You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசிய பள்ளிப் பாடப்புத்தகத்தில் பெரியார் பற்றிய குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள்
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து
மலேசியாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் தந்தை பெரியாரைப் பற்றி சில தகவல்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அப்பகுதியை நீக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் உள்ளிட்ட சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெரியார் பற்றிய குறிப்புகளில் எந்தத் தவறும் இல்லை என்றும் பாடப்புத்தகத்தில் இருந்து அவற்றை நீக்கக்கூடாது என்றும் மலேசிய திராவிடர் கழகம் உள்ளிட்ட மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது.
மலேசிய தமிழ்ப் பள்ளிகள்
மலேசியாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பள்ளியில் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் 'செம்மொழி சிற்பிகள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதில் வீரமாமுனிவர், பெருஞ்சித்திரனார், தந்தை பெரியார் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் புத்தகம் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து மலேசிய இந்து சங்கமும் மற்ற சமய அமைப்புகளும் திடீரென இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான், அண்மையில் மலேசிய கல்வி அமைச்சின் துணை அமைச்சரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளார். இந்து சமயத்தை மறைமுகமாக எதிர்த்து, இந்துக்களுக்குச் சொந்தமான தமிழ் மொழியை கையகப்படுத்த ஒருதரப்பு முயற்சிப்பதாக அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது சாடினார்.
இந்துக்கள் சொந்த மொழியை வைத்தே தங்கள் சமயத்தை மெல்ல அழித்துக்கொள்வதை இந்து சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
"இறையாண்மையைப் போற்றும் மலேசியத் திருநாட்டில் இந்து சமயத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவர்களின் சித்திரத்தையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் பாடத்திட்டத்தில் இணைப்பது என்பது மிகக் கடுமையாகப் பார்க்கவேண்டிய ஒரு விஷயமாகும். 6ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஈ.வெ. ராமசாமி, அன்னை தெரேசா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், காவி உடையில் காட்சி அளிக்கும் சுவாமி விவேகானந்தர் வெள்ளை உடையில் இருப்பது போன்று காட்டப்பட்டதன் உள்நோக்கம்தான் என்ன?" என்று மோகன் ஷான் கேள்வி எழுப்பினார்.
சில மதத்தினர் தங்களின் சுயநலத்திற்காக இந்து சமயத்தை எதிர்க்கும்போது இந்துக்களையும் தமிழையும் தற்காக்கும் கடமை இந்து சங்கத்திற்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பு
இந்நிலையில் 21ஆம் நூற்றாண்டிலும் எதிர்காலத்திலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் மாணவமணிகளை அதற்குத் தயார்படுத்தப் போகிறோமா அல்லது ஒரு சமய இயக்கத்தின் தலைவர் விடுத்துள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத அறிக்கைக்கு செவிசாய்க்கப் போகிறோமா என்பதை இந்திய சமுதாயமும் இந்து சமய உடன்பிறப்புகளும்தான் முடிவு செய்யவேண்டும் என மலேசிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொன்.பொன்வாசகம் தெரிவித்துள்ளார்.
மலேசிய தமிழ்ப் பள்ளிகளில் இந்து சமய புறக்கணிப்பும் திராவிடக் கொள்கையைப் பரப்பும் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளதாக கல்வி அமைச்சின் பாடத்திட்ட அதிகாரிகளுக்கு மலேசிய இந்து சங்கத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள திராவிடர் கழகம், அரசாங்க அதிகாரிகளையே மிரட்டுவது அறியாமை என்று விமர்சித்துள்ளது.
"மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் இந்துக்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைச் சார்ந்த பிள்ளைகளும் கல்வி பயில்கின்றனர். இப்பிள்ளைகள் அனைவரும் சமயத்தால் வேறுபட்டிருந்தாலும் இனத்தால், மொழியால் தமிழ்ப் பிள்ளைகள். இத்தகைய சிக்கல் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் இருப்பதால் அங்கு இந்து சமயம் மட்டும் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவது முறையா? நியாயமா?" என பொன். பொன்வாசகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
மலேசிய பாடப்புத்தகத்தில் பெரியார் குறித்து என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் 6ஆம் வகுப்புக்கான பாடப்புத்தகத்தில் பெரியார் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"20ஆம் நூற்றாண்டில் போற்றத்தக்கவர்களுள் தந்தை பெரியாரும் ஒருவர். அவர் தமிழ் மொழியும் தமிழ் இனமும் பெருமைப்படும் அளவுக்கு பல அரிய செயல்களை ஆற்றியவர்.
இவர்போல் இன்னொருவர் இனி பிறக்கமுடியாது என்று கூறுமளவுக்குப் பெரும் பங்காற்றியவர் தந்தை பெரியார். இவரது இயற்பெயர் ஈ.வெ. ராமசாமி. இவர்தான் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தார். மக்களிடையே பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற உணர்வுகளை விலக்கப் பாடுபட்டார். சமூகத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் கவலைப்பட்டார்.
தமிழர்கள் மதுவருந்தி போதை தெளியாமல் இருக்கும் நிலையை எண்ணித் தமது தோட்டத்தில் இருந்த ஆயிரக்கணக்கான கள் இறக்கும் தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். இந்திய தேசத்தந்தை காந்தியடிகள் இதற்காக அவரைப் பெரிதும் பாராட்டினார். தாமே முன் உதாரணமாக இருந்து தமிழர்களின் விடியலுக்காக அயராமல் பாடுபட்ட பெரியார், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பெரும் புரட்சியை உண்டாக்கினார்."
இவ்வாறு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
`சமுதாயத்தைப் பிளவுபடுத்த வேண்டாம்`
இதற்கிடையே தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைப் புத்தாண்டு என்ற சர்ச்சையும் மலேசியத் தமிழர்கள் மத்தியில் வெடித்துள்ளது. இதுதொடர்பாகவும் காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மதம் என்ற போர்வையில் யாரும் மதம்பிடித்து நடந்துகொள்ளக் கூடாது என மலேசிய மனிதவள அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத்தலைவருமான திரு. சரவணன் தெரிவித்துள்ளார்.
தனித்தனிக் குழுக்களாக இயங்கி சமுதாயத்தை யாரும் பிளவுபடுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
"தமிழ்ப் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்து தந்தை பெரியாரின் தகவல்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் மலேசிய தமிழ் மொழி காப்பகம் பொங்கல் கையேடுகளை பள்ளிகளில் விநியோகிக்கக்கூடாது என்றும் மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு கல்வி அமைச்சு ஒப்புக்கொண்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், இவ்விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு இந்த விவகாத்தை பெரிதாக்க வேண்டாம்," என்று அமைச்சர் சரவணன் கூறியுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டா, சித்திரைப் புத்தாண்டா என்ற சர்ச்சை அதிகரித்துக்கொண்டே வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்விரு புத்தாண்டுக்கும் மலேசியத் தமிழர்களுக்கு விடுமுறை உள்ளதா என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
கல்வியாளர்கள் ஒப்புக்கொண்ட உண்மைக்கு திடீர் எதிர்ப்பு ஏன்?
இதற்கிடையே தந்தை பெரியார் தமிழுக்குத் தொண்டு செய்திருப்பதை யாரும் மறுக்க இயலாது என்று மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளரான அன்பழகன் தெரிவித்துள்ளார்.
1929, 1954ஆம் ஆண்டுகளில் தந்தை பெரியாரின் வருகைக்குப் பிறகே மலேசியத் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"அச்சமயம் மலேசியாவில் இந்தியர்கள் அதிகம் காணப்படும் தோட்டப்புறங்கள், நகர்ப்புறங்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். ஏராளமான மக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த வருகையின் பலனாக இங்கு தொழிற்சங்க, அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.
நான் இடைநிலைப் பள்ளியில் படித்தபோது எனது வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 'இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மலேசிய இந்தியர்களின் அரசியல் செயல்பாடு' என்ற தலைப்பின் கீழ் பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இக்கூற்றுகள் வரலாற்று ஆசிரியர்கள், கல்வியாளர்களால் ஏற்கப்பட்டவை.
தந்தை பெரியாரின் வருகைக்குப் பிறகுதான் மலேசியாவில் சுயமரியதை இயக்கங்கள் பரவின என்பதையும் வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் பதிவு செய்துள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. ஆனால் திடீரென ஒருதரப்பினர் பெரியார் குறித்து பாடப்புத்தகங்களில் தகவல் ஏதும் இடம்பெறக்கூடாது என்று வலியுறுத்துவது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்புகிறார் அன்பழகன்.
`மலேசிய தமிழறிஞர்கள் பற்றிய குறிப்புகள் ஏன் இடம்பெறவில்லை?`
இதற்கிடையே தந்தை பெரியார் குறித்து பாடப்புத்தகத்தில் தகவல்கள் இடம்பெறுவதை எதிர்க்கவில்லை என்றும், அதேசமயம் மலேசியாவில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட மலேசியத் தமிழ் அறிஞர்கள் குறித்து ஏன் எந்தவிதத் தகவல்களும் பாடப்புத்தகத்தில் இடம்பெறவில்லை என்ற கேள்வியையும் ஒருதரப்பினர் எழுப்பி உள்ளனர்.
இது குறித்து வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி கட்டுரை ஒன்றில் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
"மலேசிய தமிழ் மாணவர்கள் உள்நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியது முக்கியம். 250 ஆண்டுகளுக்கும் மேல் மலேசியாவில் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக வலியுறுத்துகிறோம். 200 ஆண்டுகளுக்கு மேல் மலேசியாவில் தமிழ்க் கல்வி உள்ளது என்றும் பெருமைப்படுகிறோம். உலகம் முழுவதும் தமிழர்கள் உள்ளனர். ஆனால், மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கின்றனர் என்று அறிஞர் அண்ணா கூறினார் என மேடைகளில் முழங்குகிறோம். ஆனால் இவ்வளவு பெருமைகள் கொண்ட மலேசியத் தமிழனுக்கு முன்னுதாரணமாகக் காட்ட மலேசிய மண்ணில் வாழ்ந்து பிரிந்த ஒருவர் கூட இல்லையா?
மலேசியக் குழந்தைகளுக்கு வருங்கால சந்ததியினருக்கு அடையாளம் காட்ட அயல்தேச அறிஞர்கள் மட்டும்தான் உள்ளனரா? மலேசிய மண்ணில் தமிழ்ச் சேவை ஆற்றிய பெருமகனார்களை தமிழ்ப் பாடப்புத்தகத்தின் வழி அறிமுகம் செய்யாமல் தனியாக, பிரத்யேக வகுப்பு நடத்தியா சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?" என்று பல கேள்விகளை அடுக்கியுள்ளார் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி.
தந்தை பெரியார்தான் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார் என்பதையும் தம்மால் ஏற்க இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: