இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி51: நரேந்திர மோதி உருவம் பொறிக்கப்பட்ட செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது

பட மூலாதாரம், DD
பிரேசிலின் அமேசானியா 1 உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் திட்டமிட்டபடி, இன்று (பிப்ரவரி 28, ஞாற்றுக்கிழமை) காலை 10:24 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி51 ஏவூர்தி விண்ணில் சீறிப்பாய்ந்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவூர்தியே, இந்த ஆண்டு இந்தியா செயல்படுத்திய முதல் விண்வெளி திட்டமாகும்.

பட மூலாதாரம், ISRO
இந்த ஏவூர்தி டி.எல் என்ற ரகத்தை சேர்ந்தது. இந்த ரக ஏவூர்திகளை இந்தியா இதுவரை இரு முறை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறது. இன்று ஏவப்பட்டதையும் சேர்த்தால் மூன்றாவது முறை.
இந்த ஏவூர்தியில் ஒரு பிரேசில் நாட்டு செயற்கைக்கோள் உள்பட 19 செயற்கைகோள்கள் இருக்கின்றன. ஏவூர்தி பூமியில் இருந்து புறப்பட்டு 1 மணி 51 நிமிடம் 32 நொடி முதல் 1 மணி நேரம் 55 நிமிடம் 7 நொடிக்குள் எல்லா செயற்கைக்கோள்களும் தங்களின் சுற்று வட்டப் பாதையில் விடுவிக்கப்படும் என இஸ்ரோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா ஏவும் 53-வது பி.எஸ்.எல்.வி திட்டம் இது. இந்த திட்டம் தான் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் என்கிற இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தின் கீழ் ஏவப்படும் முதல் ஏவூர்தி.
இந்த திட்டத்தை அமெரிக்காவின் ஸ்பேஸ் ஃப்ளைட் என்கிற நிறுவனத்தோடு நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.இ.எல்) என்கிற நிறுவனம் வணிக ஏற்பாடுகளைச் செய்து கொண்டு ஏவுகிறது.

பட மூலாதாரம், ISRO
637 கிலோ எடை கொண்ட அமேசானியா செயற்கைக்கோள், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் என்கிற அமைப்பின் பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள். காடழிப்பைக் கண்காணிக்க இது உதவும் என இஸ்ரோவின் இணையத்தளத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த செயற்கைக்கோளின் வாழ்நாள் நான்கு ஆண்டுகளுக்கும் குறைவு.
மீதமுள்ள 18 செயற்கைக் கோள்களில் 3 செயற்கைக் கோள்கள் இந்தியாவின் கல்வி நிலையங்களுக்கு சொந்தமானது. அவற்றில், ஒரு செயற்கைக்கோள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. மீதமுள்ள 14 செயற்கைக் கோள்களும் என்.எஸ்.ஐ.எல் நிறுவனத்தின் தரப்பில் ஏவப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த செயற்கைக் கோள்களில் 25,000 இந்தியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல, செயற்கைக்கோள் ஒன்றின் மேல் பகுதியில் பிரதமர் நரேந்திர மோதியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், பகவத் கீதையின் வாசகமும் அனுப்பப்படுவதாக அவற்றை வடிவமைத்த சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- அறிவாலயத்தில் வாரிசுகளுக்காக குவிந்த மனுக்கள்: சேப்பாக்கம் அரசியலை சமாளிப்பாரா உதயநிதி?
- ஒரேயொரு டோஸ் போதும்: ஜான்சன் & ஜான்சனின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி
- "அரசின் அடிமைத்தனத்தில் இருந்து கோயில்கள் விடுதலை பெற வேண்டும்" - ஜக்கி வாசுதேவ்
- "வேலை கொடுங்கள் மோதி" - ட்விட்டரில் வேலை கேட்கும் இந்திய இளைஞர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












