You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தா. பாண்டியன் காலமானார்: கம்யூனிஸ்டுகளின் குரலாக தொடர்ந்து ஒலித்தவர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தா. பாண்டியன் சிறுநீரகக் கோளாறால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இருந்தபோதும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. வியாழக்கிழமையன்று மாலையில் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வெள்ளிக்கிழமை காலை 10.05 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர் பணி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது - நவமணி தம்பதியின் நான்காவது மகனாக 1932ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பிறந்தார் தா. பாண்டியன். இவரது பெற்றோர் ஆசிரியர்களாக இருந்துவந்தனர். காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் துவக்கக் கல்வியையும் அதற்குப் பிறகு உசிலம்பட்டி வாரிய உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் பெற்றார்.
இதற்குப் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்தார். இதற்குப் பிறகு அதே கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர தொண்டராக இணைந்தார். கட்சியின் கலை - இலக்கியப் பிரிவான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராகவும் அவர் பணியாற்றினார்.
இதற்குப் பிறகு குடும்பத்தினர் பார்த்துவைத்த ஜாய்ஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். டேவிட் ஜவஹர் என்ற மகனும் அருணா, பிரேமா ஆகிய மகள்களும் பிறந்தனர். சென்னைக்கு வந்த தா. பாண்டியன், சட்டமும் பயின்றார். இந்த காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கினார் அவர்.
ஜனசக்தியில் எழுதுவது, பொதுக்கூட்டம் எனத் தீவிரமாக இயங்கினார் தா.பா. முழு நேர ஊழியர்களுக்கு கட்சி வழங்கும் ஊதியம் போதாத நிலையில், அவரது மனைவி காரைக்குடியில் பணியாற்றி அனுப்பிய சம்பளம் பேருதவியாக இருந்தது.
ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி
இதற்குப் பிறகு, 1989ல் மொஹித் சென், கல்யாணசுந்தரம், டாங்கே, சு. பழனிச்சாமி ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கிய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டார் தா. பாண்டியன். இந்த காலகட்டத்தில் காங்கிரசிற்கு நெருக்கமானவராக இருந்தார். ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும்போதுதான் 1989, 1991 என இரு முறை வடசென்னைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வுசெய்யப்பட்டார்.
ராஜிவ் காந்தி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு வரும்போது அவர்களது பேச்சுகளை தா. பாண்டியனே மொழிபெயர்ப்பார். 1991 மே 21ஆம் தேதி ஸ்ரீ பெரும்புதூரில் ராஜிவ் காந்தி பேச வேண்டிய கூட்டத்திலும் இவரே மொழிபெயர்ப்பாளராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். ஆனால், குண்டுவெடிப்பில் ராஜிவ் கொல்லப்பட, தா. பாண்டியனும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
2005ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்ட தா. பாண்டியன் மூன்று முறை தொடர்ச்சியாக அந்தப் பொறுப்பை வகித்தார். கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் இருந்தார். கட்சியின் இதழான ஜனசக்தியில் 16 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தார் தா. பாண்டியன்.
ராஜிவ் காந்தி மரணத்திற்குப் பிறகு கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்த தா. பாண்டியன், ஈழப் போரின் கடைசி நாட்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். அதேபோல, பெரும் எதிர்ப்புப் போராட்டத்தைச் சந்தித்த கூடங்குளம் அணு உலை திட்டத்தை இவர் ஆதரித்தார்.
உடல் நலக்குறைவு
தா. பாண்டியன் மாநிலச் செயலாளராக இருந்தபோதுதான் சென்னை தியாகராய நகரில் உள்ள மாநிலத் தலைமையகமான பாலன் இல்லம் இடிக்கப்பட்டு, மிகப் பெரிய எட்டு மாடிக் கட்டடம் கட்டப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நிலையிலும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த 18ஆம் தேதி மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில்கூட பங்கேற்றுப் பேசினார் தா. பாண்டியன். அதற்குப் பிறகு ஒரு திருமண நிகழ்விலும்கூட அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில்தான், பிப்ரவரி 24ஆம் தேதியன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தா. பாண்டியன். ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்தே அவரது உடல்நிலை தொடர்ந்து பின்னடைவைக் கண்டுவந்தது.
தா. பாண்டியனின் உடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு சனிக்கிழமையன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடக்கவுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: