரே அடிபட்டது. இதனை ஏற்க விரும்பாத பகுதிக் கழக நிர்வாகிகள் சிலர் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும், சேப்பாக்கத்தில் இருந்துதான் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேற்கு மாவட்டத்துக்குட்பட்டு சேப்பாக்கம் தொகுதி வருவதால், அங்கு தேர்தல் நேரத்தில் எந்தளவுக்கு நிர்வாகிகளிடம் இருந்து உதயநிதிக்கு ஒத்துழைப்பு கிடைக்கப் போகிறது என்பது மிக முக்கியமான ஒன்று" என்கிறார்.
இதையடுத்து, சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசியவர், `` சிற்றரசு நியமிக்கப்பட்டதற்கு ஒரு சில நிர்வாகிகள் தொடக்கத்தில் எதிர்ப்பு காட்டினாலும், அடுத்து வந்த நாள்களில் ஏராளமான நலத்திட்டப் பணிகளைத் தொகுதிக்குள் அவர் முன்னெடுத்தார். கடந்த சில நாள்களுக்கு முன்புகூட 5,000 பேருக்கு உதயநிதி தலைமையில் நலப் பணிகளைச் செய்தார். அப்படியிருந்தும் சேப்பாக்கத்தில் உள்ள முன்னணி நிர்வாகி ஒருவர், சிற்றரசுவுக்கு தொடர் இடையூறுகளைச் செய்து வந்தார்.
முன்னாள் பகுதிச் செயலாளர் திடீர் வருகை
இதையடுத்து, சேப்பாக்கம் தொகுதியில் சீனியரான முன்னாள் பகுதிச் செயலாளர் சுரேஷ்குமாரை, ஆக்டிவ் வரிசையில் சிற்றரசு கொண்டு வந்தார். கடந்த பத்தாண்டுகளாகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் சுரேஷ்குமார் ஒதுங்கியிருந்தார். அவரது திடீர் வருகையை அதிருப்தி அணியினர் எதிர்பார்க்கவில்லை.
உதயநிதி ஏற்பாட்டின் பேரிலேயே ஸ்டாலினை சுரேஷ்குமார் சந்தித்தார். தொடர்ந்து, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிக் கிடக்கும் சீனியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. உதயநிதி நிற்பதால் நட்சத்திர அந்தஸ்துள்ள தொகுதியாக சேப்பாக்கம் மாறும். எனவே, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி வெற்றி பெறுவார்" என்கிறார்.
சேப்பாக்கம் நிலவரம்
``சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியைப் பொறுத்தவரையில் தி.மு.கவுக்கு சாதகமுள்ள தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. 1996, 2001, 2006 எனத் தொடர்ந்து இந்தத் தொகுதியில் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார். 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க சார்பில் போட்டியிட்டு ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார். தொகுதியில் சிறுபான்மையினர் நிரம்பியிருப்பதும் தொடர்ந்து தி.மு.கவை வெற்றி பெறவைத்த தொகுதியாகவும் இருப்பதால் சேப்பாக்கத்தை நம்பிக் களமிறங்குகிறார் உதயநிதி" என்கின்றனர் இளைஞரணி நிர்வாகிகள் சிலர்.
சேப்பாக்கம் தொகுதி நிலவரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், `` இளைஞரணியில் தலைவர் ஸ்டாலின் இருந்தபோது மேற்கொண்ட பணிகளைப் போலவே உதயநிதியும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அதனால், தமிழகத்தில் போட்டி நிரம்பிய அணியாக இளைஞரணி மாறிவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான கூட்டம் கூடுகிறது. எனவே, இந்த இயக்கம் தொய்வில்லாமல் செல்லும் என்ற நம்பிக்கை அடுத்த தலைமுறைக்கு வந்துவிட்டது. தலைமைப் பண்புடன் அனைவரையும் அவர் அணுகுவதால் இயக்கம் மேலும் வலுவடையும்" என்கிறார்.
தனிப்பட்ட போட்டி அல்ல
மேற்கு மாவட்டத்தில் நிலவும் அதிருப்தி குறித்துக் கேட்டபோது, `` மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு வந்தபோது ஒரு சிலர் அதிருப்தி தெரிவித்தனர். காரணம், `அந்தப் பணியை எங்களுக்குக் கொடுத்திருந்தால் சிறப்பாகச் செய்திருப்போம்' எனக் கருதியதுதான் காரணம். இது பணி செய்வதில் ஏற்பட்ட போட்டிதானே தவிர, தனிப்பட்ட போட்டி என எதுவும் இல்லை. சிற்றரசு வந்த பிறகு மாவட்டத்தில் கட்சிப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் உதயநிதி பிரசாரம் செய்யவிருப்பதால், அவர் போட்டியிடும் தொகுதியை நிர்வாகிகளே பார்த்துக் கொள்கின்றனர். இந்தமுறை ஆளும்கட்சி, பா.ஜ.க எனப் பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்ளும் அளவுக்கு இளைஞரணிக்கு வலு உள்ளது. சேப்பாக்கத்தில் உதயநிதி போட்டியிடுவதால் அந்தத் தொகுதிக்கு முக்கியத்துவம் வந்துவிடும்" என்கிறார்.
தி.மு.கவுக்கு பலமா?
தேர்தலில் உதயநிதி களமிறங்குவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் என்.அசோகன், `` சரியோ.. தவறோ.. வாரிசு அரசியல் தமிழ்நாட்டில் ஏற்கப்பட்டுவிட்டது. அது பற்றிய விவாதம் இங்கே தேவையில்லை. உதயநிதி அரசியலுக்குள் நுழைந்தபோது இருந்த முணுமுணுப்புகள் கட்சிக்குள் இப்போது இல்லை. வெற்றி தோல்விகளுக்கும் இந்த இளைஞரை யாரும் பொறுப்பாக்கப் போவதும் இல்லை. மாநிலம் முழுக்க பிரசாரம் செல்வது என்பது கட்சிக்குள் ஒருங்கிணைப்பை வலுவாக்கும். அந்த வகையில் உதயநிதி சிறப்பாகப் பணியாற்றுவதாகவே சொல்லமுடியும்" என்கிறார்.
மேலும், `` கட்சித் தொண்டர்களிடையே அவரால் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொள்ள முயன்றிருக்கிறது. இளைஞர்களிடையே ஓர் இளைஞராக அவரை உருவாக்கித் திணித்துள்ளது திமுக. அவர் இதுவரை சொதப்பாமல்தான் செயல்படுகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு அவர் விருப்ப மனு அளித்திருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஓரளவுக்கு சமநிலை கொண்ட இளைஞராக அவர் தோற்றம் தருகிறார். தன்னுடைய இந்த மனநிலையை அவர் தொடர்ந்து நீட்டிக்கச் செய்வாராகில் தி.மு.கவுக்கு பலமே" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: